வெள்ளி, 18 ஏப்ரல், 2014

மகனை கொலை செய்த வாலிபரின் மரண தண்டனையை தடுத்த தாய்

டெஹ்ரான் : ஈரானில் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரின் தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் தாய் மன்னித்து விடுவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரானில் உள்ள நவுஷரார் என்ற நகரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ஹுசைன் ஷெடாக். இவர் முன்னாள் கால்பந்து வீரர். இவரது மனைவி சமீரா அலிநிஜாத். இவர்களுக்கு 2 மகன்கள். ஒருவர் ஏற்கனவே பைக் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மற்றொரு மகனை, பலால் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு தெருவில் ஏற்பட்ட சண்டையின் போது கத்தியால் குத்தி கொலை செய்தார். போலீசார் பலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பலாலுக்கு பொது இடத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


இதனையடுத்து பலாலை தூக்கில் போட நவுஷரார் நகரத்தில் உள்ள பொது தூக்கு மேடைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். டிவி கேமரா மேன்களும் குவிந்தனர். மகனை இழந்த அப்துல் கனியும் சமீராவும் அங்கு வந்தனர். அப்போது பலாலை தூக்கில் ஏற்றி தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் தயாராயினர். அப்போது வேகமாக அங்கு வந்த சமீரா கதறி அழுத படியே பலாலின் முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றினார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பலால் முகத்தில் பளார் பளார் என மாறி மாறி சரமாரியாக அறைந்தார்.

அதை கண்டு அதிகாரிகள் உள்பட அனைவரும் திகைத்து நின்றனர். ‘ஏற்கனவே ஒரு மகனை விபத்தில் இழந்து விட்டேன். இன்னொரு மகனையும் இவன் (பலால்) கொலை செய்து விட்டான். யாருமில்லாத வீட்டில் வாழ்வது எப்படிப்பட்ட கொடூரம் என்பது எனக்கு தெரியும். இவனை மன்னித்து விடும்படி என் தாயும் உறவினர்களும் என்னிடம் கூறினர். இப்போது, மகனை கொன்ற பலாலை அறைந்த பிறகு மனம் ஆறுதல் அடைந்தது. அவனை மன்னிக்க விரும்புகிறோம்Õ என்று கண்ணீருடன் கூறினார். பலாலும் பொதுமக்கள் முன்னிலையில் கதறி அழுதபடி தனது தவறுக்கு வருந்துவதாகவும் மன்னித்து விடவேண்டும் என்றும் கெஞ்சினார். இதையடுத்து பலாலின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டது.dinakaran.com

கருத்துகள் இல்லை: