வியாழன், 18 மே, 2017

கோடம்பாக்கத்தில் 45 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் ... தி.நகர் நகைக்கடை உட்பட பலரின் பணம் ..

45 கோடி ரூபாயைப் பதுக்கிவைத்த தண்டபாணி யார்?' - நகைக்கடை முதல் நடிகை வரை வெளிவராத பரபர பின்னணி
எஸ்.மகேஷ்
எஸ்.மகேஷ்சென்னை கோடம்பாக்கத்தில், 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்த தண்டபாணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கோடம்பாக்கம் என்றாலே, கோலிவுட் பிரபலங்களின் கூடாரமாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் தற்போது, நிலைமை அப்படியல்ல. கோலிவுட் பிரபலங்கள் அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டனர். சாதாரண குடிமக்கள் மட்டுமே குடியிருக்கும் இடமாக கோடம்பாக்கம் மாறியிருக்கிறது. சென்னை கோடம்பாக்கம், ஜக்கரியா காலனி 2-வது தெரு, நேற்றிரவு திடீரென பரபரப்பாகக் காணப்பட்டது. காக்கிகள் ஒரு வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்தத் தகவல் எதுவும் தெரியாமல், கோடம்பாக்கம் உறங்கிக்கொண்டிருந்தது.
காக்கிகள் சோதனை நடத்திய வீடு, தண்டபாணி என்பவருக்குச் சொந்தமானது
. அவரது வீட்டில் நேற்றிரவு முதல் சல்லடையாக சோதனை நடத்திய காக்கிகளுக்கு, அதிகாலை இரண்டு மணி வரை எதுவுமே சிக்கவில்லை. இதனால், தங்களுக்குக் கிடைத்த தகவல் வதந்தி என்று கருதி, புறப்பட்ட நேரத்தில்தான், இன்ஸ்பெக்டர் ஒருவரின் கண்ணில் அந்தச்  சாக்குமூட்டைகள் தென்பட்டன. உடனடியாக சாக்குமூட்டைகளைப் பிரித்தபோது, சோதனை நடத்தியவர்களுக்கு கடும் அதிர்ச்சி. அந்தச் சமயத்தில், தண்டபாணி முகத்தில் ஒருவிதமான பயம் தொற்றிக்கொண்டது. சாக்குமூட்டைகளில் கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைக் கைப்பற்றிய போலீஸார், உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக ஜக்கரியா காலனிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் வாகனங்கள் அந்தக் காலனிப் பகுதிக்குள் நுழைந்த பிறகே, அங்குள்ள மக்களுக்குத் தகவல் பரவியது. தண்டபாணி வீட்டில் கோடிக்கணக்கான பணம் சாக்குமூட்டையில் இருக்கிறதாம் என்ற தகவல், கோடம்பாக்கத்திலிருந்து அடுத்தடுத்து பரவத்தொடங்கின. மீடியாக்களிலும் செய்திகள் வெளிவரத்தொடங்கின.
ஆனால், சோதனைக்குச் சென்ற போலீஸார், உடனடியாகப் பணத்தை எண்ணும் இயந்திரங்களை அந்த வீட்டுக்கு எடுத்துச் சென்று, எண்ணத் தொடங்கினர். 1000, 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 45 கோடி ரூபாய் என்று இயந்திரம் கணக்குச் சொன்னது. அந்தத் தகவலும் போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டபாணி மற்றும் அவரது வீட்டிலிருந்த பண மூட்டைகளை எடுத்துக் கொண்டு போலீஸ் டீம் புறப்பட்டது.<... போலீஸ் துணை கமிஷனர் சரவணன், நேரடியாகவே விசாரணையில் இறங்கினார். தண்டபாணியிடம்  நடத்திய விசாரணையில், அவரைப் பற்றிய முழுவிவரம் போலீஸாருக்குக் கிடைத்தது. தண்டபாணியின் குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாக அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள், போலீஸார் அணியும் தொப்பிகளைச் செய்துகொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்தக் குடும்பத்தினருக்குக் காவல்துறையினருடன் நல்ல பழக்கம் இருந்துவந்துள்ளது. தண்டபாணி, அந்தப் பணியோடு ரியல் எஸ்டேட், டாக்குமென்ட் வெரிஃபிகேஷன் பணி, ஸ்கூல் யூனிபார்ம் தைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். இதனால், அவரிடம் பணம் அதிகளவில் புழங்கியது. அவரது நட்பு வட்டாரமும் விரிவடைந்தது. அதில், தி.நகரைச் சேர்ந்த ஜுவல்லரி அதிபருடன் தண்டபாணி நெருங்கிப்பழகினார்.
இந்தச் சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெளியானது. இதனால், கோடிக்கணக்கில் பணத்தைப் பதுக்கிவைத்த பணமுதலைகள், அதை மாற்ற பல வகையில் முயற்சி மேற்கொண்டனர். அந்த வரிசையில், தி.நகரைச் சேர்ந்த ஜுவல்லரி அதிபரும் பணத்தை மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், காலக்கெடு முடிந்ததும், அவரால் பணத்தை மாற்றமுடியவில்லை. இந்தத் தகவலை தண்டபாணியிடம் அவர் சொன்னதுடன், பணத்தை மாற்றிக் கொடுக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தார். அடுத்த சில நாள்களில் மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் தண்டபாணி வீட்டுக்கு வந்திறங்கின. ஆனால், அந்தப் பகுதி மக்கள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஏனெனில், தண்டபாணியின் வீட்டுக்கு இதுபோல மூட்டை மூட்டையாக துணிகள் வந்திறங்குவது வழக்கம்.
தண்டபாணியாலும் பணத்தை மாற்ற முடியாததால், வீட்டிலேயே அவை முடங்கிவிட்டன. பணத்தை என்ன செய்யலாம் என்று ஜுவல்லரி அதிபரும்  தண்டபாணியும் அவ்வப்போது ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், தண்டபாணியின் நடவடிக்கைகளில் சில மாதங்களாக மாற்றம் தெரிந்துள்ளது. இந்தத் தகவல் சென்னை மாநகர போலீஸுக்கு போன்மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரிலேயே போலீஸார், 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, துணை கமிஷனர் சரவணனிடம் கேட்டபோது, "எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் தண்டபாணி வீட்டில் சோதனை நடத்தினோம். அவருக்கும் எந்தக்கட்சிக்கும் தொடர்பு இல்லை. அவரது வீட்டில் 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து, தண்டபாணியிடம் விசாரணை நடந்துவருகிறது. பணம் கைப்பற்றிய தகவல் ஆர்.பி.ஐக்கும், வருமான வரித்துறைக்கும் தெரிவித்துள்ளோம். இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை தண்டபாணி மீது எந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை நடந்துவருகிறது. அதன்பிறகே, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தண்டபாணியைப் பொறுத்தவரை அவர்மீது எந்தவழக்கும் இல்லை. தண்டபாணி தெரிவித்த ஜுவல்லரி அதிபரிடம் விசாரித்த பிறகே, முழுவிவரம் தெரியவரும்" என்றார்.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தண்டபாணி, எந்தக் கட்சியையும் சேராதவராக இருந்தாலும் அவருக்கு முக்கிய கட்சியினருடன் நல்ல அறிமுகம் இருந்துள்ளது. மேலும், தண்டபாணி, எந்தவித பந்தாவும் இல்லாமல் சாதாரணமாகவே கோடம்பாக்கத்தில் வலம்வந்துள்ளார். அவரது வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும், அதைக் குடும்பத்தினரிடம்கூட தண்டபாணி சொல்லவில்லை. நேற்று நடந்த சோதனையின்போதே, வீட்டில் உள்ளவர்கள் பணத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர். ஆர்.பி.ஐ., வருமான வரித்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இன்னும் கூடுதல் தகவல்கள் வெளியாகும், மேலும், சில பிரபலமாகாத நடிகைகளுடனும் தண்டபாணிக்கு பழக்கம் இருந்த தகவலும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.< தண்டபாணி குறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படும் தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், 45 கோடி ரூபாயைத் தண்டபாணியை நம்பிக் கொடுத்த ஜுவல்லரி அதிபரின் முகம் வெளியில் தெரிந்தால், இன்னும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கறுப்புப் பணத்தை மாற்றிக்கொடுக்க சென்னையில் பல புரோக்கர்கள் செயல்பட்டனர். அவர்கள், கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றிக்கொடுத்தனர். அந்தக் குற்றச்சாட்டில், சென்னை அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சிக்கி, இடமாற்றம் செய்யப்பட்டார். கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றிக்கொடுத்த கும்பல்மீது போலீஸார் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களிடமிருந்துகூட இந்தளவுக்குக் கோடிக்கணக்கில் போலீஸார் பணத்தைப் பறிமுதல் செய்யவில்லை. தற்போதுதான் 45 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை ஸ்கெட்ச் போட்டு பறிமுதல் செய்திருக்கிறது தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான தனிப்படை டீம்.  விகடன்

கருத்துகள் இல்லை: