வாழ்வையே விற்பதாகவும் வாங்குவதாகவும் பார்க்கச் சொல்கிற அத்து மீறல்; உழைப்புச் சுரண்டல்; முதலாளித்துவத்தின் கொடூரம்; இவைகள் தான் சன்னல்களுக்கு அப்பால் பிதுங்கித் தள்ளும் அடிவேர்கள்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ்-xp இயங்குதளத்தின் சேவையை அடியோடு நிறுத்தி செவ்வாயோடு செவ்வாயாக ஒரு வாரம் ஆகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் இயக்குநர் டிம் ரெய்ன்ஸ் ஏப்ரல் 8-ம் தேதி விண்டோஸ்-xp இயங்குதள சேவையை நிறுத்துவதாக அறிவிப்பதற்கு முன்னரே பிரிட்டனின் மிகப்பெரும் ஐந்து வங்கிகள் 100 மில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ 620 கோடிகள்) மென்பொருள் புதுப்பித்தலுக்காக செலவிட்டிருக்கின்றன.
ஆருத்ரா தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கட் வாங்கும் இந்தியாவில் இதன் நெருக்கடி மிகவும் பலமாக இருக்கிறது. இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் 34,000-க்கும் மேற்பட்ட கிளைகள் இதனால் பாதிப்படையலாம் என்கிறது இந்திய வங்கியாளர்களின் கூட்டமைப்பு. ஒரு நாளில் தோரயமாக 1,100 கோடி ரூபாய்க்கான வணிக வாய்ப்புகள் பாதிக்கும் என்றும் மூன்று நாளில் ஏற்படும் இழப்பு ஏறக்குறைய 330 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறது இவ்வமைப்பு.
2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ்- XP இயங்குதளம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று நிறுத்தும் அளவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லையென்பதுதான் பிரச்சனையே! அசென்ஷியஸ் கன்சல்டிங்கின் தரவுகளின்படி இந்தியாவில் 40 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரையிலான கணிணிகள் விண்டோஸ்- xp இயங்குதளத்தில்தான் இயங்குகின்றன.
இடையில் கொண்டுவரப்பட்ட விண்டோஸ் விஸ்டா படுத்துவிட்டது. அதன்பிறகு கொண்டு வரப்பட்ட விண்டோஸ்-7, இதுவரை வந்த தொகுப்புகளின் பிரதிபலிப்பாகவும் பளபளப்பாக தோன்றும் திரையைத்தவிர (புலிகேசியின் பாணியில் ஆட்டு மூத்திரத்தை விளம்பரப்படுத்தினாலே வாங்கி குடிக்கும் நுகர்வு கலாச்சாரத்தை மைக்ரோசாப்ட் கையாண்டது) அச்சு மாறாமல் அப்படியே வந்தது.
இங்கு இருந்துதான் பில்கேட்ஸ்க்கு எரிச்சல் ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது விண்டோஸ்-7ன் விற்பனையை உயர்த்துவதற்காக 2010-லேயே விண்டோஸ்- xpயின் விற்பனை நிறுத்தப்பட்டது. xpக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்பான மென்பொருள் புதுப்பித்தல்கள் மட்டும் தொடர்ந்த நிலையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளாய்ட் கணினிகளின் சந்தையை பிடிக்கும் பொருட்டு சொட்டு மருந்தாக 2012 அக்டோபரில் விண்டோஸ்-8 சந்தையைத் தொட்டது. (நீங்கள் கணினியை பயன்படுத்துவது குறித்த தகவல்களை உளவு பார்ப்பதில், விண்டோஸ் 8 பல மடங்கு முன்னேறிய ஒன்று என்பது தனிக்கதை.)
இப்பொழுதும் வாடிக்கையாளர்கள் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. எச்சரிக்கை மேல் எச்சரிக்கையாக விடுத்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். போர்ப்ஸ் இதழ் மைக்ரோசாப்டிற்கு தன் கரிசனத்தை இப்படியாக வெளியிட்டது; மூன்றில் ஒரு பங்கு மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் விண்டோஸ்- xp இயங்குதளத்தைப் பயன்படுத்துவதாகவும் 36 சதவீதம் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கைக்குப் பின்னரும் தொடர்ந்து xp இயங்குதளத்தையே பயன்படுத்துவதாகவும் தெரிவித்ததோடு நில்லாமல் இதிலிருந்து தப்புவது எப்படி என்று 10 விதமான ஆலோசனைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது.
நம்மவர்கள்தான் ஆகச் சிறந்த அடிமைகள் ஆயிற்றே! ரிசர்வ் வங்கி கடந்த மாதம் முதலே வங்கிகளுக்கு மென்பொருள் புதுப்பித்தல் தொடர்பாக நினைவூட்டலை ஊட்டியது. இந்தியாவில் 16 சதவீதம் அளவிலான ஏடிஎம்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்கின்றனர். பணம் எடுப்பதற்கும் வங்கி கணக்குகளை சரிபார்ப்பதற்கும் மிகவும் எளிய விண்டோஸ்- xp இயங்குதளமே போதுமானது எனும் பொழுது தவிடு தின்னும் அரசனுக்கு அமைச்சர் முறம் பிடித்த கதையாக வலுக்கட்டாயமாக இயங்குதளத்தை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன இந்தியப் பொதுத்துறைவங்கிகள். விண்டோஸ்- xp இயங்குதளம் மாற்றப்படா விட்டால் வைரசுகளாலும் ஹேக்கர்களாலும் மிகப்பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். இது ஒரு அளவில் தொழில்நுட்ப பிரச்சனைதான். ஆனால் யாருக்கு? பில்கேட்ஸின் தொழிலில் ஏற்படும் இலாபத்தின் மீதான நுட்பப் பிரச்சனை இது.
வைரசுகள், ஹேக்கர்களின் பங்கு என்ன? நடுத்தரவர்க்கம் நைஜீரியாக்காரனை ஹேக்கராக நினைத்துக் கொண்டிருக்கிறது. மொசார்ட்டும் சிஐஏவும் ஊடுருவ சாத்தியம் இல்லாத கணினிகள் ஏதாவது இருக்கிறதா? முதலாளித்துவ சமூகத்தில் மருந்துகளுக்காகத்தான் நோய்களே தவிர, நோய்களுக்கு மருந்துகள் இல்லையென்பது அனைவருக்கும் தெரியும். ரத்தமும் சதையுமாக இருக்கிற மனிதனின் பாதுகாப்பிற்கே இந்த முதலாளிகள் மயிரளவு மதிப்பும் தரவில்லையெனும்போது ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் வெறும் சிலிக்கான் சில்லில் இயங்கும் கணினிகளை வைரஸிருந்து பாதுகாக்கப் போகிறது என்பது நேர்மையான மோசடி. எப்பொழுதெல்லாம் ஆன்டி வைரஸ் இருக்கிறதோ அப்பொழுதுவரை கணினிகளைத் தாக்கும் வைரஸ்கள் இருக்கும் என்பதுதான் இலாபமீட்டும் விதி என்கிற பொழுது நமது அறிவுஜீவிகள் எதற்கு முட்டுக் கொடுக்கின்றனர் என்பதைப் பரிசீலிக்க வேண்டும். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் விண்டோஸ்- xp இயங்குதளம் நிறுத்தப்படுகிறது என்பதை உங்களில் யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்?
“நீ நெல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; இருவரும் ஊதி ஊதி தின்போம்” என்ற கணக்காக இந்திய மைக்ரோசாப்ட் கிளையின் பொது மேலாளர் அம்ரிஷ் கோயல் ‘பல்வேறு நிறுவனங்கள் இயங்குதளம் குறித்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை எனினும் சிறப்பு சலுகை விலைகளை மைக்ரோசாப்ட் தரத் தயாராக இருப்பதாக’ காலால் இட்ட உத்திரவை தலையால் அறிவிக்கிறார். மற்றபடி இதன் சாரம் இந்தியாவில் காசுகொடுத்து வாங்கிய சற்றேறக் குறைய 40 இலட்சம் விண்டோஸ்- xp குறுந்தகடுகளை நங்கநல்லூர் ஆஞ்சனேயருக்கு வடமாலையாக சாத்துங்கள், காணிக்கையை மைக்ரோசாப்டுக்கு செலுத்துங்கள் என்பது தான்.
இப்பிரச்சனையின் ஊடாக மூன்றுவிதமான கும்பல்களை நாம் அடையாளம் காணவேண்டியிருக்கிறது.
முதலாவதாக இதை வெறும் இயங்குதள பிரச்சனையாக பார்க்கிறவர்கள், சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கத்தை சமூக இயக்கமாக பிரதானப்படுத்துகிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பும் இடதுசாரி மாணவர் குழுக்கள் இதில் அடக்கம். உபுண்டு மற்றும் பொதுவான மென்பொருட்களை உருவாக்குவதன் மூலம் இதை தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது பிரச்சனையை ஒரு போதும் தீர்க்காது. மேலும் இது பிரச்சனையை தீர்க்கும் வழியுமல்ல.
நாம் இவர்களிடத்தில் முன் வைக்கும் வாதம் இது தான்; மைக்ரோசாப்டைத் தவிர்த்து மெக்டோனால்ட்ஸ் (உணவு விடுதிகள்) கடந்த ஆண்டு பல மில்லியன் பவுண்ட் கோழி இறக்கைகள் எஞ்சியிருப்பதாகவும், அவற்றை எப்படி விற்று தீர்ப்பதென வருடாந்திர அறிக்கைகளில் விவாதித்திருக்கிறார்கள். அவர்கள் வந்தடைந்த முடிவுகளில் ஒன்று மக்கள் வாங்கும் சக்தியற்று இருக்கிறார்கள் என்பது. இதற்காக ஒருவர் இலவச கோழி இறக்கை இயக்கத்தை நடத்துவது சரியாக இருக்குமா? அல்லது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி இலாப வெறியை அம்பலப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். மற்றபடி இலவச மென்பொருட்களுக்கான இயக்கம் வெறும் பிழைப்புவாதமன்றி வேறல்ல.
இரண்டவாதாக ‘முதலாளித்துவ எதிர்ப்பு’ என்பதை வார்ப்புரு அரசியல் (Template Politics) என்று கருதுபவர்கள். அபரிதமான உற்பத்தி, மூலதனக் குவியல் போன்ற சீரழிவுகளை அபாயகரமான முதலாளித்துவம் என்று வரையறுப்பார்களே தவிர முதலாளித்துவம் அபாயகரமானது என்று சொல்வதில்லை. வரலாறு இவர்களை பொறுக்கித் தின்பவர்களாகத்தான் பார்க்கிறது. ஓராயிரம் முறை இவர்கள் இதைச் சொல்லும் பொழுது ஒரு இலட்சம் முறை அது தவறு என்று திருப்பிச் சொல்வதற்கான வாய்ப்புகளைத் முதலாளித்துவம் தான் தருகிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். விண்டோஸ்- xp திரும்பப் பெற்ற விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? அபாயகரமான முதலாளித்துவமா? அல்லது முதலாளித்துவம் அபாயகரமானதா?
மூன்றாவதாக பிரச்சனைகளை களைய தர்மகர்த்தா முறையை ஆதரிப்பவர்கள். ‘அறம் செய்ய விரும்பு’ என்று முதலாளிகளிடத்தில் கோரிக்கையை வைத்துவிட்டு தொழிலாளிகளிடத்தில் நைச்சியமாக ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று கூறும் நீதிமான்களும் இதில் அடக்கம். மேலும் மதங்கள், மடங்கள், ஆன்மீகப் பெரியவர்கள் எல்லாம் வரிசைகட்டி நிற்கிறார்கள். ஏற்பது இகழ்ச்சி என்பதால் தான் விவசாயிகள் கடன் கட்டமுடியாமால் தன்மானம் காக்க தற்கொலை செய்கிறார்கள். ஆனால் அறம் செய்ய விரும்பும் கூட்டம் ஒரு பக்கம் காசு கொடுத்து வாங்கிய இயங்குதளம் இயங்காது என இறுமாப்புடன் கூறுவதுடன் மறுபக்கம் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்று கவுச்சியுடன் அம்மணமாக நிற்கிறது. மல்லையா போன்றவர்கள் திவாலை அறிவித்துவிட்டு மக்கள் பணத்தை சூறையாடுகிறார்கள். உரிமையை தொலைத்த வாடிக்கையாளர்கள் அவலநிலையில் நீதிக் கருத்துகளில் மோசடியாக்கப்படுகிறார்கள்.
இப்பேற்பட்ட கார்ப்பரேட் மாஃபியாவான பில்கேட்சைத்தான் மாணவர்களின் முன்னோடியாக ஊடகங்களும், கல்வி முதலாளிகளும் இந்தியாவில் முன்னிறுத்துகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்தியர் தலைவராக வந்தார் என்றெல்லாம் வெட்கம் கெட்ட முறையில் துள்ளிக் குதிக்கிறார்கள்.
ஒரு இயங்குதள விற்பனையை வைத்து முதலாளித்துவத்தை எடைபோட அவசியமேயில்லை. உண்மையில் சொல்லப்போனால் தொகுப்பாக நாம் வைத்த வாதங்கள் நடுத்தரவர்க்கத்தின் கோரிக்கையாகத்தான் எஞ்சியிருக்கிறது.
ஆண்டைக்கும் அடிமைக்கும் நடக்கும் வர்க்கப்போராட்டத்தில் அதாவது ‘ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கானவர்களின்’ போராட்டத்தில் நடுத்தரவர்க்கம் வாழ்வையும் இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும், வாங்குவதாகவும் விற்பதாகவும் பார்த்துப் பழக்கப்பட்ட முதல் கூட்டம். இதே முதலாளித்துவத்தின் கொடூரத்தை பாட்டாளி வர்க்கம் அதாவது தன் உடல் உழைப்பை விற்றுப் பிழைப்பவர்கள் எந்தளவுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நோக்கும் பொழுது நமக்கான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு ‘இரு கைகளாலும் இரு முனைகளிலும் போரடினால்’ மட்டும் போதாது பல முனைகளிலும் போராட வேண்டும் என்பதையே இச்செயல் நமக்கு உணர்த்துகிறது.
சமூக விஞ்ஞானத்தில் சாரமாக ஒன்றை முன்வைப்பார்கள்; ‘முதலாளித்துவம் தனக்கு சவக்குழி தோண்டுவோரையும் சேர்த்தே உற்பத்தி செய்கிறது’. அப்படியானால் விண்டோஸ் இயங்குதளத்தில் இதை எழுதி அதன் மூலமாகவே நீங்களும் வாசிக்கீறிர்கள் என்பது தற்செயலான நிகழ்வல்ல!
- தென்றல்.vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக