சனி, 20 மே, 2017

கனிமொழி :ஹிந்தி படிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.. ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்றதால்..


Kanimozhi Karunanidhi :ஹிந்தி தெரிந்தால் தான் நீ இந்தியன் என்ற சூழலை எதிர் கொண்ட போது இனி என்ன ஆனாலும் உன் மொழியைக் கற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் #NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்காததை எதிர்த்து நேற்று கோவையில் நடந்த கருத்தரங்கத்தில் மாணவர்களுடன் உரையாடினேன்..
மொழி என்பது வெறும் தொடர்புக்கு மட்டுமல்ல. அது நமது வரலாறு. கலாச்சாரம். பண்பாடு. தமிழை தமிழர்கள் மொழியாக மட்டும் பார்ப்பதில்லை. அது எங்கள் உணர்வோடு உயிரோடு உடலோடு கலந்தது. நாங்கள் ஹிந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை. அது எங்கள் மேல் திணிக்கப் படுவதைத் தான் எதிர்க்கிறோம். இதைக் கலைஞர், தளபதி இருவரும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்துக்குப் போகும் போது நானும் அங்குள்ள சூழலில் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தான் போனேன். ஆனால் ஹிந்தி தெரிந்தால் தான் நீ இந்தியன் என்ற சூழலை எதிர் கொண்ட போது இனி என்ன ஆனாலும் உன் மொழியைக் கற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டேன். இந்தி நமது தேசிய மொழி அல்ல. 22 ஆட்சி மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. இதை உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்தி விட்டது. நாம் இதை உணரவேண்டும்.
மைல் கல்லில் ஹிந்தி.
கடிதம் எழுதினால் ஹிந்தியில் பதில்.
அறிவிப்புக்கள் ஹிந்தியில்.

அரசாணை ஹிந்தியில்.
மக்களுக்கு எப்படி உங்கள் அறிவிப்புக்கள் போய்ச்சேரும்???
வெளிநாட்டு நிறுவனங்களான Facebook, Twitter, WhatsApp கூட தமிழுக்கு முக்கியத்துவம் தரும் போது மத்திய அரசு மட்டும் ஏன் செய்யக்கூடாது??
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்.
கேந்த்ரிய வித்யாலயாவில் ஹிந்தி கட்டாயம்.
கல்லூரிகளில் ஹிந்திதுறை.
ஆனால் கேரளா அரசு சி.பி.எஸ்.இ, கேந்திரிய வித்யாலாயா உள்ளிட்ட எல்லா பள்ளிகளிலும் மலையாளததை கட்டாயம் ஆக்கிவிட்டது
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜீ அவர்கள் வங்காள மொழியை கட்டாயம் ஆக்கப் போகிறார்கள்.. ஆனால் இன்றைய தமிழக அரசு ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய அரசுக்குக் கூழைக் கும்பிடு போடுகிறது.
லத்தீன் செம்மொழி. பேச ஆளில்லை. சமஸ்கிருதம் செம்மொழி. வழிபாட்டிற்கு மட்டுமே. பேசஆளில்லை. Classical English இன்று புரியாது. Modern English நாம் பேசுவது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சங்கத்தமிழ் இன்றும் புரியும். தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் பேசப்படும் மொழி தமிழ்.
உலகத்தோடு உரையாட ஆங்கிலம் இருக்கிறது. இந்தியாவுடன் உரையாட ஆங்கிலத்தையே பயன்படுத்தலாம் என்று அறிஞர் அண்ணா தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
மாணவர்கள் ஒன்றுபட்டு நின்று எதிர்த்தால் தான் மத்திய அரசின் இந்தித் திணிப்பு அடங்கும். ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் இதை ஏற்கெனவே புரியவைத்தீர்கள். அன்றைய மாணவர் போராட்டத்தால் நேரு அவர்கள் இந்தி திணிப்பு இனி இருக்காது என உறுதி மொழி அளித்தார். தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

கருத்துகள் இல்லை: