மின்னம்பலம் : ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கி சரியாக ஒரு மாதத்துக்குப் பின் நேற்று (ஆகஸ்டு 10) மீண்டும் காங்கிரசையே தேடி வந்து சமரசமாகியிருக்கிறார் அம்மாநில துணை முதல்வர், காங்கிரஸ் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்ததன் அடிப்படையில் இந்த முடிவை எட்டியிருக்கிறார் சச்சின் பைலட்.
அதேநேரம் வரும் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில், தன்னோடு வந்த 18 எம்.எல்.ஏ.க்களில் சுமார் ஐந்து பேருக்கும் மேல் மீண்டும் அசோக் கெலாட்டுடன் சென்றுவிட்டதாகவும், தன் பலம் குறைந்துவிட்டதன் அடிப்படையிலேயே தேசியத் தலைமையோடு சமரசத்துக்குச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த சர்ச்சையின் தொடக்கத்திலேயே பைலட் பிரியங்கா காந்தியுடன் பேசியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதன் பின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஹரியானா, மற்றும் கர்நாடக மாநிலங்களில் தங்கவைக்கப்பட்டு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்துக்கு வர மறுத்ததால் பேச்சுவார்த்தையை தொடரவில்லை. பைலட்டோடு இன்னும் அதிக எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள், அதன் அடிப்டையில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று பாஜகவும் சில திட்டங்களை வகுத்திருந்ததாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அதற்கு மாறாக பைலட் முகாமில் இருந்தே சில எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் கெலோட்டுடன் தொடர்புகொண்டிருந்தனர். இந்த தைரியத்தில்தான் சில நாட்களுக்கு முன், ‘பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வந்தால் அவர்களை மதித்து ஏற்றுக் கொள்வோம். எனக்கு ஏதும் வருத்தமில்லை’ என்று கெலாட் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் 14 ஆம் தேதி சட்டமன்றம் கூடுகையில் தனது பலம் மேலும் குறைந்துவிடும் என்ற தோற்றத்தைத் தவிர்ப்பதற்காக சச்சின் பைலட் காங்கிரஸுக்குள் மீண்டும் தரையிறங்கிவிட்டார் என்கிறார்கள். பிரியங்கா காந்தியுடன் பைலட் நடத்திய பேச்சுவார்த்தை முதல்வர் அசோக் கெலாட்டுக்கு முழு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலும், தன் ஆட்சிக்கு இப்போது சிக்கல் இல்லை என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
டெல்லி பத்திரிகையாளர்களோ, ‘இது பிரியங்கா காந்தியின் அரசியலில் ஒரு மைல் கல். மத்தியப் பிரதேசம் போல இழக்க இருந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியை பிரியங்கா காந்தி காப்பாற்றியிருக்கிறார். அவர் தொடர்ந்து சச்சின் பைலட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சச்சின் பைலட் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் கைவிடுவது மற்றும் பைலட் முகாமின் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடமளிப்பது ஆகியவை இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. எனவே பைலட் மீண்டும் துணை முதல்வராகலாம்” என்கிறார்கள்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக