சென்னை: ரெய்டு நடத்தி மிரட்டி, பல நடிகைகளை வருமான வரித்துறை உதவி ஆணையர் ரவீந்திரா வளைத்துப் போட்டுள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மேல் முறையீட்டு உதவி ஆணையர் ரவீந்திரா ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் எவரான் எஜுகேஷன் நிறுவனம் என்ற ஆன்லைன் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் குமார், உத்தம் சந்த் ஆகியோரும் சிக்கினர்.
ரவீந்திராவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவீந்திரா லஞ்சம் மூலம் பெருமளவில் சம்பாதித்துக் குவித்து வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் 18 நகரங்களில் உள்ள முக்கிய பொழுது போக்குக் கிளப்களில் இவர் உறுப்பினராக உள்ளார். இதன் மூலம் கேளிக்கை நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று லட்சக்கணக்கில் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்து செலவிட்டு வந்துள்ளார்.
தொழில் நிறுவனங்கள், நடிகர், நடிகைகள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தித்தான் இவ்வாறு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பல நடிகைகளை இவர் ரெய்டு மூலம் வளைத்துப் போட்டுள்ளார்.
தன் கீழ் உள்ள அதிகாரிகளை ஏவி விட்டு ரெய்டு என்ற பெயரில் நடிகைகளை மிரட்டி தனக்குப் பணிய வைத்ததாக கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உள்ள பல நடிகைகளை இவர் இப்படி ரெய்டுமூலம் வளைத்துள்ளாராம்.
மேலும் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட சென்னை நகரின் முக்கிய வணிக நிறுவனங்களிலும் பெருமளவில் வரி ஏய்ப்புகளை நடக்க அனுமதித்து பெருமளவில் பணம் சம்பாதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதேபோல கைதான கிஷோர் குமாரும் மிகப் பெரிய மோசடிக்காரராக இருக்கிறார். இவரது நிறுவனம் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்றுத் தரும் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட ரூ. 116 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதை சரி செய்யத்தான் ரூ. 50 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளனர். அதை வாங்கியபோதுதான் ரவீந்திராவும், மற்ற இருவரும் சிக்கினர்.
எவரான் நிறுவனத்துடன் பத்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதையும் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இவர்களி்ல இருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். இவர்களில் ஐந்து பேர் தற்போதும் பணியில் இருந்து வருகின்றனர். இவர்கள் பகுதி நேரமாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனராம். இதற்காக வருடத்திற்கு ரூ. 50லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்களாம் இவர்கள்.
எவரான் மோசடியும், ரவீந்திராவின் மோசடியும் மிகப் பெரிய அளவில் இருப்பதால் சிபிஐ அதிர்ச்சி அடைந்துள்ளது. இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தும்போது அவர்களின் மோசடிகள் முழுமையாக அம்பலமாகும் என்று எதிர்பார்க்கிறது சிபிஐ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக