செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

புலிகள் நம் உதவிகளை பெற்று நம் பிரதமரையே கோரமாக கொலை செய்திருக்கின்றனர்

  இன்று ராஜிவ் கொலை செய்யப்பட்டு, 20 ஆண்டுகளை கடந்த பின், இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், அதுவும் நிறைவேற்றப்படக் கூடாது என்று, சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இவர்களின் கூற்றுபடி, ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போடுவது, மனித உரிமை மீறல் என்றால், அவர் கொலை செய்யப்பட்டது மனித உரிமையா?

உலக வரலாற்றில், தமிழகம் ஒரு கருப்பு புள்ளியை பெற்றுள்ளது என்றால், அது, ராஜிவ் இந்த மண்ணில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தான் என்பதை, இவர்கள் மறந்து விட்டனரா?
இலங்கையில் இனப்பிரச்னை ஏற்பட்ட காலங்களிலிருந்து, பல்வேறு வகையில் உதவிகள் புரிந்தது நம் தமிழகம் தான். அப்போதைய பிரதமர் இந்திரா முதற்கொண்டு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., என்று அனைத்து தலைவர்களும், ஏன் தமிழக மக்களும் அளவு கடந்த ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ராஜிவ் கூட, இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று தான் பாடுபட்டார். ஆனால், விடுதலைப் புலிகள், தங்களின் நோக்கம் நிறைவேற வில்லை என்பதற்காக, மனிதாபிமானமின்றி, ஈவு, இரக்கமின்றி, மிகவும் கொடூரமான முறையில் மனித வெடிகுண்டு மூலம், ராஜிவை சின்னா பின்னமாக்கினர்.

இன்றைக்கும் கூட, அவர் கொல்லப்பட்ட படங்களைப் பார்த்தால், மனிதாபிமான மிக்க எவருமே, இந்த குற்றத்தை நியாயப்படுத்த மாட்டார்கள். அப்படியிருக்க, இங்குள்ள சில புள்ளிகள் போராடுவது எந்த வகையில் நியாயம்?அப்படியென்றால், இந்தியாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையையும், இவர்கள் மனித உரிமை மீறல் என்று சொல்கின்றனரா? இப்படி எதற்கெடுத்தாலும், மனித உரிமை, மனித உரிமை மீறல் என்று சொன்னால், குற்றங்கள் எப்படி குறையும்? பயங்கரவாதமும், வன்முறையும், கொலைகளும் பெருகத்தான் செய்யும்.

அண்டை நாட்டின் விடுதலைப் போராளிகள், நம்மிடம் இருந்து உதவிகளை பெற்றுக் கொண்டு, நம் நாட்டிற்குள்ளேயே, நம் நாட்டு பிரதமரை அகோரமாக கொலை செய்திருக்கின்றனர். அதற்கு, 20 ஆண்டுகள் கழித்து, இப்போது தண்டனை வழங்கலாம் என்ற நிலையில், இது தவறு என்று போராடும் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்வது? மனிதாபிமானமிக்க யாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஒரு வேளை மத்திய அரசும், சுப்ரீம்கோர்ட்டும், ஜனாதிபதியும் குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்தால், வரும் காலங்களில் யாரையும் யாரும் கொலை செய்யலாம். அது தான் இந்திய ஜனநாயகத்தின் மனித உரிமை என்று சட்டம் இயற்றிவிடலாம்.
தினமலர்

கருத்துகள் இல்லை: