மாஸ்கோ: உலகமெங்கும் 130
பேருக்கு மேலான இளம் உயிர்களை பழிவாங்கி பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து
வரும் 'ப்ளூ வேல்' விளையாட்டில், தலைவராகச் செயல்பட்டு சாவுக் கட்டளைகளை
வழங்கி வந்த 17 வயது ரஷ்யச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் புடேய்க்கின்
என்னும் 22 வயது மனோதத்துவ மாணவர் ஒருவரால் உருவாக்கப்பட்ட ஆன்லைன்
விளையாட்டுதான் 'ப்ளூ வேல்' .
உங்களைப் பற்றிய விபரங்களை முதலில் பதிவு
செய்து கொண்ட பின் துவங்கும் இந்த விளையாட்டானது 50 டாஸ்க்குகளை
கொண்டதாகும். முழுக்க மனோதத்துவத்தினை அடிப்படையாக கொண்டு இவை
வடிவமைக்கப்பட்டுள்ளன. முதலில் சாதாரணமாக தனியாக திகில் திரைப்படம்
பார்த்தல், உயரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்புதல்,
இடுகாட்டிற்கு நள்ளிரவில் தனியாகச் செல்லுதல் என்று துவங்கும் இந்த
பட்டியலானது, உடலில் ரத்த காயங்களை உண்டாக்கி கொள்ளுதல், கத்தியால்
திமிங்கிலத்தின் படத்தினை உடலில் வரைதல் என்று வலுவடைந்து இறுதியாக
ஐம்பதாவது டாஸ்க்காக உங்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவதில்
முடியும்.
உலகமெங்கும் இதுவரை இந்த விளையாட்டினை
விளையாடி 130-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில்
அதிகாரப்பூர்வமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் நேற்று மதுரையைச்
சேர்ந்த ஒரு மாணவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் இந்த விபரீத விளையாட்டில்
பல்வேறு 'சாவுக் குழுக்களுக்கு' தலைவியாக இருந்து சாவுக் கட்டளைகளை வழங்கி
வந்த 17 வயது ரஷ்யச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் கபரோவிஸ்
கிராய் மாகாணத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'சாவுக் குழுத் தலைவர்' என்று
அழைக்கப்பட்ட இந்தச் சிறுமி முதலில் 'ப்ளூ வேல்' விளையாட்டினை
விளையாடுபவராகத்தான் இருந்துள்ளார். அதன் இறுதிக்கட்டமான உயிரை
மாய்த்தலுக்குப் பதிலாக, அவர் மற்றவர்களுக்கு விளையாட்டின் கட்டளைகளை
வழங்கும் தலைவராக மாறியுள்ளார்.
பல்வேறு குழுக்களுக்கு டாஸ்க் எனப்படும்
தொடர் கட்டளைகளை வழங்குபவராக அந்த சிறுமி செயல்பட்டு வந்ததாகவும், இதர சில
குழுக்களைப் போலன்றி இந்த குழுக்களில் இணைந்த இளைஞர்கள் கொடுக்கப்பட்ட
டாஸ்க்குகளை செய்யவில்லை என்றால் அவரையே அல்லது அவர்களை சார்ந்தவர்களையோ
கொன்று விடுவதாக மிரட்டப்பட்டதாகவும் தெரிகிறது.
கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்க்குகளும்
பங்கேற்பாளர்களை மனோதத்துவ ரீதியில் சித்திரவதைக்கு உள்ளாக்கும் அளவுக்கு
இருக்குமென்றும், இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு அவர்கள்
தள்ளப்படுவார்கள் என்றும் விசாரணையில் தெரிய வருகிறது.
முதலில் இதனை உருவாக்கிய பிலிப்
புடேய்க்கின் தற்பொழுது கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
தணடனை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது வேறு ஒரு தலைமையின் கீழ்
தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது இந்த கொடூர விளையாட்டின் தீவிரத்தன்மையை
உணர்த்துகிறது. தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக