வியாழன், 17 ஏப்ரல், 2014

அம்பேத்கரியம் பேசி தலித் மக்களை இந்துமத வெறியர்களிடம் கூட்டிக் கொடுப்பவர்கள்


மோடியுடன் 'சமூக நீதி' காக்க புறப்பட்ட தலித் போராளி ராம் விலாஸ் பஸ்வான்
பாபா சாகேப் அம்பேத்கர் கொள்கைகளின் வழிகாட்டிகளாக சுயதம்பட்டம் அடித்து வந்த மூன்று தலித் ராமன்களின் கதை இது. ராம்தாஸ் அதவாலே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ் ( இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இவ்வாறே அழைக்கப்பட்டார்; இப்போது உதித் ராஜ் என்று பெயர் மாற்றி உள்ளார். எனினும் முதல் பெயரே அவருக்கு பொருத்தமாக உள்ளது.) ஆகியோர் அதிகாரத்தின் அற்பப் பருக்கைகளை பொறுக்குவதற்காக தமது கொள்கைகளை பா.ஜ.க.வின் தேர்ச் சக்கரத்தில் நசுங்க அனுமதித்துள்ளனர். இவர்களில் பஸ்வான் தன்னை தேர்ந்த பிழைப்புவாதியாக ஏற்கனவே நிலைநிறுத்திக் கொண்டவர். ரயில்வே, தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, சுரங்கம், உருக்கு, ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சராக வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பணியாற்றியவர். மோடியுடன் ‘சமூக நீதி’ காக்க புறப்பட்ட தலித் போராளி ராம் விலாஸ் பஸ்வான் 
மற்ற இரண்டு ராமன்களும் மிகச் சமீப காலம் வரையிலும் பாரதிய ஜனதாவின் வகுப்புவாதத்திற்கு எதிராக  முழக்கமிட்டவர்கள்.
இவர்களில்அதவாலேயின் சந்தர்ப்பவாதம் அவர் 2009 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்று தனது மந்திரியாகும் கனவு சிதைந்து போனதை அடுத்து வெளிப்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்த தனது ஆசான்களை சபிக்கத் தொடங்கினார். சித்தார்த் விகாரின் பாழடைந்த அறையிலிருந்து மீட்டு குளிரூட்டப்பட்ட அறையில் மராட்டியத்தின் காபினட் மந்திரியாகும் வாய்ப்பை வழங்கியது, காங்கிரஸ். உதித் ராஜின் முந்தைய பா.ஜ.க எதிர்ப்பு நிலையிலிருந்து அடித்த குட்டிக்கரணத்தை விளக்குவது சற்று சுவாரஸ்யமாக இருக்கும். இவர் ராஜஸ்தானின் கோட்டா வேதாகமக் கல்லூரி மற்றும் பாதிரியார் பயிற்சி பட்டறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்று டாக்டர் உதித் ராஜ் ஆனார்.
ஒரு வகையில் இந்திய ஜனநாயகம் கண்டுள்ள சரிவோடு ஒப்பிடுகையில் தலித் தலைவர்களின் இந்த சந்தர்ப்பவாத வித்தைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த ஏதுமில்லை. இதனை எல்லோரும் தான் செய்து வருகிறார்கள். பிறகு, ஏன் தலித் தலைவர்கள் செய்தால் மட்டும் ஆத்திரம் வருகிறது? இன்னும் சொல்லப் போனால் இவர்களில் பலரும் இதுகாறும் காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டிருந்தவர்கள் தான். அப்போது வராத கோபம் பா.ஜ.க.விடம் போனால் மட்டும் வருவது ஏன்? காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை என்பது உண்மைதான். எனினும் பா.ஜ.க குறித்த எச்சரிக்கை உணர்வு அவர்கள் இதுகாறும் என்ன செய்து வந்தார்கள் என்பதோடு அது சார்ந்து உருவான மக்கள் கருத்தையும் வைத்து எழுந்திருக்கிறது. காங்கிரஸை போலல்லாது பா.ஜ.க ஒரு சித்தாந்தத்தால் உந்தப்பட்ட கட்சி. அதன் மைய சித்தாந்தத்தை சுற்றியிருக்கும் அலங்காரச் சொல்லாடல்களை நீக்கி விட்டுப் பார்த்தால் அது பாசிஸத்தின் சித்தாந்தம் என்பது விளங்கும். இது அம்பேத்கர் கொள்கைகளுக்கு நேரெதிரான ஒன்று. நிலவுகின்ற சூழலுக்கு தம்மை தகவமைத்துக் கொள்ளும் பொருட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆதரிப்பதாக பா.ஜ.க கூறலாம். ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை கவரும் நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட்டாலும் அவர்களின் சித்தாந்த மனம் இந்த மக்கள் பிரிவுக்கு நிச்சயமாக எதிரானது தான். அம்பேத்கருக்கு துதி ஆராதனை செலுத்திக் கொண்டே அவர் கொள்கைகளுக்கு துரோகமிழைக்கும் இந்த தலித் தலைவர்களின் செயல்பாடுகள் வெறுக்கத்தக்கவை.
அம்பேத்கரின் கொடை!
தனது ஆய்வின் தொடக்கத்தில் அம்பேத்கர் இந்து மதத்தை சீர்திருத்தும் எண்ணத்தோடு இருந்தார். சாதிகளை மூடுண்ட வர்க்கங்கள் என்று கருதினார். அகமண முறையால் இந்த சாதியமைப்பு மூடுண்டதாக நினைத்தார். சாதிக் கலப்பு திருமணங்கள் மூலம் இதில் ஒரு உடைவு ஏற்படும் என்று எண்ணினார். அந்த உடைவு சாத்தியமான பிறகு சாதிகள் ஒழிந்து வர்க்கங்களாக பண்பு மாற்றம் பெறும் என்று நம்பினார். இதனடிப்படையில், அவரது ஆரம்ப கால திட்டங்கள் இந்து சமூகத்தின் தீமைகளை அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்துவதாக இருந்தது. அதன் மூலம் இந்து மதத்தின் சீர்திருத்ததிற்காக முற்போக்கு எண்ணம் கொண்டோரின் கவனத்தை ஈர்ப்பது என்று இருந்தது.
அதில் கிடைத்த மிக மோசமான அனுபவம் அவரை வேறு விதமாக சிந்திக்க வைத்தது. தர்ம சாஸ்திரங்களில் வேர் கொண்டுள்ள இந்து சமூகத்தை சீர்படுத்த இயலாது என்று தெளிந்தார். இந்த தர்ம சாஸ்திரங்களை தகர்த்தால் ஒழிய சாதிகளை ஒழிக்க முடியாது என்று தீர்மானித்தார். இறுதியாக, தனது இறப்புக்கு முன்னதாக சாதிகளை ஒழிக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்தார். அதன்படி, பவுத்ததில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடைய இந்த முடிவு ஒரு பின்னறிவு அல்ல. சாதியொழிப்பு தான் அம்பேத்கரின் மையமாக எப்போதும் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் அவர் செய்தது அனைத்திலும் தலித் மக்களின் அரசியல் அதிகாரத்திற்காக நின்றார். தனது லட்சிய சமூகத்தின் கருத்தாக்கங்களாக அவர் போற்றிய சுதந்திரம், சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்திற்கு பாதகமான சாதியமைப்பை தகர்க்க நினைத்தார். வரலாற்று இயக்கப் போக்கை நிர்ணயிப்பதில் சில தர்க்கங்களும், விதிகளும் செயல்படுவதை மார்க்சியர்கள் அறிந்த முறையில் அவர் அறிந்திருக்கவில்லை. அதன் காரணமாக பயனீட்டுவாதம் (Pragmatism) என்ற கொள்கையை கடைபிடித்தார். தனது கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியர் ஜான் டிவேயிடமிருந்து இதனை பெற்றார்.
இந்துமத வெறியனிடம் சீடனாக பணியாற்றிய அதுவாலே ராமதாஸ்
இந்துமத வெறியனிடம் சீடனாக பணியாற்றிய அதுவாலே ராமதாஸ்
பயனீட்டுவாதம் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் செயல்படுத்தும் போது அவை பெறும் வெற்றியை அவற்றின் பொருத்தப்பாட்டிற்கு அளவுகோலாக கொண்ட ஒரு அணுகல்முறை. பயனீட்டுவாதம் நிரந்தரமான கோட்பாட்டு அணுகுமுறையை விட்டொழிக்கிறது. ஒரு கொள்கையின் நடைமுறை விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் அது பெறும் அர்த்தம், உண்மைத் தன்மை, மற்றும் பயனைத் தீர்மானிக்கிறது. நோக்கத்தின் நேர்மையும், கடைபிடிப்பவரின் தார்மீக நெறியும் அதன் மூலக் கொள்கையாக இருக்கும். அம்பேத்கரின் போராட்டங்கள் இதற்கு உதாரணமாக அமைகின்றன. பயனீட்டுவாதத்தின் மூலக் கொள்கையில் சமரசம் செய்ய நேர்ந்தால் பயனீட்டுவாதம் எந்த தவறையும் நியாயப்படுத்தும் ஒன்றாக சுருங்கி விடும். அம்பேத்கர் இயக்கத்தின் பின்காலப் பொழுதில் இது தான் நடந்தது. தலித் தலைவர்கள் அம்பேத்கரியம் என்ற பெயரில் தமது சொந்த நலன்களை தீவிரமாக துரத்தினர் எனலாம் அல்லது தலித் நலன்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர் என்றும் சொல்லலாம்.
இந்திய அரசியல் உருவாக்கிக் கொண்ட விதிப்படி உங்கள் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் நீங்கள் மக்கள் ஆதரவு பெற்றவராகி விடுவீர்கள். இந்த நச்சு வட்டம் அதன் தொடக்கப் புள்ளியை கடந்த பின், கட்டுப்படாமல் முன் சென்று கொண்டே இருக்கும். பன்னிரெண்டாம் வகுப்பே படித்த அதவாலே கோடிக்கணக்கான மதிப்புப் பெறும் சொத்துக்களையும் சேர்த்து விட்டு சிறப்புமிக்க கல்வியறிவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின்பால் உறுதியான கடப்பாடும் கொண்ட அம்பேத்கரின் பாரம்பரியத்திற்கு உரிமை கொண்டாடுவதற்கு மேலே கண்ட இந்திய அரசியல் வழமையே காரணம். இது அதவாலேக்கு மட்டுமல்ல; அரசியல் வியாபாரிகளாக மாறியுள்ள அனைத்து தலித் ராமன்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இவர்கள் அனைவரது வியாபாரமும் அம்பேத்கர் பெயரிலும், தலித் மக்களை மேம்படுத்துவதாக சொல்லியும் நடைபெறுகின்றன.
தலித் நலன் என்றால் தான் என்ன
பசுமை நிலம் நோக்கிச் செல்லும் அம்பேத்கரியர்கள் தலித் நலன் என்று ஜெபித்துக் கொண்டே ஓடுகிறார்கள். இவர்கள் அம்பேத்கர் காலத்திலும் இருந்தனர். அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியில் இணையும் தலித் தலைவர்களை விமர்சித்தார். காங்கிரஸ் ஒரு எரியும் வீடு என்றார். மராட்டியத்தில் அப்போது காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் ராவ் சவான் வீசிய வலையில் அம்பேத்கரியர்கள் விரும்பி வழுக்கி விழுந்தனர். தமது மாறுபட்ட புதிய இடம் தலித் மக்களை மேம்படுத்தும் என்றனர். அம்பேத்கர் மட்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவில்லையா? என்று தர்க்கம் புரிந்தனர். இப்போதும் அவர்களது தர்க்கங்களுக்கு குறைவில்லை.
பல பிரிவுகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவு தான் பா.ஜ.க. இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியத்தை பறைசாற்றும் அமைப்பு அது. பண்பாட்டையும், மதத்தையும் இணைத்துக் கொண்ட விபரீத ரசக் கலவையான இந்துத்துவத்தை பரப்பும் இவர்கள் அம்பேத்கரியர்களின் வெறுப்புக்குரியவர்களாக இருக்க வேண்டும். பல்லாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவுடன் ஒட்டுறவு இல்லாத நிலைமையே இருந்தது. ஆனால், இதற்கு மேலாக அப்படியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலித் மீன்களை பிடிக்க சமரசதா (அதாவ்து சமூக அமைதி – சமத்துவமல்ல) என்றொரு வலையை வீசி அதில் நல்ல பலனையும் கண்டுள்ளது. அதன் காரணமாக தலித் அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் இடையேயான சித்தாந்த வேறுபாடுகள் இன்று மங்கியுள்ளன. இதில், சுவாரஸ்யமான உண்மை என்னவெனில் இந்த தலித் பிரதிநிதிகள் ஆளும் வர்க்க மற்றும் ‘உயர்’ சாதிய கட்சிகளை தான் தமது காப்பகமாக கருதுகிறார்களே ஒழிய இடதுசாரிகளை அல்ல. தலித் தலைவர்களின் பல்வேறு தவறுகளை சற்று ஒதுக்கி வைத்து பார்த்தால் கூட இடதுசாரிகளே இவர்களின் இயற்கையான நண்பர்களாக இருக்க முடியும். ஆனால், அவ்வாறு இணைய முடியாமல் இருப்பதற்கான ஒரே காரணம் ஆளும் வர்க்க கட்சிகள் அளிப்பவற்றை இடதுசாரிகளால் வழங்க முடியாது என்பதால் தான்.
தலித்துகள் நலன் என்று சொல்லி எதற்காக இந்த குட்டிகரணங்கள் போடுகிறார்கள், அம்பேத்கரிய தலைவர்கள்? 90% தலித் மக்கள் நிலமற்ற கூலிகளாகவும், சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளாகவும், கிராமப்புற கைவினைஞர்களாகவும், சேரி வாழ் மக்களாகவும், நகர வாழ்க்கையோடு இணைந்த முறைசாரா தொழில்களில் ஈடுபடுகிறவர்களாகவும் துயர் மிகுந்த வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பதை இந்த அம்பேத்கரிய தலைவர்கள் அறியாதவர்களா? அம்பேத்கரே இந்த உண்மையை தனது வாழ்வின் அந்திமக் காலத்தில் தான் உணர்ந்து தனது இயலாமையை எண்ணி வருந்தினார். மிகுந்த தந்திரங்களோடு செய்யப்பட்ட சூழ்ச்சிமிகு நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் பசுமைப் புரட்சி திட்டங்கள் மூலம் கிராமப்புறங்கள் வரையிலும் முதலாளித்துவ உறவுகளை  விரிவாக்கம் செய்ததில் இந்த தலித் தலைவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அதே நேரத்தில், இதனால் பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தும் எந்த நடவடிக்கையையும் இவர்கள் மேற்கொண்டதில்லை. தலித் மக்களின் வாழ்க்கையில் இது பெரும் கேட்டை விளைவித்துள்ளது. அவர்களுக்கிடையே இருந்த கூட்டுச் சார்பை சிதைத்து பணக்கார வர்க்கத்தின் கொடிய அடக்குமுறைக்கு உட்படுத்தியது. அது மட்டுமில்லாமல், ‘உயர்’சாதி நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து பின்தங்கிய சூத்திர விவசாயிகளை விடுவித்து பார்ப்பன கொடுங்கரங்களுக்குள் கொண்டு வந்தது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் தலித தலைவராக சொல்லிக் கொள்ளும் உதித் ராஜ்
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் தலித தலைவராக சொல்லிக் கொள்ளும் உதித் ராஜ்
இந்த இடைபட்ட காலத்தில் இடஒதுக்கீடு புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டு மறைந்து போனது. கிராமப்புற ஏழை தலித் மக்கள் இடஒதுக்கீடு வாய்ப்புகளை தமது நகர்ப்புற பங்காளி தலித்கள் பறித்துக் கொள்வதை உணர்ந்தனர். கடைசியில் அந்த இட ஒதுக்கீட்டிற்கும் வந்தது ஆபத்து. நடைமுறைக்கு வரத் துவங்கிய புதிய தாராளமயக் கொள்கைகள் இட ஒதுக்கீட்டிற்கு முழு முற்றுப்புள்ளியை வைத்தன. நமது ராமன்கள் கடினமான இந்த உண்மைகளை மறந்து விட நினைக்கிறார்கள். இந்த ராமன்களில் ஒருவரான உதித் ராஜ் அழிந்தொழிந்து போன இட ஒதுக்கீட்டை ஒற்றைச் செயல்திட்டமாக வைத்து நாடு தழுவிய அமைப்பைக் கட்டினார். ஆளும் வர்க்கங்களின் இட ஒதுக்கீடு சார்ந்த மோசடிகளை அம்பலபடுத்தி மக்கள் இயக்கங்களை கட்டுவதற்கு பதிலாக, இட ஒதுக்கீடு என்ற பொய் மானைக் காட்டி மேலும் மக்களை ஏய்க்க ஆளும் வர்க்கங்களுக்கு உழைக்கிறார்கள். 90% தலித் மக்களின் தேவையை உணராதவர்களா இவர்கள்? அவர்களுக்கு நிலம், நியாயமான வேலை, இலவச சமச்சீர் கல்வி, உடல்நலம், ஜனநாயக வெளிப்பாட்டுக் களங்கள், மற்றும் முன்னுதாரணமிக்க சாதி எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவையே முதன்மையான தேவைகள்.
பா.. ராமனின் அனுமன்கள்
நமது ராமன்கள் சில சோற்றுப் பருக்கைகளுக்காக தலித் நலன்களை காவு கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த தலித் ராமன்களில் உதித் ராஜ் மெத்தப் படித்தவர். நேற்று வரை சங் பரிவாரம் மீது மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்தவர். ‘தலித்களும் மதச் சுதந்திரமும்’ என்ற என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் பா.ஜ.க மீதான அவரது தாக்குதல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவர் முதலில் மாயாவதியை துரத்துவதற்காக தனது வியாபார உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். அதில் அவர் தோல்வி கண்ட நிலையில் தலித் மக்களின் ஜென்மப் பகைச் சக்தியான பா.ஜ.கவில் அடைக்கலமாகி உள்ளார். தனக்கு தலித் மக்களிடேயே உள்ள சிறு ஆதரவை அடிப்படையாக வைத்து பா.ஜ.கவுக்கு அனுமன் சேவை வழங்க முன்வந்துள்ளார். உதித்ராஜ் போலல்லாது மற்ற இரண்டு ராமன்களும் – பஸ்வான் மற்றும் அதவாலே ஆகியோர் தமது தலித் ஆதரவு தளங்களை மூலதனமாக வைத்து தங்களுக்குரிய பங்குகளை உயர்த்திக் கொண்டு உள்ளனர். மொத்தம் ஏழு தொகுதிகளை பஸ்வான் பெற்றுள்ளார். அவற்றில் மூன்றை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். தனக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியுடன் ஒரு மக்களவை தொகுதியையும் பெற்றுள்ளார், அதவாலே.
மறைந்த நாம்திவோ தாசலின் அடியொற்றிய காகிதச் சிறுத்தையாக முன்பு வலம் வந்தவர், அதவாலே. அம்பேத்கர், அம்பேத்கரிய தலித்கள் என்றால் வெறிபிடித்த பகைஞனான பால் தாக்கரேவின் மடியில் சீடனைப் போன்று விழுந்து கிடக்கிறார், அதவாலே. இந்த குட்டித் தலைவர்கள் தமது பழைய கூட்டாளிகளால் ‘அவமானப்பட்ட தலித்களை’ ஆற்றுபடுத்தும் நோக்கத்திற்காக பா.ஜ.கவுடன் இணைந்ததாக விளக்கம் கொடுக்கிறார்கள். தாங்கள் அவமானப்பட்டதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதவாலேயின் அவமானம் அவருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதை அடுத்து தொடங்கியது. தலித் மக்கள் போராடி உயிர்த் தியாகம் செய்து அம்பேத்கர் பெயர் சூட்டப் போராடிய மரத்வாடா பல்கலைக்கழகத்தின் தற்போதைய பெயரையே நீட்டிக்க முடிவு செய்த போது எதிர்ப்பின்றி இசைந்தார், அதவாலே. தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் புரிந்த கிரிமினல்கள் மீதான வழக்குகள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறப்பட்ட போதும் மவுனமாக வெட்கமின்றி இருந்தார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. பஸ்வான் மற்றும் அதவாலேயின் முழு அரசியல் வாழ்க்கையே தலித் மக்களுக்கு துரோகமிழைத்த வரலாறு தான்.
பா.ஜ.கவின் ராமனுக்கு அனுமன் சேவை செய்ய புறப்பட்டுள்ளார்கள், இவர்கள் இப்போது. இவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து இவர்களது உண்மை முகத்தை அறிந்து கொள்ளவதற்கு இது சரியான நேரம் அல்லவா? vinavu.com

கருத்துகள் இல்லை: