இதுகுறித்து பிகார் எதிரொலி: காங்கிரஸுக்கு கடிவாளம் போடும் திமுக என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் எழுதியிருந்தோம். அதில், ‘பிகார் பாடத்தை நாம் அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கற்றுக் கொள்ள வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுக்கக் கூடாது. பிகார் தேர்தலை காரணம் காட்டியே நாம் காங்கிரஸுக்கு 20 முதல் 30 தொகுதிகள் மட்டுமே கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேஜஸ்வி யாதவ் மாதிரி நாமும் இலவு காத்த கிளியாக மாற வேண்டிய நிலை ஏற்படும்’ என்று ஸ்டாலினிடம் திமுக மாசெக்கள் எச்சரித்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.
தமிழகத்தில் மட்டுமல்ல... அடுத்த ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மேற்கு வங்காளம், கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு தான் சார்ந்திருக்கும் கூட்டணியில் கூடுதல் சீட்டுகள் பெறுவது சவாலாகியுள்ளது.
மேற்கு வங்காளம்:
மேற்கு வங்காளத்தில் கால்நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த கம்யூனிஸ்டு ஆட்சியை அகற்றி அரசமைத்தார் மம்தா பானர்ஜி. இப்போது அவரது ஆட்சியை அகற்றி அங்கே பாஜக ஆட்சியை கொண்டுவருவதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர கவனம் செலுத்துகிறார். இதற்காக அவர் மேற்கு வங்காளத்தில் தொடர் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் வர இருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி என்று ஏற்கனவே தீர்மானித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி பேசும்போது, “ஒவ்வொரு கட்சியும் தான் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றது. அதேநேரம் மேற்கு வங்காளத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதேநேரம் இடது சாரிகள் 42 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில்தான் டெபாசிட் பெற்றார்கள். எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டால் அது இரு கட்சிகளிலுமே பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக சீட்டுகள் தரக் கூடாது என்று பிகார் தேர்தலுக்குப் பின் உருவாகியுள்ள சூழல் குறித்து தி இந்து ஆங்கிலப் பத்திரிகைக்கு, திமுக பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பதில் சொல்லியிருக்கிறார்.
“திமுக காங்கிரஸ் கூட்டணியில் இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கூட்டணியில் எத்தனை சீட்டுகள் யாருக்கு என்ற விவகாரம் பற்றி தேர்தல் நெருங்கும் நேரத்தில் எங்கள் தலைவர் முடிவெடுப்பார்” என்று கூறியுள்ளார் டி.ஆர்.பாலு.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக