செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

Thenee.com எஸ்.மனோரஞ்சன் இலங்கை வந்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் அரசியலில் இலங்கைத் தமிழர் தேசியம்
இலங்கையில் வெளிவந்த "அமுது' என்ற தமிழிதழின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான எஸ்.மனோரஞ்சன் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்பவர். இவர் இலங்கை வந்துள்ளார். இலங்கை முற்போக்குக் கலை,இலக்கிய மன்றத்தின்  அழைப்பை ஏற்றுப் " புலம்பெயர் அரசியலில் இலங்கைத் தமிழர் தேசியம்' என்ற விடயம் பற்றி உரை நிகழ்த்தினார். அண்மையில் கொழும்பு6, தர்மராம வீதியிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு மையத்தின் கேட்போர் கூடத்தில் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது. உரையின் பின் கலந்துரையாடலும் செய்யப்பட்டது. சிவா சுப்பிரமணியம் (தினகரன் முன்னாள் ஆசிரியர்) தலைமை வகித்து நிகழ்வை நெறிப்படுத்தினார்.
தலைமையுரை: சிவா சுப்பிரமணியம்
இலங்கை அரசியலில் தமிழ்ப் பிரச்சினை பல கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. முதல் தேர்தலில் ஒரே அணி. ஒரே கட்சி. ஒரே தேர்தல் விஞ்ஞாபனம். முற்போக்குச் சிங்களக் கட்சிகளோடு ஒற்றுமை என்ற அடிப்படையில் ஒத்துழைப்பது.பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைப்பு. அதன் பின்னர் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையைக் கொண்டு வந்தது. இதன் பிறகு சமஷ்டிக் கோரிக்கை கைவிடப்பட்டுத் தனிநாடு கேட்கப்பட்டது. சமஷ்டிக் கோரிக்கையில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுபட்டுழைத்தன. தனிநாடு கோரிக்கை சந்தர்ப்பவாதமானதே. எதிலும் தமிழ் அரசியல் நிலையாக நிற்கவில்லை.மாவட்ட சபை,மாகாண சபை போன்றவை முன்வைக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தீர்வுத் திட்டமும் கொண்டுவரப்பட்டது. தமிழர் கூட்டணி விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டது. அணுகுமுறையில் கூட்டணியினர் பெரிய வித்தியாசத்தைக் காட்டினர். தமிழ்நாடு,இந்தியா,சர்வதேசம் என்பவைகளின் ஆதரவு கிடைக்குமென நம்பியிருந்தனர்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களது உதவிகளும் வரும் என எதிர்பார்த்தனர். இப்படி மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டு சுய முயற்சியற்றிருந்தனர். தீர்வு தேடி வருமென எதிர்பார்த்தனர். ஆயுதமேந்திய இயக்கத்தினர் தீர்வைப் பெறுவரெனக் காத்திருந்தனர். தீர்வொன்றைத் தமிழ்ப் பிரச்சினைக்குப் பெற்றுத்தர தீவிர ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் தான் பொருத்தம்.
உரை: புலம்பெயர்ந்தோர் அரசியலில் இலங்கைத் தமிழர் தேசியம்
எஸ்.மனோரஞ்சன்
குடும்பத்தோடு கனடாவுக்குப் புலம்பெயர்ந்தது எனக்கு வேதனைதான். இரண்டு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் தமிழர்கள் இன்று கனடாவில் வாழ்கின்றனர். 2003 இல் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தால் புலம்பெயர்ந்தேன். 1958 அக்டோபர் மாதம் கொழும்பு நகரசபை மண்டபத்தில் நடந்த கூட்டமொன்றில் கலாநிதி என்.எம்.பெரேரா (லங்கா சமசமாஜக்கட்சிஇன் முன்னாள் தலைவர்) தீர்க்கதரிசனமாக தனிச் சிங்களத் தேசியவாதம் நம்மெல்லோருக்கும் ஆபத்தைத் தரக் கூடியதென எச்சரிக்கை செய்தார். இதைத் தமிழ் அரசியல்வாதிகளும் கவனத்துக்கு எடுத்திருக்க வேண்டும். நீர்ச்சுழியைப் போன்றதாகவே அனைத்து தமிழ் அரசியல் குரல்களும் இருந்தன. குறுகிய புள்ளியை நோக்கிச் சென்றது. தமிழ்த் தேசியம் ஓங்கி வளர்ந்தது. இந்தியாவோடு இணைந்து கொண்டனர். தமிழ்த் தேசியத்துக்கு இந்தியா பிராணவாயுவாகச் செயற்பட்டது. இதுதான் அழிவுக்குக் கொண்டு சென்றது. இதற்கும் தமிழ்ப் பொதுமக்களது அங்கீகாரம் இருக்கவில்லை. இது ஆபத்து.
இனத்துவ அரசியல் ஒருபோதும் மேலெழும்ப விடாது. குறிப்பிட்ட வர்க்க அரசியலால் மக்களை ஒன்றுபடுத்த முடியாது. 1980 இல் இடதுசாரி அரசியலாளர்கள் பிரிந்தனர். தமிழின அரசியலால் கண்மூடித்தனமான அலைக்குள் தமிழ் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலும் குறுகிய தமிழ்த் தேசியவாதம் இங்கு போல் தமிழ்ப் பண்பாடு,கலாசாரத்தைப் பேண வைத்தது. இங்குள்ளது போல் ரொறன்ரோவில் செறிவாகத் தமிழர் வாழ்கின்றனர். பலருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆட்சியிலும் பங்கு பற்றுகின்றனர். இங்குள்ளதுபோல் கனடாவில் சாதிப் பாகுபாடு காட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட இளைஞன் மகளைக் காதலித்ததற்காக அவனைக் காரால் மோதிக் காயப்படுத்தியுள்ளார் ஒரு இலங்கைத் தமிழ்த் தந்தையார். இதே பேர்வழிகள் முற்போக்கு அரசியலையும் பேசுகின்றனர். தமிழ்ப் பண்பாட்டுக்கட்டுமானம் கனடாவில் நடைபெறுகின்றது. இங்கு கூட இல்லாத வகையில் அங்கு 30 இற்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவருகின்றன. 6 வானொலிகளும் 2 தொலைக்காட்சிகளும் சேவையிலுண்டு.அங்கு இடதுசாரிச் சிந்தனை பலமற்றதாகிவிட்டது. அவசியம் இப்போக்குக்கு சத்திரசிகிச்சை தேவை. ஆப்கானிஸ்தான்,பாலஸ்தீனம், சோமாலியா போன்றவைகளின் சமூக, அரசியல் இயக்கங்களும் அங்கு இயங்குகின்றன. சீக்கிய இன அமைப்பும் உண்டு.
தமிழ்த் தேசியவாதிகளின் ஆதிக்கம் கனடாவின் பாதுகாப்புத்துறையை மெய்சிலிர்க்க வைத்தது. அதன் ஆதிக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இதை அரசாங்கத்தால் ஒதுக்க முடியாது போய்விட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டது. சகல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு பேசினர். தமிழ் அச்சு ஊடகங்கள் கொளுத்த தலையங்கங்களைத் தீட்டின. முட்டி மோதுவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற பயம். மானபங்கம் ஏற்படும். எனவே, பிரச்சினை வராமலிருக்க ஊடகங்கள் நடந்து கொண்டன. "இந்த மண் எங்களின் சொந்த மண்' பாடல் ஒலிபரப்பானது. ஒட்டாவா பாராளுமன்றத்தில் புலிகள் இயக்கத் தடையை நீக்கும்படி கேட்கப்பட்டது. இந்த இயக்கத்தவரை இலங்கைத் தமிழரது ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தமிழீழப் புலிகள் அழிக்கப்பட்ட (18.05.2009) இப்போ கனடாவில் தமிழ்த் தேசிய அரசியல் நிதானமாகச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு மீண்டுமொரு முகம் வந்துள்ளது. இது புலிகள் அழிப்பினாலேற்பட்ட திருப்பம். கனடா பாராளுமன்றத்துக்கு இலங்கைத் தமிழரான ராதிகா சிற்சபேசன் உறுப்பினராக இருக்கிறார். இதற்கெல்லாம் புலிகளின் அழிவுதான் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தமிழருக்குத் தனிநாடு அவசியம் என்ற நிலைப்பாடு பலமாக இருக்கிறது. உணர்ச்சிவசமான இனத்துவ தேசிய அரசியல் தமிழ் மக்களுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். மக்களைத் தூண்டித் தமது அரசியல் பதவியை தக்கவைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றனர். சமூக,பொருளாதாரப் பிரச்சினைகளில் முற்போக்கான பார்வை இல்லை. உணர்ச்சி வசமானவைகளாகவே காணப்படுகின்றன.இப்போக்குப் பலமான தளத்தை ஏற்படுத்தாது. மாறாக அழிவைத்தான் ஏற்படுத்தும். இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கைத் தேசியத்துக்குள்ளானதாக இருக்க வேண்டும்.
கலந்துரையாடல்: விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன்
தமிழ்த் தேசியவாதம் இருந்து கொண்டுதான் இருக்கும். எமக்குள் நிறையப் பிரச்சினைகள் உண்டு. இவைகளை வெல்ல முடியாது. 14% மானவர்களே உள்ளோம். தம் இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற பயம் பெரும்பான்மை இனத்தவருக்கு உண்டு. இங்கும் தென்னிந்தியாவிலும் தமிழர்கள் இருக்கின்றனர். எமது ஜனாதிபதி இக்கட்டான நிலையில் உள்ளார். இரு பக்கத்தையும் பார்க்க வேண்டி உள்ளது. எவரும் மனநோகக்கூடாது. கொழும்புத் தமிழரது பிரச்சினைகள் வேறு. வடக்கு,கிழக்குத் தமிழரது பிரச்சினை வேறானது. அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்குச் சொல்வதென்னவென்று தெரியாது.
பிறமொழி தெரிந்திருந்தால் தான் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். விக்கிரமபாகு கருணாரத்ன, தர்மஸ்ரீ பண்டாரநாயக்க ஆகிய நியாயமான பெரியோர்களைத் தமிழ் அரசியல்வாதிகள் வெறுக்கின்றனர். தமிழ்க் கட்சிகளுக்குள் நியாயமாகக் கதைக்கக் கூடியவர்கள் இல்லை. உணர்ச்சி வசப்பட்டே பேசுகின்றனர். அவர்கள் சொ ல்வதெல்லாவற்றையும் ஊடகங்களும் தூக்கிப் பிடிக்கின்றன. தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்க்கப் பெரும்பான்மை இனத்தவர்கள் முன்வர வேண்டும். டெய்லிநியூஸ் கலைப் பத்தியில் தமிழர் சம்பந்தமான எழுத்துகள் கவனிக்கப்படுவதில்லை. எழுதினேன் போடவில்லை. ஐலண்ட் பத்திரிகை பிரசுரித்தது. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்து டெய்லிநியூஸ் பத்திரிகைக்கு எழுதினேன். இரண்டு வரிகளை மட்டுமே பிரசுரித்தது. இனத்துவ விடயத்தை நிறுவன ரீதியாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
ஊடகவியலாளர் கே.விஜயன்
தேசிய இனப் போராட்டம் அழிவானது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு என்ன மாற்றுவழி? பெரும்பான்மை இனங்கள் சிறுபான்மை இனத்தோருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் அது பிரிவினையைத்தான் ஏற்படுத்தும் என சோசலிஷ சிந்தனையாளர் லெனின் கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார். எனவே, இனங்கள் ஒன்று சேர்வது எப்படி என்பதைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டும்.
வேறு சிலரது கருத்துகளும் பரிமாறப்பட்டன.
பதிலுரை: மனோரஞ்சன்
இன்றைய ஈழத்தமிழர்களை மூன்று பிரிவினர்களாக வகுக்கலாம். தமிழீழப் புலிகளை ஏற்றுக்கொள்பவர்கள், அனுதாபிகள், தமிழ் மக்கள். தமிழ் மக்களுக்கான ஆபத்துகளை நிறுத்துவதற்கான சரியான திட்டங்கள் தமிழரிடமில்லை. இதற்கான பூரண ஆய்வுகள் தேவை. புலம்பெயர்ந்த நாடுகளில் இலங்கையர்கள் செல்வச் செழிப்போடு வாழ்கின்றனர். இங்குள்ள தமிழர் பிரச்சினைகளை அவர்களைப் பயன்படுத்தி மாற்றம் பெற நாம் புதிய வழிகளைச் சிந்திக்க வேண்டும். இதற்கான உந்தல்கள் இங்கிருந்து தான் கிளம்ப வேண்டும். பத்திரிகைக் கட்டுரையொன்றில் பேராசிரியர் கா.சிவத்தம்பி புலிகளிடத்தில் ஓட்டை இருந்ததாகச் சொன்னார்.நான் சொல்லி வெளிவந்த மற்றொரு அபிப்பிராயத்தை அடுத்தநாள் மறுதலித்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கருத்துப்படி மாகாண சபைக்கு காவல் படை,காணி அதிகாரங்கள் இல்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தீர்வுத் திட்டத்தில் அவைகள் இருந்தன.
ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய ஜனாதிபதிக்கு அங்குள்ள சட்ட சபைகளைக் கலைக்கும் அதிகாரமுண்டு. இலங்கைத் தேசிய கீதத்தில் எதுவித இன,மத, பேதமும் இல்லை. நல்லதம்பிப் புலவர் அதை தமிழாக்கினார். எம்மில் எத்தனை பேருக்குத் தேசிய கீதம் தெரியும்? இன்றைய வீரகேசரியில் எதுவுமில்லை. இந்தியத் தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவு இருந்தது. புலி அச்சுறுத்தலுமிருந்தது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இணைக்கப்பட்ட வடக்கு,கிழக்கை வெவ்வேறாகப் பிரித்தபோது குதித்தனர் கோபாவேசத்தோடு. சாதாரண தமிழ் மக்கள் இருட்டில் வாழ்கின்றனர். சந்திரிகா தீர்வுத் திட்டம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஊடகங்களில் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. வாசகன் உரிமைதான் ஊடக உரிமை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஊடகத்தை திருத்த முடியாது. தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வு அணி திரண்ட மக்கள் கையில்தான் உண்டு.
தொகுப்புரை: சிவா சுப்பிரமணியம்
இலங்கைத் தமிழர் பிரச்சினை 60 வருடங்களாக ஒரே தமிழ்த் தலைமையின் கீழ்தான் கையாளப்படுகிறது. நாட்டைச் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கு அனைத்து இனங்களதும் சங்கமம் தேவை. தோழர் மு.கார்த்திகேசன் ஈழம்,ஈழமென்றால் சிங்களம் நீளம் நீளமாக நீளுமென்றார்.இந்த விடயத்தைப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் சமூகம் ஆழமாக ஆராய வேண்டும். புலிகள் மாகாண சபையைக் கலைக்கச் சொன்னார்கள். தேர்தலில் போட்டியிட மறுத்தனர். இந்தியாவின் திட்டத்தில் உள்ளதை மகிந்த ராஜபக்ஷ தர மறுக்கிறார்.
இந்தியாவின் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவை தயாரித்த திட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை இப்போ இலங்கைதான் சரிப்படுத்த வேண்டுமென்கிறார். எமக்கிங்கு ஏற்ற வசதிகள் இல்லை. இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு நாமும் முயற்சிகள் எடுப்போம். துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவாவது இத்திட்டத்தைச் செயற்படுத்துவோம். போராட்டத்துக்குப் பின்னரான நிலைமையை ஆராய வேண்டும். இங்கு ஊடக வசதிகள் இல்லை. புலம்பெயர் சமூகம்தான் இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முன்னின்று உழைக்க வேண்டும்.
- தினக்குரல் -

கருத்துகள் இல்லை: