புதன், 6 ஜூலை, 2011

ஜெயலலிதா திமுக ஆட்சிக்கு பாராட்டு?


 முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  திமுக ஆட்சியின் மக்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக பெரும் பாராட்டை வழங்கியுள்ளார் 
குஜராத், ஆந்திரா, கர்நாடகத்தை காட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

அப்போது அவர்,’எனது அரசு அமைந்துள்ள 50 நாட்களுக்குள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் தமிழக அரசின் வளர்ச்சி திட்டம் தொழில் துறையில் முக்கிய பங்காற்ற தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான திட்டமாக இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்வாதாரத்துக்காக  தொழில் என்ற கருத்தை தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தொழில் துறையில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க, அனைத்து தொழில் நிறுவனங்களும் தீவிர பங்காற்ற வேண்டும்.

சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா மிகுந்த வாய்ப்பு வசதிகளை கொண்ட நாடாக விளங்குகிறது. வளர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கிறது. எனினும் இன்னமும் நம்நாட்டில் வறுமை, சமச்சீரற்ற வருமானம் ஆகியவை நிலவி வருகின்றன.

வறுமை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். வறுமை ஒழிப்பு விஷயத்தில் தமிழ்நாட்டில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகத்தை காட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அறவே ஒழிப்பதுதான் எனது கனவாக உள்ளது. இந்த லட்சியங்களை எட்டுவதற்கு  அனைவரும் பாடுபட வேண்டும். 2015ம் ஆண்டுக்குள் இந்த லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த கனவை நனவாக்க வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் அவசியமாகும்.

தமிழ்நாடு பாரம்பரியமாகவே தொழில் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. பொறியியல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை உள்ளிட்ட உற்பத்தி துறையில் தமிழகம் மிகச்சிறந்த ஆதாரத்தை கொண்டதாக விளங்குகிறது.
பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு தொழில் மயமாக்கம்,  மத்திய அரசின் தொழில் உரிமங்களைச் சார்ந்ததாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு லைசென்ஸ் ராஜ் திட்டம் ஒழிந்த பிறகு தொழில் வளர்ச்சியில் வேகம் அதிகரித்தது’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: