பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிசெய்த அனுபவத்திலும், சொந்தமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி எங்களது மொபைல் ஆப்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மார்க்கெட்டிங் உத்திகளை தேடித் தேடி படிக்கத்தொடங்கி அது கொஞ்சம் கொஞ்சமாக எப்படி மார்க்கெட்டிங் என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது. அரசியலில் எப்படியெல்லாம் நுணுக்கமாக கையாளப்படுகிறது. நம் தலைவர்கள், கட்சிகள் தவற விடும் விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கபார்க்க பரபரவென்று இருந்தது. எந்த செய்தியை பார்த்தாலும் அதன் பின்னுள்ள மார்க்கெட்டிங் யுத்தி என்ன? தங்களது குறைகளை குற்றங்களை களவுகளை சதித்திட்டங்களை மறைக்க மார்க்கெட்டிங் யுத்திகளை பயன்படுத்தி எப்படியெல்லாம் மடைமாற்றுகிறார்கள் என்று பார்க்கும்போது “ அடப்பாவிகளா.. பிரில்லியண்ட்-யா.. என்று ஒருபுறமும் “அடேய்களா.. உங்க முதுகுக்கு பின்னாடி உங்க வீட்டை கொள்ளையடிக்கிறான். நீங்க எங்கேயோ வேடிக்கை பார்க்கிறீங்களேயா..” என்று மறுபுறமும் கூறினாலும் அந்த வலையில் நாங்களும் விழவே செய்கிறோம். கொஞ்சம் விட்டாலும் மயக்கத்தில் ஆழ்த்திவிடும். அப்படியொரு மாயவலை அது. அதனால் தான் இந்த புத்தகத்திற்கு "மாயவலை" என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன்.
The Matrix படத்தில் ஒரு கற்பனை உலகில் மக்களை உலவவிட்டு நிஜஉலகில் அவர்களை ஒரு பாட்டரி செல்லாக்கி அவர்களின் சக்தி அனைத்தையும் உறிஞ்சும் இயந்திரம் போல தான் செயல்படுகிறது இன்றைய அரசியல் மற்றும் பெருவணிக உலகம். இது சரியா தவறா என்று விவாதிக்கபோவதில்லை. ஏனென்றால் இரண்டும் கலந்தே இருக்கிறது. சமத்துவத்தின் தேவையை உணராமல் எல்லா மதங்களின் மார்கெட்டிங்கிலும் எப்படி மயக்கம் கொண்டிருக்கும்போது எப்படி இதை சரி தவறு என்று விவாதிப்பது?
மக்களை இதில் இருந்து மீட்க நினைக்கும் கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் இந்த மாயவலையை புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது தான் அந்த மாட்ரிக்ஸ் உலகத்தை ஊடுருவி அவர்களின் வழியிலியே அவர்களை எதிர்க்கமுடியும். வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். எத்தனை பெரிய சக்தி என்றாலும், படைகள் என்றாலும் அவர்களை அஞ்சவைக்க முடியும். போரில் வெற்றிபெற முடியும்.
இந்த சிறு புத்தகம் அந்த மாட்ரிக்ஸ்ஸில் இருந்து கொஞ்சமேனும் மக்களை மீட்கமுடிந்தால் பெருவெற்றி தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக