வியாழன், 18 மே, 2017

தேர்தல் அரசியல் தோற்றுவிட்டது! கீழடி மூடப்பட்டது ... நீட் தேர்வு சிபிஎஸ்சி ...தொ.பரமசிவம்

தொ.பரமசிவம்" : தமிழகத்தில் தேர்தல் அரசியல் தோற்றுவிட்டது - " கீழடி அகழாய்வு நிறுத்தப்பட்டது; அதன்பின் அதிகாரி பணியிடம் மாற்றப்பட்டது; நீட் தேர்வு முறை போன்ற பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர் விரோதமாக உள்ளது என பல தரப்பிலும் கூறப்படுகிறது. இதுகுறித்து மே 12ஆம் தேதி தமிழின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவமைத் திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் சந்தித்து மின்னம்பலம் வாசகர்களுக்காகப் பிரத்யேகமாக பேட்டி கண்டோம். சமகால அரசியல் மற்றும் பண்பாட்டு விஷயங்கள் குறித்த தனது பார்வையை அழுத்தமாகப் பதிவு செய்தார் தொ.ப.
கீழடியை அகழாய்வு செய்த அதிகாரியைப் பணியிட மாற்றம் செய்திருப்பது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாகியிருக்கிறதே?

நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்திய தொல்லியல் துறை தென்னிந்தியாவைப் புறக்கணித்துத்தான் வருகிறது. நாகார்ஜுன கொண்டாவைத் தவிர இங்கு உருப்படியான எந்த ஆய்வும் நடைபெறவில்லை. அப்படி உருப்படியான ஆய்வாக, ‘கீழடி’ ஆகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள். கிறிஸ்து பிறப்புக்கு முன்னாள் உள்ள எழுத்துகள் இங்குள்ளன. அதனால்தான் அமர்நாத்தை அசாமுக்கு மாற்றுகிறார்கள். ஆதிச்சநல்லூர் ஆய்வு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த அரசு அதற்கான முயற்சிகளை எப்போதும் எடுக்காது. ஆங்கிலேயர் காலத்தில் 1915இல் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகூட இன்னும் தமிழில் வெளிவரவில்லை.

ஜல்லிக்கட்டு, கீழடி போன்ற பண்பாட்டு பிரச்னைகளுக்குப் பெருந்திரள் போராட்டம் நடப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது ஒரு நாளில் வந்த கூட்டம் இல்லை. ரொம்ப நாளா மனசுக்குள்ள இருந்த விஷயம்தான் பெரிய போராட்டமா வெடிச்சிருக்கு. நேரம் பார்த்து காய்ஞ்ச வைக்கோலில் பத்தின நெருப்பு மாதிரிதான் இந்தப் போராட்டம் நடந்திருக்கு. டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டமும் அப்படித்தான். அந்த பெண்களுக்கு உள்ளார்ந்த ஒரு கோபம் இருந்தது. சமயம் பார்த்து அது, மேல வந்துருக்கு.
பண்பாட்டு ரீதியான பிரச்னைகளுக்கு மட்டும்தான் பெருந்திரள் போராட்டம் வருமா? நீட் தேர்வு போன்ற நேரடி அரசியல் சார்ந்த போராட்டங்கள், தமிழகத்தில் வலுப்பெறாமல் இருப்பதன் காரணம் என்ன?
அதற்கான தலைமை இல்லை. தமிழ்நாட்டுல தேர்தல் அரசியல் தோத்துப் போயிருச்சு. தோத்துப் போனதா மக்கள் நினைக்குறாங்க. அதனால அரசியல் பிரச்னைகளுக்கு வர மாட்டாங்க. எல்லா கட்சியும் அழிஞ்சு புதுக் கட்சிகள் வரும்போது வேணும்னா அந்த மாதிரி வரலாம். இப்ப உள்ள கட்சிகள் இருக்குற வரை வரமாட்டாங்க.

இந்தப் பண்பாட்டு ரீதியான போராட்டங்கள் தேசிய இன விடுதலையில் எந்த அளவு பங்குவகிக்கும்?
தேசிய இன விடுதலைக்கு ரொம்ப தூரம் போகணும். இந்த மாதிரி நூறு விஷயங்கள் நடந்தா தேசிய இன விடுதலையை நோக்கி நாம நகர்கிறோம்னு அர்த்தம். இப்ப ஒன்னுதான் இருக்கு. அது மத்திய அரசாங்க எதிர்ப்பு. தேசிய இன விடுதலை குறித்த தன்னுணர்ச்சியே இல்ல. அது முதல்ல வரணும். இந்தியாவில் எல்லா தேசிய இனங்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள்தான். இந்தி தேசிய இனத்தைத் தவிர, தேசிய இனங்களுக்கிடையே ஒற்றுமையுணர்வு ஏற்பட வேண்டும். பெரியார் இருந்திருந்தால் அது சாத்தியமாகியிருக்கும். இந்தியாவில் தேசிய இன விடுதலையைக் குறித்தும் இந்தி எதிர்ப்பு குறித்தும் முதலில் பேசியவர் பெரியார் தான்.

பண்பாட்டு ஆய்வில் உங்கள் முன்னோடி யார்? அவர்களில் இருந்து உங்களது ஆய்வு எந்தவிதத்தில் வேறுபடுகிறது?
மயிலை சீனி வேங்கடசாமி, நா.வானமாமலை, மு.ராஜலிங்கம் ஆகியோர் தான் எனது முன்னோடிகள். அவர்களது ஆய்வுகள் மேலோர் மரபைச் சார்ந்தது. எனது ஆய்வுகள் நாட்டார் மரபைச் சார்ந்தது. எனது ஞான ஆசிரியர் சி.சு.மணி. தமிழ்நாடு அடையாளம் காணாமல்விட்ட பல்துறை அறிஞர் அவர்.
நீங்கள் திராவிட இயக்கச் சிந்தனையிலிருந்து வருகிறீர்கள். ஆனால் நா.வானமாமலை போன்றோர் இடதுசாரி பின்புலம் கொண்டவர்களாக இருக்கிறார்களே?
நான் திராவிட இயக்கச் சிந்தனையிலிருந்து வந்தாலும் இடதுசாரி சார்புடையவன் தான்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் உங்களோடு பணியாற்றிய வி.ஐ.சுப்பிரமணியன் பற்றி கூற முடியுமா?
அவர் பண்பாட்டுவாதி அல்ல. கறாரான மொழியியல்வாதி. நம்பமுடியாத நேர்மையாளர். இந்த அளவுக்கு நேர்மையாக இருக்க முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு நேர்மையாளர்.

சமீபத்தில் ஐராவதம் மகாதேவன், திராவிடமும் ஆரியமும் வெவ்வேறு இனங்கள் அல்ல, வேறுவேறு மொழிகள் என்று கூறியுள்ளாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?
அவர் ரொம்ப நாளா இப்படி பேசிக்கிட்டு இருக்கார். பண்பாட்டு ரீதியாகவும், அறிவியல்பூர்வமாகவும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்கின்றோம்னு எப்படி இங்கே பேச முடியுது. அதற்கு ஒரு பின்புலம் இருக்கணும்ல. இது அவரைப் போன்ற மேல் ஜாதி பிராமணர்களின் ஆசை.
ஆனால், ஐராவதம் மகாதேவன் தானே சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்று கூறினார்?
நிர்ப்பந்தத்தால்தான் அப்போது அவர் அப்படி கூறினார்.
பிஜேபி, கழகங்கள் இல்லா தமிழகம் கவலைகள் இல்லா தமிழகம்னு ஒரு கோஷம் வைக்குறாங்களே..
கற்பனை. அது அவங்க ஆசை. இந்தியா முழுக்க இந்துக்கள் நாடா மாத்தணும்னு ஆசைப்பட்டது மாதிரி, கழகங்கள் இல்லா தமிழகம் வரணும்னு ஆசைப்படுறாங்க. அது ஐம்பது வருஷத்துக்கு நடக்காது. அதுக்கப்புறம் அது நடக்கலாம்; இல்லை நடக்காமல் போகலாம். ஆனால் உறுதியா ஐம்பது வருஷத்துல அது நடக்காது.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளை மட்டும் சுட்டிக்காட்டி திராவிட கட்சிகள் ஊழல் நிறைந்தது, திராவிடம் தோல்வியடைந்தது என தேசிய கட்சிகள் கூறுகின்றன. இங்குள்ள சில தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் திராவிடத்தால் வீழ்ந்தோமென்று சொல்லி பெரியார் வரை எதிர்க்கிறார்கள். இந்தச் சூழலை எப்படிப் பார்ப்பது?
தேசிய கட்சிகளைப் போலவே தமிழ்த் தேசிய கட்சிகளும் தங்களுடைய ஆசையைத்தான் சொல்றாங்க. திராவிட கட்சிகளின் அரசியல் தோல்வி, முழு தோல்வி ஆகாது. அதை வைத்துக்கொண்டு பேசும் தமிழ் தேசியவாதிகளும் தோத்துப்போவாங்க. இங்கே திராவிட சிந்தனைகளால் தான் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கு. இந்தியாவில் தமிழ்நாட்டுல மட்டும்தான் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் போடும் வழக்கம் இப்போது இல்லை. கறந்த பால் மடி புகாதுங்குற மாதிரி தமிழ்நாட்டு மக்களை இனிமேல் சாதிப் பெயர் போட்டு எழுதவைக்க முடியாது. அப்படி எழுதுவதை அருவருப்பாகப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
இந்தியா இந்துக்கள் நாடுன்னு சொல்ற பிஜேபி, அந்த கோஷத்தை தமிழகத்திலும் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களே...
பிஜேபி தன்னால் செய்ய முடியாத சாத்தியமில்லாத வேலையை செஞ்சுக்கிட்டு இருக்கு. கிறிஸ்தவத்தையும் தமிழையும் பிரிக்க முடியுமா? மாதா கோயிலுக்குச் செல்லும் என் மனைவியையும் பிள்ளைகளையும் இவர்களால் தடுக்க முடியுமா? உடல் நலமில்லாத குழந்தைகளை மசூதிக்கு கூட்டிபோய் தண்ணீர் ஓதும் வழக்கத்தை நிறுத்த முடியுமா? பிஜேபி-யின் முயற்சி இங்குப் பலனளிக்காது.
பேட்டி: மதரா  மின்னமபலம்

கருத்துகள் இல்லை: