திங்கள், 7 ஜனவரி, 2019

தன்னாட்சி மாநாடு - பிப்ரவரி 3.. நீட் போன்று கனிம வளத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்

பாலசிங் பா.ச. : தன்னாட்சி மாநாடு - பிப்ரவரி 3, அண்ணாவின் 50வது நினைவு
நாள்.
சுழலியல் பகுதி முன்னேடுப்பு பச்சைத் தமிழகம் கட்சி. மாநாடு முன்னேடுப்பு தன்னாட்சி தமிழகம்
இந்திய வரைபடத்தை பார்த்திருப்போம். மாநிலங்களின் எல்லைகள் அழகாக பிரிக்கப்பட்டிருக்கும். நம் தமிழ்நாட்டை காணும்போது, இது நம் மாநிலம். இந்த மாநிலத்துக்கு நாமே சொந்தக்காரர்கள். இந்த மாநிலத்தில் உள்ள அத்தனை வளங்களும் நமக்கும், நம் வருங்காலத்திற்கும் சொந்தம், நாமே பொறுப்பு என்றே இயல்பாக தோன்றும். அதுதான் பொதுபுத்தியும் கூட.
ஆனால் உண்மையில் நீங்கள் பார்க்கும் மாநில எல்லைகள் உண்மையான எல்லைகள் கிடையாது. அந்த மாநிலத்தை நீங்கள் உரிமை கோரவும் முடியாது. இயற்கை வளங்களை உங்களுக்கு சொந்தம் கொண்டாடி, வருங்காலத்திற்கு சேமிக்கவும் முடியாது. ஏனெனில், ஆற்று மணலை தவிர மற்ற அத்தனை கனிம வளங்களும் ஒன்றிய அரசாங்கத்திடமே உள்ளது. ஒன்றிய அரசாங்கத்திற்கே சொந்தம்.

அதைத்தான் இன்று சட்டசபையிலும் தமிழ்நாடு கனிம வளத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ திரு.மனோ தங்கராஜ் அவர்கள், குமரி மாவட்டத்தின் மலைகளை உடைத்து கேரளாவுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு மாநில கனிமவளத் துறை அமைச்சர் அப்படி எடுத்துச் செல்வது சட்டத்துக்கு உட்பட்டே நடக்கிறது என்று கூறுகிறார். உண்மைதான்.
சட்டம் இப்படி எடுத்துச் செல்வதை தடை செய்வதில்லை. கேரளாவுக்கு மட்டுமில்லை, குமரியின் மொத்த மலையையும் குடைந்து, துடைத்து இந்தியாவின் மொத்த தேவைக்கும் அல்லது உலகத்தின் தேவைக்கும் எடுத்துச் சென்றாலும் அதில் குற்றம் ஏதும் இல்லை.
நீட் தேர்வில் நாம் பார்த்த ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல் தொகுப்புபடி கனிம வளங்கள் அத்தனையும், ஆற்று மணலை தவிர, ஒன்றிய பட்டியலில் உள்ளது. கனிம வளங்களை காக்கும் சட்டப்படி.
எழுப்பப்பட்ட குமரி பிரச்சனையில் நியாயப்படி கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அரசாங்கமோ, எம்எல்ஏ மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார், அந்த வழக்கு முடிவு வந்த பிறகு அரசு ஒரு முடிவு எடுக்கும் என்று கூறுகிறார். அந்த வழக்கின் முடிவு தான் நமக்குத் தெரியுமே. தற்போதைய இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய சூழலியல் சட்டம் 1986 ஆம் படி ஒன்றிய அரசாங்கம் ஒரு மாநிலத்திலிருந்து எந்த கனிம வளங்களையும் எடுக்கலாம். அதற்கு மாநில அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. ஆகையாலேயே மந்திரி அவர்கள் சட்டத்தில் ஜெயித்து வாருங்கள். பின்பு பார்ப்போம் என்று கூறுகிறார். அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பார்போம் கதைதான்.
இந்த வழக்கில் நிச்சயம் ஜெயிக்க முடியாது. ஏனெனில் சட்டமே இந்த குற்றத்திற்கு உடந்தை. குற்றமா? அவர்கள் பாதையில் இது வளர்ச்சி தானே.
வளத்தை காக்க ஒரு காவலாளிக்கு இரு காவலாளிகள் இருந்தால் இயற்கை வளத்தை காத்துக் கொள்ளலாம் என்றுதான் இதுவரையும் தமிழ்நாடு அரசாங்கங்கள், தமிழ்நாடு அறிவுத்தளமும் ஒன்றிய அரசாங்கத்திடம் கனிமவளத்துறை இருப்பதை கண்டும் காணாமல் இருந்திருக்கக்கூடும். ஆனால் காவலாளிகளே பயிரை மேய்யும் இந்த காலத்தில் கனிம வளத்தை ஒன்றிய அரசாங்கத்திடம் விட்டு வைத்திருப்பது சரியா என்று பகுத்தாய்வு செய்ய வேண்டியுள்ளது.
இதில் நீட் போன்று கனிம வளத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள் என்று ஒற்றை வரியில் கேட்கவும் முடியாது. ஆற்று மணல் கொள்ளையைத்தான் காணுகிறோமே, எத்தனை கொலைகள். என் ஊரிலும் திருட்டு உண்டு.
இந்த சூழலில் எப்படியான மாற்றத்தை நாம் முன்வைக்க வேண்டும்?
நம் வளத்தை காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் வளத்தின் மீது நம் காவல் கண்கள் நிலை பெற என்ன செய்ய வேண்டும்?
தன்னாட்சி பெற்றால் வளத்தை காத்துக் கொள்ள முடியுமா?
தன்னாட்சியில் பாதகங்கள் உண்டா?
ஆற்று மணலை போல் அனைத்து வளங்களையும் விற்று விடுவோமா?
சட்ட ஷரத்தில் என்ன மாற்றம் வேண்டும்? ஏன் வேண்டும்?
அப்பப்பா எத்தனை கேள்விகள். விடை இல்லா கேள்விகள் இல்லை.தேடப்படாத கேள்விகள், காணப்படாத விடைகள்.
வாருங்கள் கேள்வி தேடுவோம், விடைகள் காணுவோம். பிப்.3 தன்னாட்சி மாநாட்டில் பேசுவோம்..

கருத்துகள் இல்லை: