புதன், 9 ஏப்ரல், 2014

பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?


பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன?
ஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள்   - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;
நாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட  பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.
பி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்!

அப்படியானால் ஆறு மாதமாக, இணையத் தளத்தில்கூட கருத்துக் கேட்டவர்கள், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஏன் காலந் தாழ்ந்து, தேர்தல் கமிஷன் விதிமுறைக்கு விரோதமாக, முதல் கட்ட வாக்கெடுப்பே தொடங்கிய நிலையில் வெளியிட முன் வந்தார்கள்?
இதுவரை தயங்கி, மறைமுகத் திட்டமாக (Hidden Agenda) வைத்திருந்த இந்துத்துவ திரிசூலமான 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் இராமன் கோயில் கட்டுவது.
2. காஷ்மீரத்திற்கு நமது அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள 370ஆவது பிரிவின்கீழ் உள்ள தனிச் சலுகையை அறவே நீக்குதல்.
3. பொது சிவில் சட்டம் கொணருதல் (என்ற பெயரால் சிறுபான்மைச் சமுதாய மக்களின் வாழ்வுரிமையில் சிக்கிலைத் திட்டமிட்டு ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு)
இதை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த வாஜ்பேயி அரசு தேசீய ஜனநாயக முன்னணி ஆட்சியில் (N.D.A.) ஏன் செய்யவில்லை?
இப்போது மட்டும், தயங்கி விவாதித்து செயல்படுத்திட பகிரங்கப் பிரகடனமாக்கியுள்ளனர் என்றால், குஜராத்தில் மோடி அரசு அம்மாநிலத்தை சிறுபான்மையினர் (குறிப்பாக இஸ்லாமியச் சிறுபான்மையோருக்கு) எதிரான ஹிந்துத்வ பரிசோதனைக் கூடமாகவே நடத்தியது; அதை இந்தியா முழுவதிலும் ஆட்சியைப் பிடித்து - அதே வன்முறை கலவரங்களை நடத்தி முடித்திட ஆர்.எஸ்.எஸ். (“Now or Never”) இப்போது இல்லா விட்டால் எப்போதுமே முடியாது- என்கிற தன்மையில் இந்தத் தேர்தல் அறிக்கையைப் பா.ஜ.க. பெயரில் வெளியிட்டிருக்கிறது.
இந்த ஹிந்துத்துவப் பூனைக்குட்டி ஆர்.எஸ்.எஸ். கோணிப்பையிலிருந்து வெளியே வந்து விட்டது - பகிரங்கமாக! இது ஒரு வகையில் வரவேற்கத்தக்கதுதான்.
1992 மீண்டும் திரும்ப வேண்டுமா?
மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம் - ஆகிய தத்துவங்களில் நம்பிக்கையும் பிடிப்பும் உள்ள வாக்காளர்கள் எவராக இருந்தாலும், இந்த ஆபத்தினை - நாட்டில் அமைதி விடை பெற்று அமளியும், மதக் கலவரங்களும் 1992 போல் நடக்கக் கூடிய ஆபத்தினை - உணர்ந்து தெளிவாக வாக்களிக்க முன் வருவார்கள் என்பதில் அய்யமில்லை.
எவரும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் செரிந்துகொள்ள விரும்ப மாட்டார்களே!
கூட்டணிக்காரர்களே, உங்கள் நிலை என்ன?
இவர்களோடு கூட்டணி என்ற பெயரில் சீட் அணி சேர்ந்துள்ள சில தமிழ்நாட்டு மோடி ஏஜெண்ட்களாக மாறி விட்ட கட்சித் தலைவர்களுக்கு நம் சார்பில் சில கேள்விகள்! 1. அ) மேற்படி திட்டத்தை - ஹிந்துத்துவ அஜெண்டாவை நீங்கள் ஏற்கிறீர்களா?
ஆ) இராமன் கோயில் கட்டுதல், காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை அரசியலமைப்பு பிரிவு (370அய்) நீக்குதல்
இ) பொது சிவில் சட்டம்.
இவைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?
2. ஈழத் தமிழர் வாழ்வுரிமைபற்றியோ பிரச்சினைபற்றியோ, ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.தேர்தல் அறிக்கை மூச்சு விடவில்லையே - ஏன்?
வாக்காளர்களே அடையாளம் காண்பீர்!
3. தமிழ்நாட்டிற்கு வந்து உரையாற்றும் திருமதி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி - தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையும், அந்த அரசும் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு வருகின்றன - அதுபற்றி ஒரு லேசான கண்டனமோ, தடுத்து நிறுத்த ஏதாவது திட்டமோ உண்டா? (ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணித் தலையங்கம்கூட இதனைக் குறிப்பிட்டுக் காட்டி மூக்கைச் சிந்துகிறதே!)
மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்; மோடி ஒரு சர்வரோக சஞ்சீவி! என்பது போலப் பிரச்சாரம் நடத்தும் தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைமையிலான சீட்டணிக் கட்சித் தலைவர்களே உங்கள் பதில் என்ன? மவுனம் தானா?
வாக்காளர்களே! இவர்களை அடையாளம் காண ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களியுங்கள்
viduthalai.in

கருத்துகள் இல்லை: