- முருகபூபதி
வாழ்நாள் பூராவுமே ஒருவன் பொய்பேசியும் செல்லும் இடமெல்லாம் அவதூறுகளைப்பரப்பியும் பித்தலாட்டங்கள் புரிந்தும் வருவானென்றால் நிச்சயமாக அவன் கலகக்காரனாக இருக்கமாட்டான். மனநோயாளியிடம்தான் இத்தகைய பண்புகள் அதிகமாக இருக்கும். தகுந்த சிகிச்சை கிட்டாதுபோனால் தனக்குத்தானே பகைவனாகி தானும் சீரழிந்து தனது ஊக அடிப்படையிலான பிதற்றல்களுக்கு பலியாகிப்போகின்றவர்களையும் சோர்வடையச்செய்து மனநோயாளியாக்கிவிடுவான்.
இங்கே தன்னை ஒரு கலகக்காரன் என்று சொல்லிக்கொண்டு வாய்க்கு வந்தபடி புலம்பித்திரியும் ஒருவர் பற்றித்தான் பதிவுசெய்கின்றேன். அந்த நபர் எஸ்.பொன்னுத்துரை.
இங்கே தன்னை ஒரு கலகக்காரன் என்று சொல்லிக்கொண்டு வாய்க்கு வந்தபடி புலம்பித்திரியும் ஒருவர் பற்றித்தான் பதிவுசெய்கின்றேன். அந்த நபர் எஸ்.பொன்னுத்துரை.
கனடாவில் சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட இயல் விருதுபெற்று சிலநாட்களுக்குள்ளாகவே தன்னை இந்த விருதுக்கு தெரிவுசெய்தவர்களை நபுஞ்சகர்கள் என்று கற்சுறாவுக்கு தெரிவித்ததிலிருந்தே இந்நபரின் குண இயல்புகளை புரிந்துகொள்ளமுடியும்.
ஊரில் சொல்வார்கள் ‘விருந்து கொடுத்த இலையிலேயே மலம் கழித்துப்போகின்றவன்’ என்று அத்தகைய மனிதன்தான் இந்த எஸ்.பொ.
நாம் இலங்கையில் நீண்டகாலம் திட்டமிட்டு நடத்தி முடித்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கற்சுறா சொல்வதுபோன்று முதல் கொள்ளி வைத்தவர்தான் இந்த மனிதர். வாழ்நாள் பூராவுமே மற்றவர்களுக்கு எதிராக குறிப்பாக நண்பர்களுக்கு எதிராக அவதூறுகளைப்பரப்பிவிட்டு அந்த அவதூறுகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதும் ஊகத்தின் அடிப்படையில் சொன்னேன் என்று தப்பித்து ஓடும் இந்நபரின் வரலாற்றில் வாழ்தல் அத்தகையதே.
காலம்பூராவும் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு, டானியல், மல்லிகை ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன் உட்பட பலரை கேவலமாகத்திட்டியும் அவதூறு பொழிந்தும் காலத்தைக்கடத்தினார்.
ஜீவாவுக்கும் டானியலுக்கும் தான்தான் எழுதிக்கொடுத்தேன் அவர்களின் பெயரையே தனது புனைபெயராக்கி எழுதி அவர்களுக்கு பிரபலம் தேடிக்கொடுத்தேன். படைப்பு இலக்கியத்தில் தான்தான் அவர்களுக்கு குதிரை ஓடினேன் என்றெல்லம் அறிக்கை விட்டவருக்கு அரசாங்கப்பரீட்சையில் யார் குதிரை ஓடினார்கள் என்று நாமும் இவரைப்போன்று ஊகத்தின் அடிப்படையில் கருத்துச்சொல்ல முடியும்.
எமது சர்வதேச எழுத்தாளர் மாநாடு தொடர்பாக இவரிடம் ஆலோசனை கேட்க பலமுறை தொடர்பு கொண்டபோதும் தந்திரமாக தவிர்த்துக்கொண்டு தனது சென்னை மித்ர பதிப்பக விற்பனை தொடர்பான பிஸினஸ் டீல் முறிவடைந்ததைத்தொடர்ந்து சுமார் ஆறுமாதம் கழித்து குமுதம், விகடன், கீற்று இணையத்தளம் ஆகிய குழுமங்களிடம் அவதூறு பரப்பி கொள்ளிவைத்து அந்த நெருப்பில் குளிர்காய்வதற்கு தம்மோடு பலரையும் அழைத்துக்கொண்டவர். இப்போது ‘ஊகம்’ பற்றி சொல்லப்புறப்பட்டுள்ளார். இவரது மாநாட்டு எதிர்ப்பின் ரிஷி மூலம் விரைவில் ஆதாரங்களுடன் அம்பலமாகவிருக்கிறது.
இம்மாநாடு தொடர்பாக 2010 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தகாலப்பகுதியில் இலங்கையில் நின்றவர்கள்தான் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும், நடேசனும். இவர்கள் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவிலிருந்து மாவை நித்தியானந்தன், சட்டத்தரணி ரவீந்திரன், டொக்டர் வாமதேவன், ஜெயந்தி விநோதன், மங்களம் ஸ்ரீநிவாசன்( லக்ஷ்மண ஐயரின் மகள்) ஆகியோரும் கொழும்பில் இருந்தனர். இவர்கள் அனைவரும் எனது அழைப்பை ஏற்று அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவருமே எனது நண்பர்கள். அவர்களது அரசியல் இலக்கிய கருத்துக்களுக்கு அப்பால் அவர்கள் எனது நண்பர்கள். சகிக்கவே முடியாத கருத்துக்களைச்சொல்லும் எஸ்.பொ.வும் ஒருகாலத்தில் எனது நண்பராக இருந்தவர்தான். பொன்னுத்துரைக்கு அவதூறு பொழிவதற்கு பல சாட்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக நடேசன், ரஜேஸ்வரியின் பெயர்களை பயன்படுத்துகிறார்.
பல வருடங்களுக்கு முன்னர் மல்லிகைக்காரியாலயத்தில் மாநாட்டு யோசனை முன்வைக்கப்பட்டபோது கூட அவர்களுக்கு இந்த மாநாட்டுடன் எத்தகைய தொடர்பும் இருக்கவில்லை. பொன்னுத்துரையிடம் ஆலோசனை கேட்க முயன்றது போலவே அவர்கள் உட்பட இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கானோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. கற்சுறா குறிப்பிடுவதுபோன்று பொன்னுத்துரைக்கு, காசி. ஆனந்தன் உட்பட பலரை திருப்திப்படுத்தவேண்டியிருந்தது அவரது காலத்தின் சோகம்.
இதே காசி ஆனந்தனை, அமிர்தலிங்கம் 1977 இல் நடந்த பொதுத்தேர்தலின்போது மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரைக்கு எதிராக நிறுத்தியபோது, அந்த உணர்ச்சிக்கவிஞரின் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக இராஜதுரைக்கு ஆதரவாக மேடைகளில் தோன்றி பேசியவர்தான் இந்தப் பொன்னுத்துரை.
அதிலே பிரசித்தி பெற்ற பொன்னுத்துரையின் வசனத்தை சமீபத்திலும் இலங்கையில் ஒரு இதழ் பதிவு செய்தது. “ இராஜதுரை போக்கிலி. அவரைவிட கடைகெட்ட போக்கிலிதான் காசி ஆனந்தன்.” இதுவே பொன்னுத்துரை மலர்ந்தருளிய வாசகம். இராஜதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சரானதும் அவரது பொறுப்பிலிருந்த பனம்பொருள் அபிவிருத்திச்சபையின் தலைவர் பதவிக்கு கனவு கண்டவர்தான் இவர். அந்தக்கனவு பலிக்காமல் நைஜீரியா சென்றார்.
இனச்சங்காரம் புரிந்த ஒரு அரசில் பதவிக்கு காத்திருந்தவர் விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிக்கொண்ட புதல்வனின் பெயரில் குதிரை ஓடுகிறார்.
புலிகள் இல்லாத ஒரு கட்டத்திலே சர்வதேச தலைமைத்துவத்தைப்பெற்றுக்கொள்ளும் ஒரே ஒரு ஆசைக்காகத்தான் இந்த மாநாட்டிலே நான் முன்னிற்று உழைத்ததாகவும் கற்சுறாவுக்குச்சொல்கிறார் இந்தப்பொய்யர்.
புலிகள் வாழ்ந்த காலத்திலேயே நான் இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று 1986 இல் நல்லூரில் நடந்த மாநாட்டில் கலந்து பேசியிருக்கின்றேன். புதுவை இரத்தினதுரையும் எம்முடன் இணைந்திருந்தார். கவியரங்கில் பங்கேற்றார். கவிஞர் சேரனும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்தான். அச்சந்தர்ப்பத்தில் நானும் பிரேம்ஜியும் மல்லிகை ஜீவாவும் புலிகளுடன் உரையாடியும் இருக்கின்றோம்.
அவுஸ்திரேலியாவிலும் புலிகளுக்கு மத்தியில் இலக்கிய விழாக்கள் நடத்தியிருக்கின்றேன். பொன்னுத்துரையையும் அழைத்து பேசவைத்துள்ளேன். அவரை பாராட்டி கௌரவித்துமிருக்கின்றோம். ஆனால் இங்கிருந்த புலிகள் ஆயுதம் ஏந்தாதவர்கள். கழுத்தில் சயனைற் அணியாதவர்கள். அதாவது பொன்னுத்துரையைப்போன்று.
இந்தப்பொன்னுத்துரை 1989 ஜனவரி 19 ஆம் திகதி எனக்கு எழுதிய கடிதம் இப்பொழுதும் என்னிடமிருக்கிறது. அந்தக்கடிதம் எனது கடிதங்கள் நூலிலும் இடம்பெற்றுள்ளது. அக்கடிதத்தில் தனது மனச்சோர்வு குறித்து பின்வருமாறு எழுதியிருந்தார்:- “நைஜீரியாவிலே மிகவும் ஓய்வான- மிகவும் மெதுவாகச்செல்லும் ஒரு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவன் நான். ஆனால் இங்கு (அவுஸ்திரேலியாவில்) எந்திரகதியில் நடமாடுபவர்ளுக்கு மத்தியிலே செயற்கையான புன்னகைகளை உதட்டிலே ஏந்திக்கொண்டு நடமாடுபவர்களுக்கு மத்தியிலே வாழ்வதற்கு கஷ்டமாக இருக்கின்றது.
நாம் எப்படிவேண்டுமானாலும் நைஜீரியாவிலே வாழலாம். யாரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். குடி- கூத்தி என்பன ஆண்மையின் பிரிக்க முடியாத அம்சம் என்று அவர்களாலே அங்கீகரிக்கப்படுகின்றது. நெடுஞ்சாலை ஓரமாக மல-சலம் கழித்தல் அங்கே மனிதனுடைய அடிப்படை உரிமையாகும். இங்கு எனது குசினியில் சமைக்கும் கறியின் மணம் அடுத்த அறையிலே வாழ்பவனுடைய மூக்கினைத் தொடக்கூடாதாம்.
இங்குள்ள எழுத்தாளர் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு என் நோக்கிலே அவுஸ்திரேலியாவை சுயம்புவாக தரிசிக்க முடியுமல்லவா? இவை குறித்து உங்களாலே பயனுள்ள குறிப்புகள் தரமுடியுமாயின் மிக்க உதவியாக இருக்கும். இதனை நீங்கள் எஸ்.பொ.வுக்குச்செய்யும் தனிப்பட்ட உதவியாக மட்டும் கொள்ளாது, தமிழ் எழுத்துப்பணிக்குச்செய்யும் பங்களிப்பாகவும் கருதி உதவ முன்வருவீர்கள் என்று நம்புகின்றேன்.”
பொன்னுத்துரையின் குண இயல்புக்கு இக்கடித வரிகள் பதச்சோறு. தனக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியாவுக்கே விசுவாசம் இல்லாத இவர் இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டுதான் அவதூறு எழுத்தூழியம் தொடர்கின்றார்.
நைஜீரியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்து சோர்ந்துபோய் முடங்கிக்கிடந்தவரை 1989 நடுப்பகுதியில் மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள் கதைத்தொகுப்பு நூல்வெளியீட்டில் பேசுவதற்கு அழைத்தேன். அதுதான் அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதல் தோன்றிய மேடை.
அச்சமயம் தானும் ஒரு மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதை கச்சிதமாக சொல்லிவிட்டார். வருடாந்தம் மாவீரர் நிகழ்வு நடத்துபவர்களுக்குத்தோதான ஒரு பேச்சாளர் கிடைத்தார்.
1991 ஆம் ஆண்டு மாவீரர் தின விழாவிலும் மெல்பன் எழுத்தாளர்கள் பற்றி அவுதூறு பரப்பினார். கரகோஷத்திற்காகவும் விசிலுக்காகவும் எதுவும் பேசக்கூடிய நபர்தான் இந்தப்பொன்னுத்துரை. அன்றைய மாவீரர் நிகழ்விலே ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல் இவர் கேவலமாகப்பேசிய பேச்சை குறிப்பிட்ட நிகழ்வு பதியப்பட்ட ஒளிநாடாவில் பார்க்கலாம். அதற்காக கற்சுறா மெல்பன் தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரை தொடர்புகொள்ள வேண்டும்.
நான் ஏதோ வாழ்விழந்து போயிருந்ததாகவும் எனக்கு புதுவாழ்வு கொடுப்பதற்காகத்தான் சிட்னியில் நடந்த தமது நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைத்ததாகவும் வேறு கதையளக்கின்றார்.
1996 இல் எதிர்பாரதவிதமாக எனது வாழ்வில் ஒரு திருப்பம் நேர்ந்தது. அதற்காக நான் தலையிலே துண்டைப்போட்டுக்கொண்டு ஓடி ஒளியவில்லை. எனது குழந்தைகளை தன்னந்தனியனாக சொந்த பந்தங்கள் இல்லாத ஒரு தேசத்தில் பராமரித்து காப்பாற்றி கரைசேர்த்திருக்கின்றேன்.
பொன்னுத்துரை சொல்லும் விதமாகப்பார்த்;தால் நான் எப்படி அதன் பிறகு 1997 இல் எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்திய நிகழ்வில் பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளைய பத்மநாதன், ஓவியர் செல்லத்துரை ஆகிய மூத்தவர்களை அழைத்து பாராட்டி கௌரவம் வழங்கியிருக்கமுடியும்.
1988 இல் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தையும் 2001 இல் தொடங்கிய எழுத்தாளர் விழா இயக்கத்தையும் அல்லவா கைவிட்டு ஓடி வாழ்விழந்திருக்கவேண்டும். 2002 இல் நாம் சிட்னியில் நடத்திய இரண்டாவது எழுத்தாளர்விழாவிலும் பொன்னுத்துரை கலந்துகொண்டார்.
அதன் பிறகுதான் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல், அம்பியின் அந்தச்சிரிப்பு, தமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண், நடேசனின் வண்ணாத்திக்குளம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சிட்னியில் நடந்து நான் தலைமை தாங்கச்சென்றேன்.
என்மீது சேறு பூசும் இவர் பிரதேசவாதம் கக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோனார். நான் தமிழீழப்பகுதிகளின் பிரதிநிதியாக என்னை அடையாளப்படுத்திக்கொள்ள பிறப்பாலும் உரிமையற்றவன் என்றும் கற்சுறாவுக்குச் சொல்கின்றார்.
இதன் அர்த்தம் என்ன?
இலங்கையின் மேற்கு கரையில் நீர்கொழும்பிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். அங்கே தமிழ் இருப்பதனால்தான் 1960 களில் பொன்னுத்துரை, மகாகவி உருத்திரமூர்த்தி, கனகசெந்திநாதன், ஏ.ரி.பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகளை அழைத்து மூன்று நாட்கள் எமது ஊர் மக்கள் தமிழ் விழா எடுத்தார்கள். அப்போது எனக்கு பதினொரு வயது.
வடக்கிலே கிழக்கிலோ பிறந்தால்தான் தமிழ் உணர்வு, தமிழ் அறிவு, தமிழ் இலக்கிய பிரக்ஞை வரும் என்பதில்லை. பொன்னுத்துரைக்கு இதற்குமேலும் பதில் சொல்லி எனது காலத்தை விரயம் செய்யவிரும்பவில்லை.
அவர் செல்லாத வாதங்களை கொண்டு திரிகின்றார்.
வயது போவதனால் ஞாபகக்குறைவு ஒருவருக்கு ஏற்படலாம். அதற்காக தனது ஞாபக மறதி பலவீனத்தை மறைக்க மற்றவர்களின் மீது சேறு பூசுவதற்கு முனையக்கூடாது.
எமது மாநாட்டை கொச்சைப்படுத்துவதற்காக பலவகையான பிரயத்தனங்களையும் மேற்கொண்டவர் இந்த பொன்னுத்துரை. முதலில் இலங்கை அதிபரிடம் லஞ்சம் பெற்றோம். என்றார் (கீற்று இணையம்) பிறகு, அவுஸ்திரேலியா இன்பத்தமிழ் வானொலியில் நாம் குமரன் பத்மநாதன் ஊடாக கோடிகோடியாக பணம் பெற்றுள்ளோம் என்றார்.
பிறகு கைலாசபதி, சிவத்தம்பியினால் மூளைச்சலவை செய்யப்பட்டடவர்களினால் மாநாடு நடத்தப்படுகிறது என்றார். இந்தியாவின் தயவில் வாழ்ந்து தனது விஸாவை தக்கவைத்துக்கொள்தற்காக எமது மாநாட்டுக்குப்பின்னால் சீனா இருக்கிறது என்றார்.
இப்போது கற்சுறாவுக்கு சொல்லும்போது டக்ளஸ் தேவானந்தா எமக்குப்பின்னால் இருந்தார் என்று சொல்கிறார். இவரது எந்தக்கூற்றுக்கும் ஆதாரம் இல்லை. எழுந்தமானத்தில் குறிசுடும் இவர் தனது வாழ்நாள் பூராகவும் இவ்வாறு பிதற்றிப்பிதற்றியே தன்னை ஒரு கலகக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் சிறிதளவும் வெட்கப்படுவதில்லை.
இவரது வராலாற்றை கவனித்தால் எமது காலத்தில் இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்று நாம்தான் வெட்கப்படவேண்டும்.
1970 களில் பொன்னுத்துரை எழுதிய இஸ்லாமும் தமிழும் நூலில் எம்.எஸ்.எம். இக்பால், எம்.எச். எம்.சம்ஸ். ஏ. இக்பால் ஆகியோரை மிகவும் தரக்குறைவாக எழுதினார். இரசிகமணி கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலில் அவருக்குத்தெரியாமல் தனது கைச்சரக்கை திணித்தார்.
சிலரது நூல் வெளியீட்டில், குறிப்பாக சில மொழிபெயர்ப்பு நூல்களின் பதிப்பில் செய்த பாரதூரமான மோசடிகள் தொடர்பாகவெல்லாம் நாமும் ஊகங்களுடன் எழுத முடியும்.;. பேசவும் முடியும். அவ்வாறு வாழ்ந்தால் நாமும் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நிலைக்கே தள்ளப்படுவோம்.
இந்த மனிதர் இந்த அந்திம காலத்திலாவது திருந்தவேண்டும். வரலாற்றில் வாழ்தல் எழுதிவிட்டால் மாத்திரம்போதாது தனது வாழ்வை தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும். தனது வாழ்நாளில் எத்தனைபேரை காயப்படுத்தியிருக்கிறார். எத்தனைபேருக்கு வீண் பழி சுமத்தியிருக்கிறார் என்பதை திரும்பிப்பார்க்கவேண்டும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக