திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மீண்டும் மும்மொழித்திட்டம் .. NEP2020ல் இந்தி திணிப்பை தூசு தட்டி பட்டி டிங்கேரிங் செய்து...

Muralidharan Pb : · NEP2020ல் மும்மொழிக் கொள்கையில், திணிப்பை மீண்டும் தூசு தட்டி பட்டி டிங்கேரிங் செய்து கொடுத்துள்ளார்கள் அதை வடிவமைத்த அறிஞர்கள். தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 1-10 வகுப்பு வரை, பெரும்பாலும் ஆங்கிலம், தமிழ் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி தேவையா ?     

நீங்கள் கல்வி பயிலவோ, வேலைக்கோ, தொழில் செய்யவோ வடக்கில் சென்று சில காலம் குடியேறப் போக நினைக்கிறீர்களா ?       

100% இந்தி மொழி கற்றல் நிச்சயம் தேவை. ஆகவே நீங்கள் எவ்வழியிலாவது CBSE பள்ளியில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இந்தி இரண்டாவது மொழியாக தேர்வு செய்து படிக்கலாம். எனக்கு எனது தமிழ் முக்கியம் என்றால் இரண்டாவது மொழியாக கற்க வைத்து, தனியாக இந்தி கற்றல் அவசியம். அதுவும் நீங்கள் இருக்கும் பகுதியில் இந்தி கற்று கொடுக்க பிரவீன் 2 படித்த ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் இருக்கிறார்கள்,அவர்களிடம் குறைந்தது பிரவேஷிகா வரை படிக்க 2 ஆண்டுகள் ஆகும். திட்டமிட்டு படித்து தேர்வு எழுதினால், உங்களால் நன்றாக இந்தி பேசும்/எழுதும்/புரியும் அளவிற்கு கற்றுக்கொள்ள முடியும்.

மூன்றாவது மொழியாக இந்தி படிப்பது உதவாது. இரண்டாவது மொழியாக கற்றல் தான் பயன் அளிக்கும்.

எதற்கு அரசிடம் போய் நிற்க வேண்டும்?

நான் தமிழ் நாடு தாண்டப் போவது இல்லை அல்லது எனது இலக்கு வெளிநாட்டிற்கு சென்று வேலையோ, கல்வியோ, தொழிலோ செய்யப் போகிறேன் என்றால் இந்தி நிச்சயமாக அவசியம் இல்லை.

சரி, நான் திடீரென அலுவலகத்தில் மாற்றலாகி வடக்கே செல்லப் போகிறேன், அப்பாவுக்கு வேலையில் மாற்றல் ஆகிவிடும் அல்லது சந்தர்ப்ப சூழல் உங்களை இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்படா ? கவலையே வேண்டாம், 1 மாதத்தில் இந்தி கற்றுக்கொள்ள சில நூறு ரூபாய் செலவு செய்தால் புத்தகம் கிடைக்கும். படித்தால், தாராளமாய் இந்தி பேச முடியும்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பணிக்காக வடக்கே செல்ல நேரிட்டது, தமிழ், ஆங்கிலம் ஏதும் தெரியாது ஆனால் புத்தகம் படித்து, அற்புதமாக இந்தி கற்றார். இந்தி கற்று, 5 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.

இன்னொரு நண்பர் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார், அவர் பள்ளியில் கூட இந்தி படிக்கவில்லை, ராணுவத்தில் 1 மாதம் தொடர்ச்சியாக இந்தி கற்றுக்கொள்ள காலையில் அவருக்கு பயிற்சி கொடுத்து இன்று சிறப்பாக அவரால் இந்தி பேசமுடியும், இந்திய ராணுவத்தில் மிக உயரிய பதவியில் தற்போது பணியாற்றுகிறார்.

சரிங்க, நான் அவ்வளவு கல்வியறிவு இல்லாதவன், என்ன செய்வது? என்பவர்களுக்கு இன்னொரு உதாரணமும் உண்டு, நண்பரின் தந்தை சிறுவயதில் மத்திய அரசு பணி கிடைத்து, வடமாநிலம் சென்ற போது, அவருக்கு பெரிய அளவிற்கு ஆங்கில புலமை இல்லை, இந்தியும் தெரியாது. தெரிந்தது தமிழ் மட்டுமே. அங்கு உள்ள சூழலால் இந்தி கற்று,ஆனால் நீண்ட காலம் பணிபுரிந்து, பணி மூப்பு பெற்று அவர்கள் குடும்பம் தற்போது தமிழகத்தில் வந்து வாழ்கின்றகள்.

இன்று கையடக்கமாக அலைபேசியில் எல்லாம் கற்க எவ்வளவோ வசதிகள் உண்டு.

எனவே இந்தி தெரியலைனா உலகமே இருட்டாகிவிட்டது என்பதெல்லாம் சுத்த பித்தலாட்டம். உடான்ஸ்.

சரி, இன்னொரு பக்கம் பார்ப்போம்.

இந்தி மட்டுமே தெரிந்த வட்டி/நகைக்கடை சேட், தமிழகத்தில் மூலை முடுக்குகளில், தமிழ் மட்டுமே பேசக்கூடிய குடிசைப்பகுதிகளில், குக்கிராமங்களில் இல்லையா? இப்போது மளிகை கடைகள் கூட தமிழே அறியாத வடக்கு மாநில இளைஞர்கள் கடை வைத்து பிழைக்கிறார்கள்.

எனது அனுபவம், எங்கள் வீட்டில் நிகழ்வுக்கு இனிப்புகள் செய்ய நான் அணுகிய ராஜஸ்தான் மாநிலத்தவருக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும், எனக்கு தெரிந்த இந்தியில் அவருக்கு ஆர்டர் செய்துவிட்டு, முன்பணம் கொடுத்ததும், சொன்ன நேரத்தில் வந்து, ஆர்டர் செய்ததை கொடுத்து விட்டு போனார். அவருக்கு உதவியாக தமிழ் மட்டுமே பேசும் ஆட்டோக்காரர். இதுதான் உண்மை நிலவரம்

ஆகவே அவர்கள் கூறும் கட்டுக்கதைகளை புறம் தள்ளி, இரு மொழி மட்டுமே கற்போம். எவை நமக்கு தேவை என்று அவரவர் சொந்தமாக முடிவெடுக்கட்டும்.

அடுத்து,

NEP2020ல் இலக்காக 100% மேல் படிப்பு படிக்க இலக்காக வைத்துள்ளார்கள் மைய அரசின் கொள்கையை வரைந்தவர்கள்.

எளிய எடுத்துக்காட்டு,
சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல ஒருவர், காலை 6.20க்கு செல்லும் கோவை விரைவு ரயிலில் பயணிக்க 5 மணிக்கே எழுந்து அடித்து பிடித்து செல்ல வேண்டும். ஆனால் அதே வண்டியில் சேலத்திலிருந்து கோவைக்கு ஒருவர் செல்ல எதற்கு அடித்து பிடித்து கிளம்ப வேண்டும்? 10 மணிக்கு சாவகாசமாக கிளம்பி 10.55 மணிக்கு வண்டியை பிடித்தால் போதும்.

மற்ற மாநிலங்கள் தங்களது இலக்கான 50% தொட ஓடட்டும். இலக்கை அடைந்த தமிழநாடு எந்த உத்தியை கையாண்டது என்று கவனித்து, அதையே தொடர்ந்தால், இலக்கு எளிதாகும். நமது இலக்கு கோவை அதாவது 100% உயர் கல்வியை நோக்கி இருக்கின்றது, நாம் எதற்கு பிற்போக்காக போகவேண்டும்?
6 பாடங்கள் எதற்கு 5 கற்று அறிவை வளர்ப்போம். தேவை என்றால் எதையுமே கற்போம். நமக்கு எந்த மொழியும் எதிரி அல்ல.

மேலும் இந்தி படிக்காமல் போனதால் தமிழ்நாடு எதனை இழந்துள்ளது? 2011 கணக்கீட்டின்படி 80% மேல் கல்வியறிவு, தொழில் வளம், தனி நபர் வருமானம், மிக்குறு மற்றும் சிறு தொழில், கனரக தொழிற்சாலையிகளில், அதிக வரி பெரும் மாநிலமாக முதல் 3 இடங்களில் திகழ்கிறது, நாம் போட்டியிட வேண்டியவை ஐரோப்பா மற்றும் வளர்ந்த நாடுகளோடு.

அழகாக ஆடிக்கொண்டிருக்கும் மயிலை, நீ சரியாக ஆடவில்லை இரு உன் தொகையை உரிக்கிறேன் என்று பிடிங்குவதைப் போல, நம்மை எப்போதும் ஏளனம் செய்ய ஒரு கூட்டம், நாம் அவங்களை மாதிரி இல்லை, நாம் அவங்களை மாதிரி இல்லை என்று கூறிக்கொண்டு தான் இருக்கும். அவற்றை புறந்தள்ளி நாம் நமது இலக்கில் கவனம் செலுத்தி முன்னேறுவது தான் அறிவுடைமை. மயில் மயிலைப்போல தான் இருக்கவேண்டும். எதற்கு வான்கோழியாக இருக்கவேண்டும் ?

மூன்றாவது மொழியாக ஒரு மொழியை தேர்ந்தெடுக்க நம்மை இந்தி கற்க சொல்வது போல, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக தேர்வு செய்வார்களா ? அல்லது மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளை தேர்வு செய்வார்களா?

சமஸ்கிருதம் தான் அவர்களின் தேர்வாக இருக்கும். பெண்களை கூட சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்காமல் வைத்து இருந்த காலம் ஒன்று இருந்தது. அக்காலத்தில் பார்ப்பனர் வீட்டுப் பெண்களுக்கு கூட அன்று அதுதான் நிலைமை.

அப்படி என்ன பெரிய பொக்கிஷம். மறைத்து வைக்கப்பட்டு இப்போது அந்த வடமொழி புழக்கத்தில் இல்லாமல் போனது தான் அவர்கள் செய்த சாதனை. தற்போது மீண்டும் மும்மொழி கொள்கையை கையில் எடுத்துள்ளது பாஜக அரசு. இந்தி பேசும் மாநிலத்தில் நிச்சயம் சமஸ்கிருதம் தான் மூன்றாவது மொழியாக இருக்கும் என்றால் மிகையல்ல.

இந்தி தெரியாத நான் அவமானப்பட்டேன், வருத்தப்பட்டேன் என்று சொல்வதெல்லாம்,
சின்ன வயதில் ஒரு காக்கையை பார்ததால் one for sorrow, two for joy என்று விளையாட்டு போல பேசுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள், எதையெல்லாம் திணிக்கிறார்களோ அவையெல்லாம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பொருள்.

 

கருத்துகள் இல்லை: