வியாழன், 7 ஜூலை, 2011

கல்வியில் கை வைத்தவர்கள், நிலைத்தது இல்லை!''


ஸ்பெக்ட்ரம், தேர்தல் தோல்வி என சோர்ந்துகிடக்கும் தொண்டர்​களை உசுப்பேற்ற தி.மு.க., களம் இறங்கிவிட்டது. திருவண்​ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில், 'கேள்விக்கு என்ன பதில்?’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட்டது.

சுப.வீரபாண்டியன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதலில் பேச வந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ''படித்துக் கிழித்தது போதும் என்பார்கள். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் பாடப் புத்தகத்தை பக்கம் பக்கமாக ஆசிரியர்கள் கிழித்துக்கொண்டு இருக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் இருக்கும் வள்ளுவர் படத்தை மறைக்கின்றனர். படத்தை மறைக்கலாம், குமரியில் வைத்துள்ள வள்ளுவர் சிலையை மறைக்க முடியுமா? சென்னை வள்ளுவர் கோட்டத்தை மறைக்க முடியுமா? சென்னை முதல் குமரி வரை, கருணாநிதி அடையாளம் இல்லாத எந்தக் கிராமமாவது உண்டா? என்னைப் பொறுத்த வரை தமிழ்நாடு என்று சொல்வதைவிட கலைஞர் நாடு என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்...'' என்று கருணாநிதியின் புகழ் பாடினார்.

சுப.வீரபாண்டியன், ''வெற்றி பெற்றால் கோட்டை. இல்லையேல் கொட நாடு என்று நாம் இருப்பது இல்லை. மக்களைப்பற்றி நினைத்துக்கொண்டே இருப்பதால்தான், நமக்குக் கூட்டம் கூடுகிறது. 1954-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் சலவைத் தொழிலாளர் மாநாடு நடந்தது. மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜாஜி, 'நீங்கள் படிக்க ஆரம்பித்தால், எங்கள் துணிகளை யார் துவைப்பார்கள்? தினமும் மூன்று மணி நேரம் குலத் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். இதனால், 5,200 பள்ளிகளை மூடினார். அதை எதிர்த்து தந்தை பெரியார் போராடினார். இதன் காரணமாக, ராஜாஜி ஆட்சி பறிபோனது. கல்வியில் கை வைத்தவர்கள் தமிழகத்தில் ஒரு நாளும் நிலைத்தது இல்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வருவாய் இழப்பு என்பது பெரும் குற்றம் என்றால், பாடப் புத்தகங்களையும், சட்டமன்றக் கட்டடத்தையும் வீணாக்குவதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?'' என்று கொந்தளித்தார்.

இறுதியாகப் பேசிய தி.மு.க. பேச்சாளர் திருச்சி செல்வேந்திரன், ''கை தூக்கிவிட்டவனைப் பழிவாங்குவது இன்று தோன்றியது அல்ல, 50 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. காங்கிரஸ் கட்சியை நம்பிக் கெட்டோம். யாரை ஆட்சியிலே உட்காரவைக்க கருணாநிதி உழைத்தாரோ, அவர்களே கருணாநிதியின் மகனை மிசாவில் உள்ளே தூக்கிப் போட்டார்கள். பழிவாங்க 1,000 வழிகள் உண்டு. 88 வயதுப் பெரியவரை கண் கலங்கவைத்து உள்ளீர்களே, நீங்கள் நம்பும் அந்த ஆண்டவனே உங்களை மன்னிக்க மாட்டார். எங்களை வேதனைப்படுத்தியவர்கள் எல்லாம் கடைசியில் என்ன ஆனார்கள் என்பதை சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்றார் உணர்ச்சி பொங்க!

கருத்துகள் இல்லை: