ராஜசங்கீதன்
லென்ஸ் படம் பார்த்துவிட்டேன். முக்கியமான பிரச்சனையைத்தான்
கையாண்டிருக்கிறது. ஆனால் நல்ல படமா என கேட்டால், ஆமென சொல்வதில் பல
தயக்கங்கள் இருக்கின்றன.
அவை:பெண்ணே பாதிக்கப்பட்டாலும் ஆண் பாதிக்கப்பட்டதாகத்தான் கதை
பின்னப்பட்டிருக்கிறது. பெண்ணுடல் சமாச்சாரமாக மட்டும் இப்பிரச்சினையை
சமூகம் அணுகுவதால், பெண்ணின் கோணத்தில் சொல்லப்படுவதே சரியாக இருந்திருக்க
முடியும். நடக்கவில்லை.
ஏற்க கஷ்டமாக இருந்தாலும் நீலப்படம் பார்த்தல் என்பது இன்றைய
யதார்த்தமாக மாறிவிட்டது. இரு பாலினத்தாரும் பார்க்கின்றனர். கலவியை தூக்கி
கொண்டு போய் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்ட சமூகத்தில், நீலப்படம் தவறு
என்ற வாதத்தை தாண்டி விட்டோம் என்பதே நடைமுறை யதார்த்தம்.
அதற்காக பெண்களுக்கு தெரியாமல் நீலப்படம் எடுத்து வாழ்க்கையை
நாசமாக்கலாமா என கேட்கலாம். நீலப்படமோ புகைப்படமோ வெளிவந்தாலும் பிரச்சினை
ஏதும் கிடையாது என்ற சிந்தனையைத்தான் உருவாக்க வேண்டும். தன் அந்தரங்க
காட்சி வெளியாகி விட்டதே என குற்றவுணர்ச்சியில் பெண் சாவது எல்லாம் என்ன
பார்வை என தெரியவில்லை. அதில் அவளின் குற்றம் என்ன இருக்கிறது? இல்லை,
கலவியை குற்றமாக பார்க்கும் சமூகத்தைத்தான் விரும்பி
அடையாளப்படுத்துகிறோமா? அதனால்தான் இக்கதை பெண்ணின் பார்வையில்
அணுகப்பட்டிருக்க வேண்டும் என்றேன்.
நீலப்படம், பெண்ணுக்கு அவமானம் என்றெல்லாம் பேசும் படத்தை எடுக்கும்
இயக்குநர், படத்திலேயே அதைத்தான் செய்திருக்கிறார். கருப்பு மச்சத்துக்கு
க்ளோசப், முதலிரவு என்ற பெயரில் suggestive கலவியை பெண் வழி மட்டுமே
காட்டி, காம இச்சை உணர்வுகளை exploit செய்தல் எல்லாம் எந்த கணக்கில்
சேர்த்தி?
‘இது ஒரு கதை. கதையாக பாருங்கள். நீங்கள் சொல்வது போலவெல்லாம் படம்
எடுக்க முடியுமா’ என கேட்கலாம். முடியாதுதான். தமிழ்சினிமாவின் சாபம் ஒன்று
இருக்கிறது. முக்கியமான விஷயத்தை எடுத்து கொண்டு, வியாபாரத்துக்காக அதை
மொத்தமும் நீர்த்து போக செய்து விடுவார்கள். இதிலும் அது நேர்ந்திருக்கிறது
என்ற வேதனைதான் பதிவுக்கு காரணம். இது வெறும் படமே. இது பேசும் பிரச்சினை
வெறும் பாசாங்கு மட்டுமே. பிரச்சினை அதனளவில் முழுமையாக விவாதிக்கப்பட
வேண்டிய வெளி இன்னும் நிரப்பப்படாமலே இருக்கிறது என சொல்லும்
முனைப்பில்தான் இந்த பதிவு.
முடிவின் முடிவாக பாலியல் விழிப்புணர்வு நம் சமூகத்தில் இல்லை.
பெண்ணுடல் சார்ந்த அரசியல் பற்றிய புரிதலும் இல்லை. இவற்றை பற்றிய சிந்தனை
வறட்சி மட்டுமே இயக்குநர்கள் மத்தியில் அதிகம் தென்படுகிறது. ஆகவே, இவற்றை
சரியாக பேசும் படங்களை எதிர்நோக்கி இன்னமுமே நாங்கள் காத்திருக்கிறோம்.
ராஜசங்கீதன், ஊடகவியலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக