வெள்ளி, 2 செப்டம்பர், 2011

லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர் வருமான வரி ஏய்ப்பு


சென்னை : வருமான வரித்துறை அதிகாரி ரவீந்தரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. வரி ஏய்ப்பு மற்றும் லஞ்ச ஊழல் விவகாரத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எவரான் எஜூகேஷனல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.116 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், வருமான வரித்துறை கம்பெனிகள் பிரிவு கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்தரிடம் எவரான் நிறுவன அதிகாரிகள் அணுகி, வரி மோசடியில் பணத்தை குறைத்து மதிப்பிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

‘ரூ.116 கோடி வரி ஏய்ப்புக்கு குறைந்தது ரூ.40 கோடி அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு பதில் ரூ.5 கோடி கொடுத்தால் வருமான வரியை குறைத்து போடுகிறேன்’ என்று ரவீந்தர் கூறியுள்ளார். ஒரு ஆடிட்டர் மூலம் ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டது. அந்த பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரவீந்தரின் வீட்டில் கொடுத்தபோது, சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரவீந்தர், எவரான் நிறுவன உரிமையாளர் கிஷோர்குமார், ஹவாலா புரோக்கர் உத்தம் சந்த் போரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1.08 கோடி ரொக்கம், 2 கிலோ 300 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் ரவீந்தருக்கு 2 காதலிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆவணங்கள் சிக்கின. சமீபத்தில் சென்னையில் தொடர் சோதனையில் சிக்கிய ஒரு ஜவுளிக்கடைக்கும் ரவீந்தர், மறைமுகமாக உதவி செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோல பல கம்பெனிகளுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பை ரத்து செய்துள்ளார். அபராத தொகையையும் ரத்து செய்துள்ளார். அதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். எவரான் நிறுவன உரிமையாளருக்கு பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அவர்களும், வருமான வரியை குறைக்கும்படி ரவீந்தருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களும் சிபிஐக்கு கிடைத்துள்ளது.

எனவே, சிறையில் இருக்கும் ரவீந்தர், கிஷோர்குமார், உத்தம் சந்த் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டுக்கு 5 நாட்கள் விடுமுறை என்பதால் திங்கள்கிழமை 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். ரவீந்தரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பு கம்பெனிகளுக்கு உதவிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை: