தினத்தந்தி :காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் நான் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்து உள்ளதாக நினைக்கிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:- நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை விமர்சிக்கும் பயத்தை கைவிட வேண்டும். காங்கிரஸ் சக்தி வாய்ந்த கட்சியாக இல்லாமல் போய் விட்டது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மறுசீரமைப்பு மூலம் கட்சியின் பலம் அதிகரிக்கும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
காங்கிரசில் 45 ஆண்டுகள் இருந்து உள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதாவில் இணைந்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக தான் உள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பா.ஜனதாவில் இணைந்தார். ராஜஸ்தான் அரசியலிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தற்போது அவர் சமாதானமாகி உள்ளார். அது அந்த கட்சியின் பிரச்சினை.
ஒவ்வொரு கட்சியிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், தங்களை கட்சிக்குள் வளர்த்து கொள்ளவும் விரும்புகிறார்கள். இதற்கு மூத்த தலைவர்கள் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். துடிப்பான இளைஞர்களுக்கு பேசவும் சற்று வாய்ப்பு அளிக்க வேண்டும். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம் நான் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்து உள்ளதாக நினைக்கிறேன். வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக