பெரியாரின் திருமணத்தில் அதிருப்தி அடைந்தவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர். அப்படி அறிவித்தவர்களின் பெயர்களை கண்ணீர்த்துளிகள் என்ற தலைப்பில் பட்டியலாக வெளியிட்டது அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகை. பெரியாரை நீக்கிவிட்டு திராவிடர் கழகத்தைக் கைப்பற்றவேண்டும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் ஆவேசப்பட்டபோது, புதிய இயக்கத்தைத் தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்றார் அண்ணா.
திராவிட முன்னேற்றக் கழகம். பெயரை முடிவுசெய்துவிட்டார் அண்ணா. இயக்கத்தை நிர்வகிக்க பல்வேறு குழுக்களை உருவாக்கினார். பொதுக்குழு, அமைப்புக்குழு, சட்ட்திட்டக்குழு. இன்னபிற குழுக்கள். அவற்றை எல்லாம் தொண்டர்களுக்கு அறிவிக்கும் வகையில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முக்கியத் தொண்டர்கள், செயல்வீர்ர்கள், தலைவர்களுக்கு அழைப்புகள் அனுப்ப்ப்பட்டன. கருணாநிதிக்கும் அழைப்பு வந்தது. நானும் வருகிறேன் என்றார் கண்ணதாசன். இருவரும் சேர்ந்து சென்னை புறப்பட்டனர். காலையில் நடந்த ஆலோசனைக்கூட்டங்களில் கலந்துகொண்டார் கருணாநிதி. பிறகு மாலையில் சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
கட்சியின் பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈ.வெ.கி. சம்பத், இரா. நெடுஞ்செழியன் ஆகியோருக்கு சட்ட்த்திட்டக்குழுவில் இடம் கிடைத்தது. பிரசாரக்குழு உறுப்பினர்களுள் ஒருவராக கருணாநிதி நியமிக்கப்பட்டார். சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழக மேடைகளில் பேசி, பத்திரிகை நடத்தி, கிடைத்த சினிமா வாய்ப்பிலும் திராவிட இயக்கப் பிரசாரத்தை மேற்கொண்ட கருணாநிதிக்கு பிரசாரக் குழுவில் பொறுப்பு கிடைத்தில் பலத்த மகிழ்ச்சி.
அதே மகிழ்ச்சியுடன் கண்ணதாசனை அழைத்துக்கொண்டு மறுநாள் காலை சேலம் புறப்பட்டார் கருணாநிதி. பணத்தைக் கொடுத்து டிக்கெட் எடுத்துவரச் சொன்னார் கருணாநிதி. கண்ணதாசன் எடுத்துவந்தது இரண்டாம் வகுப்பு டிக்கெட். ஆக, சேலத்துக்குப் பட்டினிப் பயணம்தான் என்று சொல்லிக்கொண்டே இருவரும் ரயிலேறினர். வழியில் தண்ணீர் குடித்தே வயிற்றை நிரப்பினர். வெற்றிலை பாக்கு மென்றபடியே பொழுதுபோக்கினர்.
சேலத்தில் வந்து இறங்கியபோது அங்கே அவர்களை மூன்று பேர் வரவேற்றார்கள். அஞ்சுகம் அம்மையார், தயாளு மற்றும் தியாகராஜசுந்தரம் (பின்னாளில் முரசொலி மாறன்). அவர்கள் எதற்காக சேலம் வந்தனர்?
மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை கிடைத்ததும் கருணாநிதி மட்டுமே சேலம் சென்றார். குடும்பத்தினரை அழைத்துச் செல்லவில்லை. தியேட்டர்ஸில் ஓரளவுக்கு செட்டிலான பிறகு குடும்பத்தினரை அழைத்துவரலாம் என்பது திட்டம். அதன்படியே அஞ்சுகமும் தயாளுவும் சேலம் வந்தனர். இருவருக்கும் துணையாக பாலகன் மாறன்.
மூவரையும் பார்த்த்தும் கருணாநிதிக்கு மகிழ்ச்சி. காரணம், அவர்கள் கையில் இருந்த சாப்பாட்டு மூட்டை. ரயில் நிலையத்திலேயே வைத்து மூட்டையைப் பிரித்தார் கருணாநிதி. அருகில் கண்ணதாசனும் அமர்ந்துகொண்டார். இருவரும் வயிறுமுட்ட சாப்பிட்டனர். பசியால் இருண்டு போன கண்களில் லேசாக வெளிச்சம் எட்டிப்பார்த்த்து கருணாநிதிக்கு. கண்ணதாசன் மாடர்ன் தியேட்டர்ஸ் விடுதிக்குப் புறப்பட, கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
திடீரென மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்திடம் இருந்து அழைப்பு வந்த்து கருணாநிதிக்கு.
நான் எடுத்த மாயாவதி படம் பலத்த நட்டத்தை ஏற்படுத்திவிட்டது. அதை சரிசெய்யும் வகையில் உங்கள் மந்திரிகுமாரி கதையைப் படமாக்க விரும்புகிறேன். நீங்களே திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார். இத்தனைக்கும் சின்னராசு (பின்னாளில் சிந்தனைச்சிற்பி சி.பி. சிற்றரசு), ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்ற பல திராவிட இயக்க எழுத்தாளர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் இருந்தார்கள். ஆனாலும் சுந்தரத்துக்கு கருணாநிதியின் மீதுதான் நிறைய நம்பிக்கை.
கேட்கக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது கருணாநிதிக்கு. ஏற்கெனவே மந்திரி குமாரி நாடகத்தால் கருணாநிதிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இப்போது சினிமா மூலமாக மீண்டும் ஒரு வாய்ப்பு. முக்கியமாக, படத்தின் நாயகன், எம்.ஜி. ராமச்சந்திரன். இயக்குனர், எல்லிஸ் ஆர். டங்கன். போதாது? மின்னல் வேகத்தில் திரைக்கதை மற்றும் வசன வேலைகளை முடித்துக்கொடுத்தார் கருணாநிதி.
மந்திரி குமாரியின் வெற்றி பலரையும் கருணாநிதியின் பக்கம் திருப்பியது. பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருணாநிதியைத் தங்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் செலுத்தினர். அதற்கு வசதியாக மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து விலகி, சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டார் கருணாநிதி.
கருணாநிதியைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியவர்களுள் என்.எஸ். கிருஷ்ணனும் ஒருவர். மந்திரி குமாரி படத்தைத் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்தபோதே கருணாநிதியின் வசனத்தின்மீது என்.எஸ்.கேவுக்கு கவர்ச்சி ஏற்பட்டுவிட்டது. தான் எடுக்கப்போகும் மணமகள் படத்துக்கு கருணாநிதிதான் வசனம் எழுதவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டார். ஆனாலும் கருணாநிதியை நேரில் அழைத்துப் பேசவைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார் என்.எஸ்.கே.
‘எதைப்பற்றிப் பேச?’ என்று கேட்டார் கருணாநிதி. உடனே என்.எஸ்.கே, ‘என் படத்துக்கு நீதான் வசனம். அதில் சந்தேகமில்லை. இருந்தாலும் உன்னுடைய பேச்சைக் கேட்க ஆசையாக இருக்கிறது’ என்றார்.
”எதைப்பற்றிப் பேச? திருவள்ளுவரின் பெருமையைப் பேசவா, அவர் எழுதிய அறத்துப்பால் பற்றிப் பேசவா, சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசவா, புகார் காண்டத்தைப் பற்றிப் பேசவா அல்லது இளங்கோவடிகளைப் பற்றிப் பேசவா, பாரதியைப் பற்றிப் பேசவா அல்லது அவர் பாடிய குயில் பாட்டு பற்றிப் பேசவா, எதைப் பற்றிப் பேச..
சுருதி கெடாமல் பேசிக்கொண்டிருந்தார் கருணாநிதி. இமை மூடாமல் ரசித்துக் கொண்டிருந்தார் என்.எஸ்.கே. அப்போது கருணாநிதியின் பேச்சு டேப் ரெக்கார்டரில் பதிவாகிக்கொண்டிருந்தது. கேசட்டின் ஒருபக்கம் முடிந்ததும் அருகில் இருந்த இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சு சைகை காட்டினர். அதன்பிறகுதான் கருணாநிதி பேச்சை நிறுத்தினார். என்.எஸ்.கே முகத்தில் புன்னகை. படத்துக்கு வசனம் எழுத என்.எஸ்.கே கொடுத்த தொகை பத்தாயிரம்! இதுவரை வாங்கியிராத மிகப்பெரிய தொகை.
என்.எஸ்.கேவின் வீட்டிலேயே அமர்ந்து மணமகளுக்கான வசனங்களை எழுதிக் கொடுத்தார் கருணாநிதி. எழுதியது போக எஞ்சியிருக்கும் நேரத்தில் என்.எஸ்.கே, கருணாநிதி உள்ளிட்டோர் சீட்டு விளையாடுவது வழக்கம். ஒருநாள் ஆட்டத்தில் கருணாநிதி ஐயாயிரம் ரூபாயை ஜெயித்துவிட, அத்தோடு மேலும் கொஞ்சம் பணம் போட்டு கார் ஒன்றைக் கருணாநிதிக்கு வாங்கிக்கொடுத்தார் என்.எஸ்.கே.
கலைப்பணியில் ஈடுபட்டிருந்த கருணாநிதியை கட்சிப்பணி மீண்டும் அழைத்தது. 17 நவம்பர் 1951 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூடியது. அதில் கலந்துகொள்ள கருணாநிதிக்கும் அழைப்பு வந்திருந்தது. அந்தக்குழுவில் திமுகவின் முதல் மாநில மாநாடு பற்றி விவாதிக்கப்பட்டது.
மாநாட்டுத் திறப்பாளராக ஈ.வெ.கி. சம்பத்தின் பெயரை மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.கே. நீலமேகம் முன்மொழிந்தார். இல்லை, நாவலர் நெடுஞ்செழியனே திறப்பாளராக இருக்கட்டும் என்றார் கருணாநிதி. பொதுக்குழுவில் திடீர் சலசலப்பு. நிலைமையைச் சமாளிக்கும் வகையில் கே.கே. நீலமேகமே மாநாட்டைத் திறக்கட்டும் என்று சொல்லிவிட்டார் அண்ணா.
முதல் மாநாட்டின் திறப்பாளர் என்ற பெருமை பறிபோன வருத்தத்தில் கருணாநிதியைத் திரும்பிப் பார்த்தார் ஈ.வெ.கி. சம்பத். இருவருக்கும் இடையே பின்னாளில் உருவான போட்டிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் தொடக்கப்புள்ளி அதுதான். அந்த மாநாட்டில் கருணாநிதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது!
0
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக