வியாழன், 17 ஏப்ரல், 2014

அழகிரியை பாஜக பக்கம் ஓரம்கட்டும் சுயநல நண்பர்கள் !


அண்ணன் ‘ஏதோ ஒரு அளவுக்கு’ தாக்கத்தை ஏற்படுத்துவார்!
அண்ணன் ‘ஏதோ ஒரு அளவுக்கு’ தாக்கத்தை ஏற்படுத்துவார்!
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான சமரசத்துக்கு அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டதால் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்க பிரதமர் வேட்பாளரான மோடியை சந்திக்க ‘அப்பாயின்மென்ட்’ கேட்டு காத்திருக்கிறார் மு.க. அழகிரி.
நாளை (வியாழக்கிழமை) சந்திப்பு நடைபெறலாம் என்றும், அதன்பின் அழகிரியின் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.
தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரி தேர்தலுக்குள்ளாக தன்னை கட்சி மேலிடம் அழைத்துப் பேசும் என எதிர்பார்த்திருந்தார். தே.மு.தி.க.வுடனான கூட்டணியை குலைத்தது, வைகோவை வீட்டுக்கு வரவழைத்தது, தி.மு.க. வேட்பாளர்களை விமர்சனம் செய்து அவர்களைத் தோற்கடிப்பேன் எனக் கூறியது போன்ற காரணங்களால் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அழகிரி மீது இன்னமும் கடும் கோபத்தில் உள்ளனர்.
அதனால்தான், அழகிரிக்காக தூது சென்ற கே.பி.ராமலிங்கம் எம்.பி.யை கருணாநிதி எச்சரித்து அனுப்பினார்.  சுற்றி இருப்பவர்களின் சொல்கேட்டு பாஜக பக்கம் அழகிரி சென்றால் அவரது திராவிட பாரம்பரிய வாக்கு வங்கி காலியாகிவிடும். ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் பலரின் நம்பிக்கையை பெற்றுள்ள அழகிரி அதை இழப்பது ஒரு தற்கொலைக்கு ஒப்பான நிலையாகும்


அழகிரியிடம் சமரசம் செய்துகொண்டால் இனி எதிர்காலத்தில் கட்சி, பெரிய பிளவை சந்திக்கும் என்றும், அதனால் கட்சிக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது. இதனால், அழகிரியுடன் இனி சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
பிற்காலத்தில் சமரசமாகப் போனால்கூட ஏற்கெனவே அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அழகிரிக்கு இருக்காது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
சமரசத்துக்கான அனைத்துக் கதவுகளும் அடைபட்ட நிலையில், மதுரைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 13ம் தேதி கருணாநிதி வந்தபோதுகூட அவரைச் சந்திக்க அழகிரி விரும்பவில்லை. இதனால், கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, கருணாநிதி சென்னை சென்ற பின் மதுரை வந்தார் அழகிரி.
நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் மூலம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தனது பலத்தை அழகிரி நிரூபிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அழகிரி, பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதற்காக தனது ஆதரவாளர்கள், நண்பர்கள் உள்பட பலரிடமும் ஆலோசனை செய்த பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பிரசாரம் செய்துவரும் மோடியை சந்திக்க அழகிரித் திட்டமிட்டுள்ளார். இந்த முடிவை பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த நிர்வாகி ஒருவரிடம் அழகிரி தெரிவித்துவிட்டார்.
மோடியை அழகிரி நாளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். எங்கு சந்திப்பது என்பது பற்றி மோடி அலுவலகம் கூறிய பின்னரே அதற்கான தகவலை அழகிரியிடம் தெரிவிக்க இருப்பதாக பாரதிய ஜனதா மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
இது குறித்து அழகிரியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவருடன் பேசியபோது, “தமிழகம் வரும் மோடியை அண்ணன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் நிஜம்தான். தென்மாவட்டங்களுக்கு நரேந்திர மோடி வரும்போது இந்த சந்திப்பு நிகழும்.
அதற்குப் பின் வரும் 19 அல்லது 20-ம் தேதிகளில் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிப்பது என்பது குறித்து அண்ணன் வெளிப்படையாகவே அறிவிப்பார்.
அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக உள்ள ஒரே கூட்டணி பாரதிய ஜனதாதான். அதுமட்டுமின்றி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் அணியும் அதுதான். எனவேதான் அண்ணன் இந்த முடிவை எடுத்துள்ளார். அண்ணனின் அறிவிப்பு வெளியானதும் ஆதரவாளர்கள் வெளிப்படையாக களத்தில் இறங்கி தி.மு.க.வை தோற்கடிப்பார்கள்” என்றார்.
அழகிரி வெளிப்படையாக ஆதரவு அளித்தால், தென்மாவட்டங்களில் பா.ஜ.க.வுக்கு தற்போது உள்ளதைவிட சற்று அதிகமான பூஸ்ட் கிடைக்கும் என்பது உண்மைதான்.
ஆனால், அதுவல்ல முக்கியம். தமிழகத்தில் ஒவ்வொருவராக மோடி பக்கம் திரும்புகிறார்கள் (ரஜினி, விஜய், அழகிரி..) என்பது, வாக்காளர் மத்தியில் ஒருவித சைகாலஜிகல் இம்பாக்ட்டை கொடுக்கலாம் என்பதே முக்கியம்!
யோசித்துப் பார்த்தால், இது தி.மு.க.வை பாதிப்பதைவிட, அ.தி.மு.க.வின் ‘பிரதமர் கனவையே’ அதிகம் பாதிக்கும்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: