nakkheeran.in - கலைமோகன் மூணாறு நிலச்சரிவில் மாயமான தனது எஜமானர் குடும்பத்தை வளர்ப்பு பிராணியான நாய் ஒன்று அந்த பகுதியிலேயே முகாமிட்டு தேடி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், 6 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தென்காசி, தூத்துக்குடி, கயத்தாறு என தென் மாவட்டத்தை சேர்ந்த மக்களிடையே இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது நிலச்சரிவில் சிக்கிய மீதமுள்ள
15 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பெட்டி முடி
பகுதியில் கடந்த 5 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில், 6 ஆவது
நாளான இன்றும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. அதேபோல் அப்பகுதி
மக்கள் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மீட்பு பணி வீரர்கள் அங்கு குவிந்திருக்க, பாதிக்கப்பட்டவர்களின்
உறவினர்களும், மக்களும் கவலையுடன் காத்திருக்க மீட்புப்பணிகள் ஆறாவது நாளாக
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிலச்சரிவு சம்பவத்தில்
தனது எஜமானரின் குடும்பத்தை முழுமையாக தொலைத்த செல்ல பிராணியான நாய் ஒன்று
அந்த பகுதியை விட்டு செல்லாமல் அங்கேயே முகாமிட்டு எஜமானரின் குடும்பத்தை
தேடிவருகிறது.
ஒவ்வொரு முறையும் சடலங்கள் மீட்கப்படும் பொழுது அந்த இடத்திற்கு ஓடிச் செல்லும் அந்த நாய், மீட்கப்பட்டவர் தனது எஜமானா என உயிர் நேயத்துடன் ஓடிச்சென்று எட்டிப்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாந்தே போகிறது. இப்படி கடந்த சில தினங்களாகவே அந்த ஐந்தறிவு ஜீவன் அதே இடத்தில் முகாமிட்டு தனது எஜமானரை தேடி வருகிறது. மனிதம் கடந்த உயிர் நேயமும், ஒரு வளர்ப்புப் பிராணியின் அன்பும் அங்கு இருப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக