இது அரசியல் நாகரிமல்ல; ஜெயலலிதாவை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்
கம்யூனிஸ்டுகளை அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்ற கார்ப்பரேட் சதி நடந்துள்ளது – என்றெல்லாம் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள் பதிலளிக்கிறார்களே தவிர, இடதுசாரி கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு தேசிய அளவிலோ, மாநில அளவிலோ ஒரு சரியான மாற்றை யாராலும் உருவாக்கிட முடியாது என்று புலம்புகிறார்களே தவிர, கழிவறைக்குள் கதவை அடைத்துக் கொண்டுகூட அம்மாவுக்கு எதிராக வாய் திறக்க அவர்கள் துணியவில்லை.
பா.ஜ.க.வை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தேர்தல் பிரச்சாரத்தை ஜெயலலிதா நடத்தக் கிளம்பிவிட்ட நிலையில், வேறு வழியின்றி இவ்விரு கட்சிகள் மட்டும் கூட்டணி கட்டிக் கொண்டு தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இருப்பினும், காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா உள்ளிட்டு நிதிஷ்குமார், நவீன் பட்நாயக் ஆகியோர் தலைமையிலான மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதற்கு சி.பி.எம். கட்சி தயாராக இருப்பதாகவும், அரசியலில் நிரந்தர மான கடுமையான கொள்கைகள் இருக்க முடியாது என்றும் கூறி சந்தர்ப்பவாதத்தில் புதிய சிகரத்தை எட்டுகிறார், சி.பி.எம். கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சீத்தாராம் எச்சூரி.
பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக ஆதரித்தும், மதமாற்றத் தடைச்சட்டம் – கிடாவெட்டுத் தடைச் சட்டங்களைப் போட்டும், பாசிச கொலைகாரன் மோடியைத் தனது அருமை நண்பராக அறிவித்தும் தனது பார்ப்பன பாசிசத்தை வெளிக்காட்டிக் கொண்ட போதிலும் ஜெயலலிதாவை இந்து மதவெறி எதிர்ப்பாளராகவும் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் எதிரான தேசிய மாற்று சக்தியாகவும் காட்ட வேண்டுமென்பது இடது-வலது போலி கம்யூனிஸ்டுகளின் இலட்சியம். காங்கிரசையும் பா.ஜ.க.வையும் எதிர்ப்பதுதான் நோக்கமென்றால், ஆம் ஆத்மி கட்சியையோ அல்லது தி.மு.க.வையோ அவர்கள் ஆதரிக்கலாம். ஆனால், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்த தி.மு.க.வை ஆதரிக்க முடியாது என்றும், 2-ஜி ஊழலை எதிர்த்துப் பேசி விட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர முடியாது என்றும் இப்போலி கம்யூனிஸ்டுகள் நியாயவாதம் பேசுகின்றனர். ஊழலை எதிர்ப்பதுதான் நோக்கமென்றால், அம்மாவின் ஊழல் – கொள்ளையை எதில் சேர்ப்பது? ஜெயா -சசி கும்பலின் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதும், அன்று 66 கோடி ரூபாயாக இருந்த இந்த ஊழல் இன்று ஏறத்தாழ ரூ. 4000 கோடியாக மதிப்பு அதிகரித்திருப்பதும் இப்போலி கம்யூனிஸ்டுகளின் கண்களுக்குத் தெரியாமல் போனதன் மர்மம் என்ன?
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே இப்போலி கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா தன்னிச்சையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து இப்போலிகளை அவமதித்த போதிலும், கெஞ்சிக் கூத்தாடி சீட்டுகளைப் பெற்று கூட்டணியில் ஒட்டிக் கொண்டனர். அதன் பிறகு நடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போது, தங்களது வேட்பாளருக்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரிய வலது கம்யூனிஸ்டுத் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டு, ஒரு இடத்தை இப்போலிகளுக்கு ஜெயலலிதா விட்டெறிந்தார்.
இவ்வளவு கேவலமான நிலைக்குப் போய் போலி கம்யூனிஸ்டுகள் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கான காரணம், இக்கட்சிகள் தமது வர்க்க அடித்தளத்தை இழந்து பிழைப்புவாதப் புதைசேற்றில் விழுந்து கிடப்பதுதான். புரட்சிகர அரசியலையும் சித்தாந்தத்தையும் கைவிட்டு நாடாளுமன்ற – சட்டமன்ற சாக்கடையில் விழுந்து புரள்வதற்குத் தீர்மானித்த காலத்திலிருந்தே இந்தப் பிழைப்புவாத நோய் அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது. பின்னர் படிப்படியாக அது முற்றத் தொடங்கி, வரலாற்றைப் படைக்கும் உந்துசக்திகளான உழைக்கும் மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், வர்க்கப் போராட்டத்தையே கைகழுவிட்டு ஓட்டுக்கும் சீட்டுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காலை நக்கி ஆதாயமடைவதே அவர்களது இலட்சியமாகிப் போனது.
தலையிலிருந்துதான் மீன் அழுகத் தொடங்குவதைப் போல, இக்கட்சிகளின் தலைமையைக் கவ்விய பிழைப்புவாத நோய் இன்று அதன் அடிமட்டம்வரை வேர்விட்டுள்ளது. இப்போலி கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான அரசுத்துறையிலுள்ள தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்களின் இலஞ்ச – ஊழல்களைக் கண்டு கொள்ளாததோடு, டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுப்பது, லோன் சொசைட்டியில் விரைவாகக் கடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்வது முதலான தரகு வேலையைத்தான் செய்கின்றன. தனியார் நிறுவனங்களிலோ, முதலாளிகளுக்கு விசுவாசமாக இயங்கும் ஒரு நிறுவனப் பிரிவு போலவே இத்தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. முதலாளிகளிடம் நன்கொடை வாங்கினாலும், கம்யூனிச இலட்சியத்தைக் கைவிட்டுவிடவில்லை என்று நியாயவாதம் பேசிக் கொண்டு தேர்தல் செலவுகளுக்கும், தொழிற்சங்க மாநாடுகளுக்கும் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி.யிடம் நன்கொடை பெறுமளவுக்கு பிழைப்புவாதத்தையே புதிய ஒழுக்கமாக இப்போலி கம்யூனிஸ்டுகள் வளர்த்துள்ளனர்.
கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான உறுதிப்பாடு, நல்லொழுக்கம், போர்க்குணம், அர்ப்பணிப்பு முதலானவையெல்லாம் காலாவதியாகி, தளி ராமச்சந்திரனைப் போன்ற பொதுச் சொத்தை சூறையாடும் ரவுடிகளும், திருப்பூர் கோவிந்தசாமி போன்ற கைதேர்ந்த தரகர்களும், பிழைப்புவாதிகளுமே முக்கிய பிரமுகர்களாகும் அளவுக்கு இக்கட்சிகள் சீரழிந்து போயுள்ளன. இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் இன்னும் ஏராளமான கோவிந்தசாமிகளும் ராமச்சந்திரன்களும் உள்ளனர். அவர்களை எதிர்த்து யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை. அப்படிக் கேட்டால் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்பட்டது என்ற ரகசியம் வெளியே வந்து கட்சியே கலகலத்துவிடும். ஜெயலலிதாவின் தயவில் தா.பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராக முயற்சித்த கதையும், அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு தனது மகன் டேவிட் ஜவகரை துணைவேந்தராக்க ஜெயாவிடம் சிபாரிசு செய்யக் கோரிய கதையும் வெளிவந்து நாறிய போதிலும், அக்கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் வாய் திறக்க மறுக்கிறார்கள். ஏனென்றால், தா.பா. வைக் கேள்வி கேட்டால் அவர் பலரது டவுசரைக் கழற்றிவிடுவார். நான் உன் ஊழலைக் கண்டுகொள்ள மாட்டேன், நீயும் என் ஊழலைக் கண்டுகொள்ளக் கூடாது என்ற எழுதப்படாத ஒப்பந்தம்தான் இக்கட்சிகளில் நிலவும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடாகிவிட்டது.
இத்தகைய சீரழிவினால்தான், பாசிச ஜெயலலிதாவின் அவமதிப்புகளுக்குப் பின் னரும் இப்போலி கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரமுகர்களும் சொரணையற்றுக் கிடக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று பிழைப்புவாதத்தில் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார்கள். இப்பிழைப்புவாத பித்தலாட்டக் கொள்கைகளுக்கேற்ப, இனி இவர்கள் அம்மாவின் ஆசியுடன் தமது கட்சிகளுக்கு நல்லதொரு பெயரைச் சூட்டிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
- தனபால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக