சனி, 12 ஏப்ரல், 2014

அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது தவ்ஹீத் ஜமாத்!

சென்னை: அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன் தகவல் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக-வை அதிமுக விமர்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஏப்ரல் 14ந் தேதி அறிவிக்கப்படும் என்று ஜெய்னுலாபுதீன் தெரிவித்தார். கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமை விருதுநகர் தனியார் அரங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஊழியர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் அபுபக்கர் தலைமை வகித்தார். இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர், எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அதிமுகவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்கள் உழைப்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டாயம் வெற்றி கிடைக்கும். உங்கள் அமைப்பின் கோரிக்கையான இட ஒதுக்கீடு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டார். அதே சமயம், முதல்வர் ஜெயலலிதா, பிரசார கூட்டத்திற்கு செல்லும் இடங்களில் கூட நிபந்தனையற்ற ஆதரவு தரும் கூட்டணிக் கட்சியினரின் பெயரைக் கூட சொல்வதில்லை என்ற வருத்தத்தில் இருந்தனர். தற்போது தங்களின் ஆதரவு நிலையை தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் விலக்கிக் கொண்டுள்ளனர். அதேபோல நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறிய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் சேதுராமனும் தனது அதிமுக ஆதரவு நிலையைப் பற்றி யோசித்து வருவதாக கூறப்படுகிறது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: