வியாழன், 21 செப்டம்பர், 2017

கட்டண குறைப்பு Jio வுக்கு லாபம் ,,,, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ... இழப்பு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி


அழைப்புக் கட்டணம் குறைப்பு: லாபம் யாருக்கு?நெட்வொர்க் இணைப்புகளுக்கான அழைப்புக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர் பிற நெட்வொர்க் வாடிக்கையாளருக்கு அழைப்பு விடுக்கும் போது, இணைப்புச் சேவைக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து வோடஃபோனுக்கு கால் செய்யும் போது ஏர்டெல் நிறுவனம் வோடஃபோனுக்கு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இக்கட்டணத்தை டிராய் அமைப்பு 6 பைசாவாகக் குறைத்து நிர்ணயித்தது. மேலும், 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இக்கட்டணமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அழைப்பு இணைப்புக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அழைப்பு இணைப்புக் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டால் இந்நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும். ஏனெனில், மேற்கூறிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் மொத்த மொபைல் வாடிக்கையாளர்களில் சுமார் 60 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளன. இந்த நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தான் அதிகளவிலான அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அழைப்பு இணைப்புக் கட்டணத்தைக் குறைப்பதாலோ அல்லது ரத்து செய்வதாலோ பயன்பெறப்போவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான். மேலும், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: