செவ்வாய், 19 செப்டம்பர், 2017

தினகரன் :திமுகவோடு கை கோர்க்க முடியாது ..எப்போது தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம்

எம்.திலீபன் |: ‘ஜனநாயகப்
படுகொலைக்கு கவர்னரும் துணை போகிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.  ;எப்படியும் ஆட்சியைக் கலைப்பேன், எடப்பாடியை விரைவில் வீட்டுக்கு அனுப்புவேன்’ என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.. தமிழகத்தில் உள்ள பரபரபப்பான அரசியலில் சூழலில், நீட் தேர்வுக்கு எதிரான பொது கூட்டத்திற்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த தினகரன், பெரம்பலூர் அருகேயுள்ள பாடலூரில் உள்ள கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசினார். “அம்மாவிற்கும் எங்களுக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு தக்கபாடம் புகட்டுவோம். இருந்த இடம் தெரியாமல் இருந்தவர் பழனிசாமி அவரை முதல்வர் ஆக்கியவர் சின்னம்மா. அவருக்குத் துரோகம் செய்தவர் எப்படி ஏழரைகோடி தமிழ்மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.


எடப்பாடி, சபாநாயகர் இருவரும் சேர்ந்து 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்து ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எங்கள்  சட்ட மன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதுமில்லை.நீதி மன்றத்தை நாடி எங்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்ற அறிவிப்பை விரைவில் பெறுவோம்.

தமிழகத்தில் நடைபெற்றது ஒரு ஜனநாயக படுகொலை. அதை சபாநாயகரும்,பழனிசாமியும் சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்றால் இதில் கவர்னரும் துணை போகிறார் என்பதுதான் மனவருத்தமாக இருக்கிறது. கவர்னர் பதவியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தச் சொல்லி கவர்னர் பதவியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்திகொள்ள வேண்டும். மேலும் கவர்னர் இதை உட்கட்சி பிரச்னை என்று பார்க்காமல் இனிமேலாவது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். வாக்கெடுப்பு நடைபெற்றாலே பழனிசாமியை அணியினர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள் இது உறுதி.
மத்திய அரசு மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பினால்தான், மத்திய அரசு நடுநிலையாகச் செயல்படுகிறது என மக்கள் நம்புவார்கள். இல்லையென்றால் மத்திய அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். இந்த 18 பேர் இல்லாமல் மேலும் 13 பேர் எங்களுக்கு ஆதரவு உள்ளது. எடப்பாடியின் ஆட்சியைக் கலைத்துவிட்டு அவரை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்”என்று முடித்தார்

ஆட்சியைக் கலைக்க தி.மு.க உதவியை நாடுவீர்களா என்று பத்திரிகையாளர்கள் தினகரனைப் பார்த்துக் கேட்டபோது, “பொறுத்திருங்கள் நான் சொன்னது நடக்கும்” என்று சூசகமாக முடித்துச் சென்றார்
vikatan.com

கருத்துகள் இல்லை: