உதாரணமாக விவாகரத்து, பிரிந்து வாழ்தல், சொத்து பிரிவினை, மது அருந்துதல், தற்கொலை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உடனான பாலியல் உறவு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் உடனான உறவுகளை அமெரிக்காவின் உதவியுடன் சீராக்கியதை தொடர்ந்து இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சமீபத்தில் ஜக்கிய அரபு அமீரகத்துடனான உறவை மேம்படுத்தியது இஸ்ரேல்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதனால் ஏற்கனவே இஸ்ரேலிய சுற்றுலா வாசிகளும் முதலீட்டாளர்களும் அதிகரித்துள்ளனர்.
மாற்றங்களின் அர்த்தம் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்ட நிபுணர்களும், வெளிநாட்டுச் சமூகத்தினரும் இந்த மாற்றங்களுக்குப் பல விதமாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.
"முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கூட்டும் விதத்தில் இந்த புதிய சட்ட மாற்றங்கள் அமைந்துள்ளதாக" சர்வதேச சட்ட அமைப்பான பேக்கர் மெக்கென்சியை சேர்ந்த வழக்கறிஞர் அமிர் அல்காஜா தெரிவிக்கிறார்.
சமீப காலங்களில் வெளிநாட்டுச் சமூகத்தினரை நேரடியாக தாக்கும் அளவிற்கான பல சட்டங்களை ஐக்கிய அரபு அமீரக அரசு திருத்தியுள்ளது. உதாரணமாக கோல்டன் விசா திட்டம், தொழில் முனைவோருக்கான ரெசிடன்சி விசாக்கள் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களைக் கூறலாம்.
மது அருந்துதல், விருப்பப்பட்டு வைத்துக் கொள்ளும் பாலியல் உறவு போன்றவற்றுக்கு வெளிநாட்டினர் அல்லது உள்ளூர்வாசியாக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும். தற்போது இந்த விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டங்களில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான் இந்த உத்தரவுகளை நவம்பர் 7, 2020 அன்று அறிவித்தார். இது உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அனைத்து அமீரக நாடுகளும் உடனடியாக இந்த மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" என்கிறார் அல்கஜா.
இந்த நடவடிக்கை சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, மேலும் பல நிகழ்வுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.
குறிப்பாகப் பெரிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும், லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவரவும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சர்வதேச நிகழ்வுக்கு இது உதவும் என்றும் நம்பப்படுகிறது.
இதில் முக்கியமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களின் விவாகரத்து, பிரிவு மற்றும் சொத்து பிரிவினை ஆகியவற்றில் ஏற்பட உள்ள மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.
தங்கள் சொந்த நாட்டில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விவாகரத்துக் கோரினால், அவர்கள் சொந்த நாட்டில் இருக்கும் திருமண சட்டங்களையே பின்பற்றலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தங்களை அமல்படுத்துவது மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அல்கஜா நினைக்கிறார்.
"உள்ளூரை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் சேர்ந்ததுதான் ஐக்கிய அரபு அமீரக சமூகம். இதில் பெரும்பாலானவர்கள் ஒருவரை ஒருவர் அவர்கள் கலாசாரத்தை ஏற்று மதித்து வாழ்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.
இந்த சட்ட மாற்றங்களில் அடுத்த முக்கியமான விஷயம் கவுரவக் கொலைகள் தொடர்புடையது. குடும்ப கவுரவம் என்ற பெயரில் ஆண் உறவினர் ஒருவர் பெண் உறவினர் ஒருவரை துன்புறுத்துவது இனி தனியாக கையாளப்படாமல், மற்ற வழக்குகள் போலவே கையாளப்படும்.
புதிய சட்டம் மது அருந்துதலையும் குற்றச் செயலிலிருந்து நீக்குகிறது.
21 வயதுக்கு மேற்பட்டோர் உரிமம் இல்லாமல் அங்கீகாரம் பெற்ற பகுதிகளில் மது அருந்தினால் குற்றமில்லை என்று சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
"மது வைத்திருப்பது என்பது எப்போதும் அச்சமாகவே இருந்தது. இந்த மாற்றங்கள் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத இந்தியர் ஒருவர்.
திருமணம் ஆகாதவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதும் வெளிநாட்டவருக்குக் குற்றச்செயல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
எதிர்வினைகள் என்ன?
கடந்த 25 ஆண்டுகளாக துபையில் வாழும் இந்தியரான 28 வயதான ஜரானா ஜோஷி, பல வெளிநாட்டவர்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக இந்த சட்டத்திருத்தங்கள் அமைந்திருப்பதாக கூறுகிறார்.
இது எங்களுக்கு வீடு போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
ஐக்கிய அரபு அமீரகத்தை வாழவும், வேலை பார்க்கவும் தகுந்த இடமாக வலுவாக்கி, மேலும் மேம்படுத்த இந்த மாற்றங்கள் உதவும் என அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்த மாற்றங்களால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வரும் என்பதால் இது ஒரு சிறந்த முன்னேற்றம் என்று ஐக்கிய அரபு அமீரக ஊடகங்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக