போதையில் அட்டகாசம் சிறப்பு எஸ்ஐயை புரட்டி எடுத்த ஏட்டு
திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஏட்டு, தடுக்க வந்த சிறப்பு எஸ்ஐயை விரட்டி விரட்டி தாக்கினார். இதை பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சுகுமாறன்(40). நேற்று பணிக்கு வந்த இவர், பாதியிலேயே வீட்டுக்கு செல்வதாக சக போலீசாரிடம் கூறிச் சென்றார்.
சீருடையில் அளவுக்கு அதிகமான போதையில் திண்டுக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ரகளையில் ஈடுபட்டார். அப்பகுதியில் பணியில் இருந்த வடக்கு போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்ஐ உலகநாதன், அவரை வீட்டுக்கு செல்லும்படி கூறினார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுகுமாறன், சிறப்பு எஸ்ஐயை சரமாரியாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தினுள் அவர் ஓடினார். அவரை விடாமல் துரத்திச்சென்று ஸ்டேஷன் வளாகத்தில் ஏட்டு தாக்கினர். இதை தடுக்க வந்த மற்ற போலீசாரையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் விரட்டி விரட்டி தாக்கினார். இதனை பொதுமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். சுதாரித்த போலீசார், ஏட்டு சுகுமாறனை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள வடக்கு போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவுக்கு இழுத்துச் சென்றனர்.
அங்கும் அவர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார். வழிக்கு வராத அவரை லாக்கப்பில் போட்டு அடைத்தனர். பின்னர் இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சென்னை போக்குவரத்து பிரிவில் சுகுமாறன் பணியாற்றிவிட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர் குடிபோதையில் பணிக்கு வந்ததாக 2 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக