புதன், 31 ஆகஸ்ட், 2011

அதிரடி வெற்றி மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு


அஜீத்தின் மங்காத்தா படம ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல தடைகளைக் கடந்து பெரும் எதிர்ப்பார்ப்புகிடையில் வெளியான அஜீத்தின் பொன்விழாப் படமான மங்காத்தாவை அஜீத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பில்லா படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி அஜீத்துக்கு படமே அமையாத நிலையில், இந்த மங்காத்தா படத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் கடந்த ஓராண்டாக இந்தப் படம் தயாராகி வந்தது. ஆனால் வெளியாகும்போது பல்வேறு சிக்கல்களை இப்படம் சந்தித்தது. படம் வெளியாகும் தேதியை கூட அறுதியிட்டு கூறமுடியாத நிலை.

ஆனால் கடைசி நேரத்தில் ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, படத்தை சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட வைத்தார். உடன் ராதிகாவின் சரத்குமாரின் ராடான் மீடியாவும் படத்தை இணைந்து வெளியிட்டது.

இன்று காலை படத்தின் முதல்காட்சிக்கு அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. சிறப்புக் காட்சிகள் காலை 4 மணியிலிருந்தே ஆரம்பித்துவிட்டன. படம் பார்த்த அத்தனை பேரும் மீண்டும் படத்தைக் காண டிக்கெட்டுகளுக்காக அலைய ஆரம்பித்துள்ளனர்.

ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்த இரு தினங்களில் வாரவிடுமுறை என தொடர்ந்து ஹாலிடே மூடில் உள்ள ரசிகர்களுக்கு பெரும்திரை விருந்தாக மங்காத்தா அமைந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் பல கோடிகளை மங்காத்தா அள்ளிவிடும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரசிகர்களுடன் ரசித்தார் சிம்பு

இன்று காலை சத்யம் தியேட்டரில் மங்காத்தா படத்தை நடிகர் சிம்பு அஜீத் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து ரசித்தார்.சிம்பு, தான் ஒரு அஜீத் ரசிகர் என்பதை பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: