சமீபத்தில் ஓஷோவின் புனே ஆஸ்ரமத்தோடு முன்பு தொடர்பில் இருந்த ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் ஓஷோவின் இறுதி நாட்கள் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். ‘ஓஷோ மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் மன உளைச்சலுடனும் இருந்தார். ஆஸ்ரமத்தின் பெருமதிப்பிலான சொத்துக்களைக் கைப்பற்ற உடனிருந்த சிலரால் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவருக்கு உண்மையிலேயே நெருக்கமாக இருந்த ஒரு சிலரே கடைசியில் அவருக்குத் துணையாக இருந்தனர்’ என்றெல்லாம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சு இந்தியாவில் உள்ள பல புகழ்பெற்ற ஆஸ்ரமங்கள் பற்றித் திரும்பியது. ‘இந்த ஆஸ்ரமங்களின் ஆன்மீக அனுபவத்திற்கும் போதைப் பொருள் உபயோகத்திற்கும் உள்ள தொடர்புகளை நாம் கவனமாக ஆராய வேண்டும். வெளிநாட்டுப் பக்தர்களின் ஏராளமான வருகைக்கும் இந்த போதைப்பொருள் உபயோகத்திற்கும் சம்பந்தமிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சர்வ தேச போதைப் பொருள் வர்த்தகத்தோடு சில ஆஸ்ரமங்கள் தொடர்புகொண்டிருக்கின்றன. அவற்றிடம் சேரும் பணம் வெறுமனே பக்தர்களின் காணிக்கையால் வருகிறது என்பது நம்ப முடியாத கட்டுக் கதை’ என்றார் அவர்.
மேலும் கடந்த சில நாட்களில் பஸ்களிலும் லாரிகளிலும் கடத்தப்படும் சாய் பாபாவின் பணம் லட்சக்கணக்கில் கட்டுக்கட்டாக கைப்பற்றப்படும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆள் ஆளுக்குக் கையில் கிடைத்த பண மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிய வண்ணம் இருக்கிறார்கள். சாய்பாபாவின் அரண்மனை ரகசியங்கள் அவரது வாழ்நாளைப் போலவே மறைவிற்குப் பின்னும் ஒருபோதும் வெளியே வரப்போவதில்லை.
இரண்டாவதாக, பாபா ராம்தேவ். ஆன்மீகக் குருவான அவர் ஒரு அரசியல் போராளியாக மாற முயற்சித்தபோது காங்கிரஸ் அவரை வெகு சுலபமாகக் கையாண்டது. அன்னா ஹஸாரே போன்ற, இழப்பதற்கு ஏதுமில்லாத எளிய மனிதர்களைக் கையாள்வதுதான் மிகவும் கடினமானது. ஆனால் ராம்தேவ் நள்ளிரவில் மூட்டை கட்டப்பட்டார். அவர் கூட்டிய கூட்டம் எந்தத் தயக்கமும் இன்றி கலைக்கப்பட்டது. தினமும் யாராவது ஒரு காங்கிரஸ் தலைவர் ராம் தேவைத் ‘திருடன்’ என்று வர்ணிக்கிறார். ராம் தேவ் தனது சொத்து மதிப்பை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். 1100 கோடி ரூபாய் பணம் வைத்திருக்கும் ஒரு ஆள் கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்கப் போகிறாரா என்று சராசரி இந்தியர்கள் குழம்பிப் போனார்கள். ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு சாகசம் ஒரு வாரத்தில் துடைத்தெறியப்பட்டது. கங்கையைச் சுத்தப்படுத்தக் கோரி 114 நாட்கள் உண்னாவிரதம் இருந்த சுவாமி நிகமானந்தா உயிர் விட்ட அதே மருத்துவமனையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வேண்டு கோளை ஏற்று ராம்தேவ் தன் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார். ஒரு யோகா மாஸ்டர் 1100 கோடி ரூபாய் தொழிலதிபராக எப்படி மாறினார் என்ற ரகசியத்தை நாம் ஒருபோதும் அறிய முடியாது.
இந்தியாவில் கார்ப்பரேட் சாமியார்கள், பெருமுதலாளிகள், அதிகாரவர்க்கத்தினர் ஆகிய மூவரும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் மற்றும் சமூக பீடங்களின் உயர்மட்டங்களில் இருப்பவர்கள் ஏன் சாமியார்கள் காலில் விழுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. நவீன குருமார்கள் இன்று சர்வதேச அளவிலான தரகர்களாக மாறிவிட்டனர். பல்வேறு நிழல் நடவடிக்கைகளில் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் அவ்வப்போது வெளிவந்து பிறகு மறைந்துவிடுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் சாமியார்கள் சேர்த்த சொத்து மதிப்பு என்பது ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்திற்குக் கூட சாத்தியமில்லாதது. உண்மையில் கார்ப்பரேட் சாமியார்கள் இந்தியாவின் ஸ்விஸ் வங்கிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அரசியல்வாதிகள், பெருமுதலாளிகளின் பணம் பெருமளவில் அங்கே முடக்கப்படுகிறது. இந்திய சட்டங்கள் ஆசிரமங்களுக்கு வரும் பணத்திற்கு வரி விலக்கு அளிப்பது மட்டுமல்ல, அவற்றைக் கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும் கருதுகின்றன. இதுதான் இந்த திடீர் செல்வத்தின் ஊற்றுக் கண்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயேந்திரரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏன் கைது செய்தார் என்பது இன்றுவரை புரியாத புதிர். அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களைத் தாண்டி வேறு காரணங்கள் உள்ளன என்பது பகிரங்கமான ரகசியமாக இருந்தது. அவை பண விவகாரங்களாக இருக்கலாம் என்று பரவலாகவே விவாதிக்கப்பட்டது. பிரேமானந்தாவுக்கும் ஒரு நிழல் அரசியல்வாதிக்குமான பணப் பிரச்சினைகளே அவர் மாட்டிவிடப்பட்டதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. மத்திய அமைச்சர் ஒருவர் நித்யானந்தாவிடம் பெருமளவிலான பணத்தைப் பதுக்கி வைத்திருந்ததாக பேச்சு அடிபட்டது. சில மாதங்களுக்கு முன்பு பங்காரு அடிகளாரின் ஆசிரமத்தில் நடந்த சோதனை அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் கூறப்பட்டது.
கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் யோகா வகுப்புகள் மற்றும் மருத்துவ உதவி முகாம்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதன் வாயிலாக இந்த சாமியார்கள் எத்தகைய சமூக அபாயங்களாக மாறி வருகிறார்கள் என்பதைப் பார்க்கத் தவறுகிறோம். ஏழைகளுக்கு சில இலவசப் பொருள்களைக் கொடுத்துவிட்டு தேசத்தையே கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கு எளிய மூச்சுப் பயிற்சியை சொல்லிக் கொடுத்து விட்டு பல்லாயிரம் கோடி ரூபாயை விழுங்கும் கார்ப்பரேட் சாமியார்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ராம்தேவின் சமீபத்திய நாடகம் கார்ப்பரேட் சாமியார்கள் எடுக்க விரும்பும் புதிய அவதாரத்தையே முன்னுணர்த்துகின்றன. இதுவரை மறைமுக அரசியல் நடவடிக்கைகளின் தரகர்களாகவும் பினாமிகளாகவும் இருந்த அவர்கள் இப்போது நேரடி அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். பணபலம், ஊடக பலம், மக்கள் செல்வாக்கு ஆகிய மூன்றும் கொண்ட அவர்களுக்கு அரசியல் கனவுகள் உருவாவது மிகவும் இயல்பானதே. ஆனால் ராம்தேவ் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டவர். அடுத்தடுத்த ஊழல் புயல்களினால் காங்கிரஸ் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இன்றைய அரசாங்கத்தைப்போல ஊழலும் செயலின்மையும் கொண்ட பிறி தொரு அரசு இந்திய வரலாற்றிலேயே இருந்ததில்லை. ஆனால் பி.ஜே.பி. வகுப்புவாத கொள்கையினால் ஏற்கனவே தனது தேசிய அடையாளத்தை இழந்து சிதைந்து போயிருக்கிறது. காங்கிரசிற்கு எதிராக பி.ஜே.பியை அதன் வகுப்புவாத அடையாளத்தை மறைத்து மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு வலுவான மாற்று அடையாளம் தேவை. ராம்தேவை அத்தகைய ஒரு அடையாளமாக மாற்றவே ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. அன்னா ஹஸாரே உருவாக்கிய ஊழல் எதிர்ப்பியக்கத்தை ராம்தேவ் மூலமாக ஹைஜாக் செய்யலாம் என்ற அதன் கனவு எதிர் பாராதவிதமாகப் பிசுபிசுத்துப்போய் விட்டது. ராம்தேவ் ஒரு போராளி அல்ல. கார்ப்பரேட் முதலாளி. அவரால் பசி தாங்க முடியாது. அவர் போலீஸைக் கண்டதும் மேடையில் இருந்து குதித்துப் பெண் வேடமிட்டுத் தப்பி ஓட ஆரம்பித்துவிட்டார்.
www.uyirmmai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக