வியாழன், 21 செப்டம்பர், 2017

ரூ 4000 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது எடப்பாடி பன்னீர் அரசு ... நிர்வாகம் முற்றாக சீரழிந்தது ...

tamiloneindia  :ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு, உள்ளாட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளை மேம்படுத்துவதற்காக 4,000 கோடி ரூபாய்கள் மத்திய அரசால் கொடுக்கப் படுவது வழக்கம். இந்த முறை உள்ளாட்சிகளுக்கான இந்த தொகை அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பபட்டுவிட்டது. இதே போல தமிழ் நாட்டில் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர் வாறுவதற்காக 400 கோடி ரூபாயை ஏற்கனவே அனுப்பி விட்டது நபார்டு வங்கி. இதில் 100 கோடி ரூபாய், 2016 - 17 ம் ஆண்டுகளுக்காக செலவிடப் பட வேண்டும். மீதமுள்ள 300 கோடி ரூபாய் 2017 - 18ம் ஆண்டுகளுக்கு செலவிடப் பட வேண்டும் என்பது விதி. '100 கோடி ரூபாயை ஏற்கனவே செலவு செய்து விட்டோம் என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதரங்கள் ஒன்று கூட தமிழக அரசால் காட்டப்பட வில்லை. மாறாக நீங்கள் அந்த 100 கோடி எப்படி செலவு செய்யப் படப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பற்றி எதுவும் கேட்காதீர்கள். இனிமேல் செலவு செய்யப் பட வேண்டிய 300 கோடி ரூபாய் பற்றி கேளுங்கள்.
ஆர். மணி:  சென்னை: தமிழக அரசியல் இன்று சிரிப்பாய் சிரித்து கொண்டிருக்கிறது. ஆளும் அஇஅதிமுக வில் கிட்டத் தட்ட கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சம்பவங்கள், ஏக இந்தியாவின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் ஈர்த்திருக்கிறது.

நாளோர் மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் கூத்துக்கள் ஏக இந்தியாவையும் கெக்கொலி கொட்டி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
'''நான் கடந்த ஒரு மாத காலமாக ஆதித்தியா, சிரிப்பொலி போன்ற 24 மணி நேர தமிழ் நகைச் சுவை சேனல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். மாறாக தமிழ் செய்திச் சேனல்களை பார்க்க துவங்கி விட்டேன். காரணம் இந்த சேனல்களில் இல்லாத பெரு நகைச்சுவை காட்சிகள் தமிழக அரசியலில் அரங்கேறிக் கொண்டிருப்பது தான். இதற்கு காரணமான தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுக வுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்''' என்று கூறுகிறார் டெல்லியில் வசிக்கும், மத்திய அமைச்சர் .



 ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 ல் மறைந்தார். உடனடியாக முதலமைச்சரான ஓ பன்னீர்செல்வம் பிப்ரவரி 5 ம் தேதி வரையில் முதலமைச்சராக இருந்தார். ஆனால் பிப்ரவரி 5 ல் சசிகலாவை அஇஅதிமுக வின் சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக தேர்ந்தெடுத்த நிமிடம் தொட்டு இந்த நகைச் சுவை காட்சிகள் அரங்கேற துவங்கின. பிப்ரவரி 14 ம் தேதி ஜெயலலிதா வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் வி.என். சுதாகரன் ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் நிறைத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்.

அடுத்த நாள் சசிகலாவும் மற்ற இருவரும் பெங்களூர் பரப்பனஹாரா சிறையில் அடைக்கப் பட்டனர். பிப்ரவரி 16ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.. ஜெயலலிதா எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையில் உள்ள ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கட்சியின் இரட்டை சின்னம் தங்களுக்குத் தான் ஒதுக்கப் பட வேண்டும் என்று ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினார். அப்போது சசிகலாவின் ஆதரவாளராக இருந்த எடப்பாடி இதனை கடுமையாக எதிர்த்தார்.

சசிகலா சார்பில் இரட்டை இலை தங்களுக்குத் தான் ஒதுக்கப் பட வேண்டும் என்று கூறியது. இரு தரப்பு இரண்டு லாரிகள் கொள்ளளவு கொண்ட தஸ்தாவேஜூகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தன. இந்தளவு தஸ்தாவேஜூகளை வைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தில் இடமில்லாத காரணத்தால் ஆணையத்தின் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த தஸ்தாவேஜூகள் வைக்கப்பட்டுள்ளன.< திடீரென்று எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறியதால் விவகாரம் வேறு ரூபம் எடுக்கத் துவங்கியது. திடீரென்று களத்தில் வந்து குதித்தார் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன். சசிகலா சிறைக்கு போவதற்கு முன்பு அவர் முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்த நபர்தான் எடப்பாடி பழனிசாமி. அவரே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுத்தார்.

 எடப்பாடியை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த ஓபிஎஸ் திடீரென்று எடப்பாடியுடன் தன்னுடைய அணியை இணைத்தார். துணை முதலமைச்சரானார் ஓபிஎஸ்.< பிரச்சனை ஒரு வழியாக தீர்ந்தது என்று பலரும் நினைத்த சூழ்நிலையில் திடீரென்று தன்னுடைய ஆட்டத்தை ஆடத் துவங்கினார் டிடிவி தினகரன். ஆளுநர் வித்தியசாகர் ராவை டிடிவி க்கு ஆதரவான 19 எம்எல்ஏ க்கள் சந்தித்து தங்களுக்கு எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதங்கள் கொடுத்தனர்.

பிரச்சனை சூடு பிடிக்கத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, பிரதான எதிர்கட்சியான திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிருப்பிக்க உத்திரவிடக் கோரினர்.< இந்த சூழ்நிலையில் தான் டிடிவி தனக்கு ஆதரவான 19 எம்எல்ஏ க்களில் 16 பேரை முதலில் புதுச்சேரிக்கு கொண்டு போய் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தார். பின்னர் அவர்களை கர்நாடகத்தின் கூர்க் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றினார். டிடிவி ஆதரித்த 19 எம்எல்ஏ க்களில் ஒருவரான ஜக்கையன் திடிரென்று அணி மாறி மீண்டும் எடப்பாடி பக்கம் வந்து சேர்ந்தார்.

விவகாரம் தங்களுக்கு எதிராக மெல்ல, மெல்ல திரும்புவதை புரிந்து கொண்ட எடப்பாடி தரப்பு தன்னுடைய அஸ்திரத்திரத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் மூலம் பிரயோகித்தது. ஆளுநரிடம் எடப்பாடிக்கு எதிராக மனு கொடுத்ததனால் கட்சிக் கட்டுப்பாட்டை இந்த 18 எம்எல்ஏ க்களும் மீறி விட்டனர் என்றும், ஆகவே அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் அஇஅதிமுக கொறடா ஒரு கடிதம் கொடுத்தார். 

இதற்கு நேரில் வந்து பதில் அளிக்குமாறு இந்த 18 எம்எல்ஏ க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர் பி.தனபால். ஆனால் இவர்கள் நேரில் ஆஜராகததால் செப்டம்பர் 18ம் தேதி இந்த 18 எம்எல்ஏ க்களின் பதவியை பறித்தார் சபாநாயகர். அன்று மாலையிலேயே இந்த 18 எம்எல்ஏ க்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. 

விவகாரம் சென்னை உயர்நீதி மன்றத்துக்கு சென்றது. செப்டம்பர் 20 ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, 18 எம்எல்ஏ க்களின் பதவி நீக்கத்துக்கு இடைக் காலத் தடை விதிக்க மறுத்து விட்டார். அதே சமயம் எடப்பாடி பழனிசாமி அரசு மறு உத்திரவு வரும் வரையில் சட்டமன்றத்தில் தன்னுடைய மெஜாரிட்டியை நிருபிக்க, நம்பிக்கை கோரும் தீர்மானம் எதனையும் கொண்டு வரக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 4 ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து விட்டார்.

இது எல்லோருக்குமே தெரிந்த விஷயங்கள்தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் இந்த ஆறு மாத காலத்தில் தமிழக அரசு நிர்வாகம் எப்படி சீரழிந்து, சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான். ‘'அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. எங்கும் எந்த பணியும் நடக்கவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்திருக்கிறது என்று கூட நான் கூறுவேன்'' என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். 

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு, உள்ளாட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளை மேம்படுத்துவதற்காக 4,000 கோடி ரூபாய்கள் மத்திய அரசால் கொடுக்கப் படுவது வழக்கம். இந்த முறை உள்ளாட்சிகளுக்கான இந்த தொகை அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பபட்டுவிட்டது. இதே போல தமிழ் நாட்டில் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர் வாறுவதற்காக 400 கோடி ரூபாயை ஏற்கனவே அனுப்பி விட்டது நபார்டு வங்கி. இதில் 100 கோடி ரூபாய், 2016 - 17 ம் ஆண்டுகளுக்காக செலவிடப் பட வேண்டும். மீதமுள்ள 300 கோடி ரூபாய் 2017 - 18ம் ஆண்டுகளுக்கு செலவிடப் பட வேண்டும் என்பது விதி. 

'100 கோடி ரூபாயை ஏற்கனவே செலவு செய்து விட்டோம் என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதரங்கள் ஒன்று கூட தமிழக அரசால் காட்டப்பட வில்லை. மாறாக நீங்கள் அந்த 100 கோடி எப்படி செலவு செய்யப் படப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பற்றி எதுவும் கேட்காதீர்கள். இனிமேல் செலவு செய்யப் பட வேண்டிய 300 கோடி ரூபாய் பற்றி கேளுங்கள். இத்தகைய பணிகளை நிறைவேற்றுவதற்காக வழக்கமாக நியமிக்கப் படும், பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவிலான ‘'குடிமராமரத்து கமிட்டிகளை' நியமிக்க ஏற்கனவே உத்தரவு போட்டு விட்டேன் என்று என்னிடம் கூறினார் 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுகிறார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன். இந்த விவகாரத்தில் நபார்டு வங்கியையும் பாண்டியன் சாடுகிறார். ‘'தான் உதவி செய்யும் திட்டங்கள் எந்த லட்சணத்தில் செயற்படுகின்றன என்பதை கண்காணிக்கும் பொறுப்பு நபார்டு வங்கிக்கு இருக்கிறது. இதற்கான தொழில் நுட்ப அறிவு கொண்டவர்களின் குழு இது. ஆனால் 100 கோடி ரூபாய் விவகாரத்தில் நபார்டு வங்கி வாய் திறக்க மறுக்கிறது. 

100 கோடி ரூபாய் எப்படி செலவு செய்யப் பட்டது என்பதை பற்றிய தெளிவான ஆதாரங்களை நபார்டு வங்கி வெளியிட வேண்டும். இல்லையென்றால் இந்த 100 கோடி ரூபாய் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது, இதில் நபார்டு வங்கிக்கும் பங்கு இருக்கிறது என்பது தான் பொருள். எங்களது நியாயமான கோரிக்கைக்கு நபார்டு வங்கி உண்மையான காரணத்தை தெரிவிக்காவிட்டால் நாங்கள் இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை விரைவில் வழக்கு தொடுப்போம்''' என்று மேலும் கூறுகிறார் பாண்டியன். 

ஒவ்வோர் துறையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத, பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். ‘''தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு ஆண்டு தோறும் வழங்கப் பட வேண்டிய உதவித் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைக்கப் பட்டு விட்டது. கோவை மாநகராட்சியில் 500 துப்புரவுத் துறை ஊழியர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய ஊதியம் சில மாதங்களாக கொடுக்கப்படாததால் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை எல்லாமே இந்த ஆட்சி நிர்வாகம் சரிவதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞைகள் என்றே  நான் பார்க்கிறேன்''

 தமிழக அரசின் வருவாயும் பெரிய அளவில் பாதிக்கப் பட துவங்கியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுபான கடைகள் அகற்றப் பட வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்திரவு தமிழக அரசின் வருவாயை கடுமையாக பாதிக்கத் துவங்கியிருக்கிறது. ‘''குடி மன்னர்களின் தாலியை''' ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் அறுத்து எறிந்து கொண்டிருக்கும் டாஸ்மாக் விற்பனை இவ்வாறு தொடர்ந்து சரிவது மாநிலத்தின் நிதி நிலைமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 

இது இன்னும் சில மாதங்கள் நீடித்தால் மாநிலத்தின் நிதி நிலைமை மேலும் மோசமாக மாறி விடும்''' என்கிறார் மாநில அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார நிபுனர் ஒருவர். ‘''மு.கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் முதலமைச்சர்களாக பதவி வகித்த, கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறை கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது இல்லை''' என்று மேலும் கூறுகிறார் அவர்.

 அரசியல் ரீதியில் ஸ்திரமான ஆட்சி இல்லையென்றால் என்ன வெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை எல்லாமே கள சாட்சிகளாக இன்று இருந்து கொண்டிருக்கின்றன. 24 மணி நேரமும் தன்னுடைய ஆட்சியையும், தான் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் நாற்காலியையும் எப்படி காப்பாற்றிக் கொள்ளுவது என்பதை தவிர வேறெதிலும் கவனம் செலுத்தும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லை. 

இத்தகைய ‘''ஸ்திரமற்ற அரசியல் சூழல்''' வேறெந்த தமிழக முதலமைச்சரும் சந்திக்காத ஒன்றுதான். இதனை நாம் மறுப்பதற்கு இல்லை. ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான சில விஷயங்களில் ஒன்று, தனியார் துறையின் முதலீடுகள். தற்போது தமிழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழலில் எந்த முதலீட்டாளரும் தமிழகத்தின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார் என்பது கூடுதல் தகவல். இன்று எல்லாவற்றுக்கும் மோடியின் கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதுதான் 

எடப்பாடி அரசின் ஒரே சாதனை. 2019 ல் மக்களவை தேர்தலை சந்திக்க விருக்கும் மோடி, எடப்பாடி அரசுக்கு மத்திய அரசின் ஆதரவு கரங்களை நீட்டலாம். நாம் மறுப்பதற்கு இல்லை.... ஆனால் அதற்கு அரசியல் ரீதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசும், அவரது கட்சியும் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும். இந்த விலை எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது கட்சிக்கும் வேண்டுமானால் லாபத்தை கொண்டு வரலாம். ஆனால் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் அந்த விலை தாங்க முடியாத இன்னல்களையும், பிரச்சனைகளையும் தான் கொண்டு வரும். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ... 
ஏற்கனவே முடங்கி கிடக்கும் தமிழக அரசு நிர்வாகம், தற்போது அழிவிலிருந்து பேரழிவை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தான் விவரம் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் ஒரே உண்மை.

கருத்துகள் இல்லை: