ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

vikatan : தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா?! அரசுக்கு அடுத்த நெருக்கடி?!

திமுக ஸ்டாலின்
மிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்க, எதிர்க்கட்சியான தி.மு.க  முடிவெடுத்து விட்டது. அவை உரிமைக்குழு கூட்டத்தில், குட்கா பிரச்னையைக் காரணம் காட்டி, தி.மு.க. உறுப்பினர்களை நீக்கம் செய்தால், ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலையிலான அரசு அறுதிப் பெரும்பான்மையை இழந்து, 'மைனாரிட்டி' அரசாகி விட்டது என்று தி.மு.க குற்றம்சாட்டி வருகிறது. அ.தி.மு.க.எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். அந்த 19 பேர் மீதும் அரசு தலைமைக் கொறாடா ராஜேந்திரன் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதைக்கண்டு அஞ்சாமல் அந்த 19 எம்.எல்.ஏ-க்களுடன் சேர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை இப்போது 21 ஆக உயர்ந்து இருக்கிறது.

தனபால்
இப்படி அ.தி.மு.க உள்கட்சி பூசலில் சிக்கித்தவித்துவரும் எடப்பாடி பழனிசாமி அரசு, சட்டசபை உரிமைக் குழுவை ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று கூட்டியுள்ளது. எதற்காக, அவை உரிமைக் குழு கூடுகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஜூலை 19-ம் தேதி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் 'தடைசெய்யப்பட்ட குட்கா தமிழகத்தில் விற்கப்படுகிறது' என்பதைச் சுட்டிக்காட்ட அவற்றை அவைக்கு கொண்டு வந்தனர். இந்த பிரச்னை அப்போது அவை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்பபட்டது. இந்த பிரச்னைதான் கடைசியாக அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பபட்ட பிரச்னை. இதுபோன்ற உரிமை பிரச்னைகளில் அவை உரிமைக் குழு கூடி விசாரிக்கும். குற்றம்சாட்டப்பட்டவர்கள், அவை உரிமைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள். அதன் பின்னர், உரிமைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்பின்னர் உரிமைக்குழு பரிந்துரையை சபையில் தீர்மானமாக நிறைவேற்றுவார்கள்.
இப்போது, உரிமைக்குழுவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் 17 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். 10 பேர் அ.தி.மு.க, ஆறு பேர் தி.மு.க, ஒருவர் காங்கிரஸ். அ.தி.மு.க-வை சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேர் டி.டி.வி. தினகரன் அணியில் உள்ளனர். எனவே, அவர்கள் மூன்று பேரும் தி.மு.க-வை ஆதரித்தால் எதிர்க்கட்சிகள் மெஜாரிட்டி ஆகிவிடும். அல்லது அந்த மூன்று பேரும் கூட்டத்தைப் புறக்கணித்தால் இருதரப்பும் 7 என்று சமபலத்துடன் இருக்கும். இத்தகையை சூழ்நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக் குழு, ஓர் முடிவு எடுத்து அதை சட்டசபைக்கு பரிந்துரை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும், ஏதோ ஒரு திட்டத்தில்தான் உரிமைக் குழு கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன்
தற்போது சட்டசபையில், 234 உறுப்பினர்களில் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதால் 233 உறுப்பினர்கள் உள்ளனர். அதில், மெஜாரிட்டிக்கு 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. இப்போது உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களில் 21 பேர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, எடப்பாடி அரசுக்கு 113 எம்.எல்.ஏ-க்களின்  ஆதரவே உள்ளது. இது தேவைப்படும் பெரும்பான்மையை விட நான்கு உறுப்பினர்கள் குறைவாகும். இந்த நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழ்நிலை வந்தால், எடப்பாடி பழனிசாமி அரசு தப்பிக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள். எனவே, உரிமைக் குழு மூலம் தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் குறிப்பிட்ட சிலரை தகுதிநீக்கம் செய்துவிட்டால், இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் அடிப்படையில் ஆளும்கட்சி பெரும்பான்மையை காட்டிவிடலாம் என்று கணக்குப்போடுவதாக சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், "அரசின் உரிமைக்குழுவை சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.க. தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, ''எடப்படி அரசு, தி.மு.க தரப்பு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து, அவர்களது மெஜாரிட்டையை நிருபிக்க முடிவு செய்தால், நாங்கள் அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்குவோம். இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிடுவோம். தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே ராஜினாமா செய்தால் என்ன செய்வார்கள்? அதுபற்றியெல்லாம் நாங்கள் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: