வியாழன், 7 ஜூலை, 2011

டாக்டர் சேதுராமனின் பகீர் வாக்குமூலம்



மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் குடும்பத்தில், இப்போது புயல்!

1983-ம் ஆண்டு டாக்டர் சேதுராமனால் ஆரம்பிக்கப்பட்ட எஸ்.ஆர். டிரஸ்ட்டுக்கு இன்று கோடிக்கணக்கில் சொத்துகள் உண்டு. இந்த டிரஸ்ட்டின் மூலம் இயக்கப்படும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இப்போதைய ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட மதுரை மாநகராட்சியின் ஓர் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டுக்கு நிகரானது. 11 டிரஸ்ட்டிகளைக்கொண்ட எஸ்.ஆர். டிரஸ்ட்டில் டாக்டர் சேதுராமன், சேர்மன். மனைவி டாக்டர் ராஜம் சேதுராமன், செயல் இயக்குநர். மூத்த மகன் இன்ஜினீயர் ரமேஷ், துணைத் தலைவர். மகள் டாக்டர் பிரதீபா, இளைய மகன் டாக்டர் குருசங்கர் உள்ளிட்டோர் டிரஸ்ட் உறுப்பினர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு பிரதீபாவையும், அவரைத் தொடர்ந்து ரமேஷையும் டிரஸ்ட்டில் இருந்து அடுத்தடுத்து விலக்கிவிட்டார் சேதுராமன். மூத்த மகன் ரமேஷின் வழக்கறி​ஞரான அப்துல்லா நம்மிடம், ''அரசியலுக்குப் போனதில் இருந்தே, சேதுராமனின் போக்கு திசை மாறிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, சென்னையில் ஜெனிதா என்ற 21 வயது பெண்ணைக் கல்யாணம் செய்தார் சேதுராமன். இவருக்கும் ஜெனிதாவுக்கும் சரிப்பட்டு வரலை. நாலைஞ்சு தடவை அந்தப் பெண் இவரை விட்டுட்டு ஓடிடுச்சு. ஒரு வழியா அவளை சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வந்து, ஒரு பெண் குழந்தைக்கும் தாயாக்கிட்டார். குழந்தைக்கு ஒன்றரை வயசு இருக்கும்போது, ஜெனிதாவுக்கு சைனஸ் ஆபரேஷன் நடக்க, அந்தப் பெண் இறந்துவிட்டது. இப்ப பசும்பொன் செல்விங்கிற அந்தக் குழந்தை, ஜெனிதாவோட அம்மாவிடம் வளருது.

ஜெனிதா இறந்த ஈரம் மறைவதற்கு முன்னால், சென்னையில் உள்ள திருமணத் தகவல் மையத்தில் தனக்குப் பெண் தேடினார் சேதுராமன். டைவர்ஸ் ஆன சீதாலெட்சுமி என்ற பெண் அவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது. அந்தப் பெண்ணுக்கு, தன் 'மகா சேமம்’ நிறுவனத்தில் மேனேஜர் வேலை போட்டுக் கொடுத்தார் சேதுராமன். ஆனா, என்ன காரணமோ தெரியலை... திடீர்னு சீதாலெட்சுமியை வேலையில் இருந்து தூக்கிட்டார். திருமணம் செஞ்சுக்கவும் மறுத்துட்டார். உடனே அந்தப் பெண், 'திருமணம் செய்வதாகச் சொல்லி தன்னோடு பழகி ஏமாத்திட்டார்’னு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுனு போயிருச்சு. இது சம்பந்தமா, 2007-ம் வருஷம் ஜூலை மாசம் சென்னை ஜே.ஜே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் சேதுராமன் மீது எஃப்.ஐ.ஆர். போட்டாங்க. இந்தச் செய்தி அப்போதே ஜூ.வி-யிலும் வெளிவந்தது...'' என்று நிறுத்திய அப்துல்லா, ''ஆனா, அப்ப வெளி வராத இன்னோர் அதிர்ச்சியான செய்தியும் இருக்கு...'' என்று சஸ்பென்ஸுடன் தொடர்ந்தார்,

''கோர்ட் உத்தரவுப்படி, சீதாலெட்சுமியின் புகாரை வில்லிவாக்கம் போலீஸ் உதவி ஆணையர் விசாரித்தார். அப்போது, 'முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, என்ன காரணத்துக்காக மறுமணம் செய்கிறீர்கள்?’ என்று உதவி ஆணையர் கேட்டதற்கு, 'எனது முதல் மனைவி ராஜத்துக்கு மனநிலை சரி இல்லை. அதனால்,

மறுமணம் செய்கிறேன்’னு மனிதாபிமானம் இல்லாமல் எழுதிக் கொடுத்தார் சேதுராமன். அது உண்மைதானா என்பதை அந்த உதவி ஆணையர் விசாரித்து இருக்க வேண்டும். ஆனால், அப்படி விசாரிக்காமலேயே, 'சேதுராமனின் மனைவி ராஜம் மனநிலை பாதிக்கப்பட்டு, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது’னு கோர்ட்டில் அறிக்கை கொடுத்தார்.

மனநிலை சரி இல்லாதவர் என்று தன்னால் பட்டம் கட்டப்பட்ட டாக்டர் ராஜத்தைத்தான் இந்த நிமிடம் வரை எஸ்.ஆர். டிரஸ்ட்டின் செயல் இயக்குநராக வெச்சிருக்கார் சேதுராமன். இவ்வளவு ஏன், 2007-ல் இருந்து அவருக்கு துப்பாக்கி லைசென்ஸே இருக்கு. மனநிலை பாதித்த ஒருவருக்கு இவை எல்லாம் எப்படி சாத்தியம்னு ராஜத்துக்கு கோர்ட்டில் சர்ட்டிஃபிகேட் கொடுத்த உதவி ஆணையரைத்தான் கேட்கணும்.

இவ்வளவுக்குப் பிறகும் இப்ப சென்னையில் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் புவனேஸ்வரிங்கிற பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிட்டு, அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிச்சுட்டார். பிரதீபாவுக்கும் ரமேஷ§க்கும் இதெல்லாம் பிடிக்கலை. தப்பான வழிக்குப் போகாதீங்கன்னு சொல்லித் தட்டிக் கேட்டாங்க. 'நீங்க யார் என்னை கேட்கிறது?’னு, அவங்களை டிரஸ்ட்டில் இருந்து கழற்றிவிட்டுட்டார்...'' என்று சொல்லி முடித்தார்.

''உங்கள் மனைவி ராஜம் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவரா?'' சேதுராமனிடமே கேட்டோம். பொறுமையாக பதில் சொன்னார் டாக்டர். ''படிக்கிற காலத்தில் இருந்தே அவங்களுக்கு Paranoid Delusion என்ற மன வியாதி இருக்கு. இந்த வியாதி இருக்கிறவங்க தேவை இல்லாம சந்தேகப்படுவாங்க. அப்பாவே தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்னு சொல்வாங்க. வீட்டுக்குள் யாரையும் விட மாட்டாங்க. நாங்க எல்லாரும் ஒரே வீட்டுக்குள் இருக்கிறோம். ஆனா, தனித் தனி ரூம், தனித் தனி சாப்பாடுதான். 25 வருஷமா நான் இந்த சித்ரவதையில் கஷ்டப்படுறேன். இந்த வியாதி எப்ப வரும், எப்பப் போகும்னு சொல்ல முடியாது. என் மனைவிக்கு மட்டும் இல்லை... அவங்க பரம்பரையில் நாலைஞ்சு பேருக்கு இந்த வியாதி இருக்கு. அதனால், இரண்டு பெண்ணுங்க கல்யாணமே ஆகாம இருக்காங்க.

ராஜத்தை டைவர்ஸ் பண்ண, எனக்கு மனசாட்சி இடம் தரலை. அதனால்தான் அவளை வெச்சுக்கிட்டே, பையன்களோட சம்மதத்தோட ஜெனிதாவை துணைவியா ஏத்துக்கிட்டேன். எதிர்பாராத விதமா அவள் இறந்துட்டதால், சீதாலெட்சுமியைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன். ஆனா, அந்தப் பெண்ணோட நடவடிக்கைகள் எனக்குத் திருப்திகரமா இல்லை. அதனால், வேலையைவிட்டு நீக்கிட்டேன்; கல்யாணமும் செய்யலை. இப்ப எங்களோட நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் புவனேஸ்வரியும் நானும் லிவ்விங் பார்ட்னரா இருக்கோம்!'' என்றவரிடம், டிரஸ்ட் விவகாரம் குறித்துக் கேட்டதற்கு,

''என்னுடைய சொத்துகள் அனைத்தையும் முறைப்படி பிரித்துக் கொடுத்துவிட்டேன். ஆனால், ஆஸ்பத்திரியையும் பங்கு போட நினைக்கிறாங்க. அது டிரஸ்ட் சொத்து. அதை யாரும் பங்கு போட முடியாது. என் மகள் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிட்டதால், டிரஸ்ட்டில் இருந்து நீக்கிட்டேன். மூத்த மகன் ரமேஷ§க்கு அவங்க அம்மாவுக்கு இருக்கும் வியாதியோட பாதிப்பு தெரியுது. அதனால்தான் எங்களுக்கு 100 கோடி கடன் கொடுக்க வந்தவங்களுக்கு, 'கடன் கொடுக்காதீங்க’ன்னு லெட்டர் போடுறான். டிரஸ்ட்டுக்கு எதிரா செயல்படுறவங்களை எப்படி டிரஸ்ட்டில் வெச்சுக்க முடியும்? அதுதான் அவனையும் நீக்கியாச்சு!'' என்றார்.

சேதுராமனின் மாமனார் சுப்பிரமணியன் சேர்வையைத் தொடர்புகொண்டோம். ''என் மகள் சொக்கத் தங்கம்யா... அவளுக்குப் பைத்தியம்னு சொல்றவங்க வாய் அழுகிப் போகும். சேதுராமன் இன்னிக்கு இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்து இருக்காருன்னா, அதுக்குக் காரணம் நான். ஆனா, கல்யாணம் பண்ணின மூணு மாசத்தில் இருந்தே அவர் புத்தியைக் காட்ட ஆரம்பிச்சுட்டார். 'ஆட்டக்காரி ஜெனிதாவைக் கல்யாணம் பண்ணினா, ஒண்ணோட ரெண்டு கையையும் வெட்டுவேன்’னு சொன்னேன். அந்த ஆளு கேட்கலை. இந்த ஆளால், தனக்கு ஏதாச்சும் சங்கடம் வந்துடக் கூடாதுன்னுட்டு என் பொண்ணு தீட்சை வாங்கிருச்சு. அப்படிப்​பட்ட பொண்ணு மேல் இப்படி அபாண்டமா பழி போடுறாங்களே..'' என்று பதறினார்.

ராஜத்தைத் தொடர்புகொள்ள நாம் பல முறை முயன்றோம். ''இதுபற்றி பத்திரிகையில் பேசுவதற்கு அவர் தயாராக இல்லை என்று சொன்ன அவர் மகன் ரமேஷ், ''ஆண்டவன் புண்ணியத்தில் எங்களுக்கு எல்லா செல்வமும் இருக்கு. ஆனா, எங்க அப்பாதான் எங்களைவிட்டு விலகிப் போகிறார். அவர் எங்களுக்கு, அதே பழைய அப்பாவாத் திரும்ப வேணும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கோம்!'' என்று உருக்கமாகப் பேசினார்.

இதனிடையே, 'மனநிலை சரியில்லாதவருக்கு எப்படித் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டது?’ என்று கேட்டு, மதுரை கலெக்டருக்கும், கமிஷனருக்கும் வக்கீல் ஒருவர் கடிதம் அனுப்ப... ராஜம், ரமேஷ், குருசங்கர் ஆகியோரது துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பித்தல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணைகள் வந்தால், பலர் பதில் சொல்ல வேண்டி இருக்கும்!

ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றும் 'மீனாட்சி மிஷன்’, தன் குடும்பத்தின் நிம்மதியை மட்டும் தொலைத்துவிட்டு நிற்கிறது!

கருத்துகள் இல்லை: