திங்கள், 7 ஏப்ரல், 2014

ஜெயலலிதாவின் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் மேக்கப் கலையும் நேரம் வருகிறது !

திருப்பூர் : ''வெகுவிரைவில் பெரிய உண்மை, வெளிச்சத்துக்கு வரப்போகிறது. இதுவரை, யாரை அவதாரம் என்று நினைத்து வணங்கி கொண்டிருக்கிறார்களோ, அந்த அவதாரத்தின் 'மேக்கப்' கலையப்போகிறது,'' என்று, திருப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், கருணாநிதி பேசினார்.
தி.மு.க., வேட்பாளர்கள் ராஜா (நீலகிரி), கணேஷ்குமார் (கோவை), பழனிச்சாமி (பொள்ளாச்சி), செந்தில்நாதன் (திருப்பூர்), பவித்ரவள்ளி (ஈரோடு) ஆகியோரை ஆதரித்து, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் அருகில் நடந்த பிரசார கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:திருப்பூர் மக்களை பார்ப்பதே, பெரும்பேறு. உங்கள்முன் அமர்ந்திருக்கும் எனக்கு, நீங்கள் தரவேண்டிய வாக்குறுதி, 'கருணாநிதி அவர்களே, நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள், பெரும்பான்மையான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறச்செய்வோம்' என்பதுதான். மக்கள் போராட்டம் நடத்தினால், அவர்களது குறையை கேட்க அமைச்சர்கள் வருவதில்லை; அமைச்சர்களுக்கு அதைவிட முக்கிய வேலை இருக்கிறது; வசூலுக்கு போகவேண்டும். எந்த வசூல் என்பது, போகிறவர்களுக்கும், கொடுப்பவர்களுக்குமே வெளிச்சம்.
நாட்டிலே எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது என்பதற்கு என்னால், ஒரு உதாரணம் சொல்ல முடியும். கோடநாட்டில் தங்கும் முதல்வர் ஜெயலலிதா, வாங்கிக்குவித்திருக்கும் சொத்துக்கள் ஏராளம். அந்த சொத்து குவிப்பு வழக்கில், எல்லா சாட்சியங்களிலும் தில்லுமுல்லு, தகிடுதத்தங்களை காண முடியும். அந்த வழக்கை மறைத்து, நல்ல பிள்ளையை போல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார். 4,000 கோடி, 5,000 கோடி, 6,000 கோடி என சொத்துக்களை குவித்தது, திருப்பூர் பகுதியில் கஷ்டப்படும் கைத்தறி நெசவாளர்களுக்காக இல்லை. மகாராணியை போல் வாழத்தான்.  பூனைக்குட்டி வெளியே வந்து தான் ஆகணும். எந்தவொரு சர்வாதிகாரியும் மக்களால் தண்டிக்கப்படுகிரார்களோ இல்லையோ....மனசாட்சிக்கு பயப்பட வேண்டிய தருணம் வரும்.
கழக பொதுச்செயலாளர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் கிடைத்துள்ள, சான்றுகளை மறைக்க, எத்தனையோ சூழ்ச்சிகள் நடக்கின்றன. சூழ்ச்சிகளை தாண்டி, வெகுவிரைவில் பெரிய உண்மை வெளிச்சத்துக்கு வரப்போகிறது.இதுவரை, யாரை அவதாரம் என்று நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த அவதாரத்தின் 'மேக்கப்' கலையப்போகிறது. அவதாரத்தின் உண்மை உருவம் உலகத்துக்கு தெரியப்போகிறது. ஏமாந்த மக்களால், வாக்குகளை பெற்ற உண்மை, அப்போது புலப்படும். அதற்காக, சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

சட்டசபையில் கேட்கும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் ஒரே ஒரு அறிக்கையை ஜெயலலிதா வாசிப்பார்; அது, 110வது அறிக்கை. இனி, அந்த நிலை ஏற்படாது. ஏழை எளிய மக்களை வஞ்சித்து இருட்டறையில் தள்ளியிருக்கிறது மின்சாரம். அதோ வரும், இதோ வரும், என மக்களை ஏமாற்றுகிற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.இந்த ஆட்சியின் அவலங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிப்பது? ஆண்டுகள் அல்ல, மாதங்கள் அல்ல, நாட்களுக்குள் முடிந்தால் போதும் என, மக்கள் நினைக்கின்றனர். திருப்பூருக்கு மீண்டும் வெற்றி விழா கொண்டாட வருவேன். அப்போது, மக்களுக்கு பரிசாக ஒரு மணி நேரம் பேசுவேன். இவ்வாறு, கருணாநிதி பேசினார். இக்கூட்டத்தில் வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.


ஜெ., மீது கருணாநிதி குற்றச்சாட்டு:

நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவை ஆதரித்து, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன், கருணாநிதி நேற்று பேசியதாவது:கடந்த 2009ல், தி.மு.க., ஆட்சியில், அவிநாசி- -அத்திக்கடவு திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அதற்காக, நிபுணர் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.அதன்பின் ஆட்சிக்கு வந்த ஜெ., அத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார். இத்தொகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல தொகுதிகளிலும் தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கு பணம் கிடையாது. அதையும் மீறி நிறைவேற்றினால், அந்த பெயர் எல்லாம் கருணாநிதிக்கு சென்று விடும் என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நிறைவேற்றவில்லை.நான் திறந்து வைத்தேன் என்ற ஒரே காரணத்துக்காக, அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தையும் ஜெ., பூட்டி விட்டார். நீலகிரி தொகுதியில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள, வேட்பாளர் ராஜாவுக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.dinamalar.com


கருத்துகள் இல்லை: