புதன், 11 நவம்பர், 2020

பிகார்: முதல்வர் நிதிஷ் - தனிப்பெரும் கட்சி ஆர்ஜேடி

பிகார்: முதல்வர் நிதிஷ் -  தனிப்பெரும் கட்சி  ஆர்ஜேடி
minnampalam : பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேநேரம் நிதிஷ்குமார் கட்சியை விட பாஜக சுமார் இரு மடங்கு அதிக இடங்களில் வெற்றிபெற்றுவிட்டதால், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூடுபிடித்துள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிட நேற்று (நவம்பர் 10) இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த வகையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மையான 125 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி 137 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி பல இடங்களில் நிதிஷ்குமார் கட்சியை தோல்வி அடையச் செய்தும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தான் வெற்றிபெற்றது.

லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கத்பந்தன் அணி 110 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முன்னெடுத்திருக்கிறது. ஆனபோதும் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே பிடித்திருக்கிறது.

நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் என்று பாஜக அறிவித்துவிட்டாலும், 43 இடங்களில் வெற்றிபெற்ற நிதிஷை முதல்வராக்கி, 74 இடங்கள் வெற்றிபெற்ற பாஜக ஆதரவு அளிப்பதா என்ற கேள்வி, பாஜகவின் பிகார் கட்சிக்குள் முளைத்திருக்கிறது. அதேநேரம் பாஜக இன்னொரு எச்சரிக்கை உணர்வையும் பெற்றிருக்கிறது.

“நிதிஷ்குமார் குறைந்த தொகுதிகள்தான் பெற்றிருக்கிறார் என்பதால், இப்போது அவரை முதல்வர் ஆக்கினாலும் அமைச்சர்கள், துறைகள் போன்றவற்றில் பாஜகவே பெரும் செல்வாக்கு செலுத்தும். இது நிதிஷ்குமாரை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்... நிதிஷ்குமாரின் ஜே.டி(யு), ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்தால் அரசு அமைப்பதற்கான பெரும்பான்மை உறுதியாக இருக்கும். எனவே நிதிஷ்குமாரைக் கையாள்வதில் பாஜக எச்சரிக்கையாக இருக்கும். நிதிஷ்குமாரைப் புண்படுத்தும் எதையும் பாஜக செய்யாது” என்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் மூலம் பிகாரில் உண்மையான போட்டி ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கும், பாஜகவுக்கும்தான் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டோம். அடுத்த தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கு மட்டுமே நேரடிப் போட்டி இருக்கும் என்றும் பாஜகவினர் கூறுகிறார்கள்.

ஆளும்கூட்டணி 124, எதிர்க்கட்சி கூட்டணி 110, மற்றவர்கள் 9 என்ற நிலையில் இருப்பதால் பிகாரில் எந்த நேரமும் அரசியல் நிச்சயமற்ற சூழல் ஏற்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: