வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ராஜஸ்தானில் பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி .. சச்சின் பைலட் பேராசை வீணானது!

சாவித்திரி ண்ணன்
: · ராஜஸ்தானில் ஆப்பரேஷன் லோட்டஸ் தோல்வி கண்டது! அதனால், அதிர்ஷ்டவசமாக நோயாளி தப்பித்துவிட்டார்! கோவாவில் கொத்தாக அள்ள முடிந்தது! நாகலாந்தில் நாற்றமெடுத்த அரசியலை அரங்கேற்ற முடிந்தது!       மணிப்பூரில் பாஜகவின் money politics வென்றது! கர்நாடகத்தில் கவிழ்க்க முடிந்தது!     மத்தியபிரதேசத்தில் ஜோதிராதித்திய சிந்தியாவை தூக்கமுடிந்தது!   பாஜகவின் பண பலம், அதிகார பலம், நீதிமன்றத்தை சட்டமன்ற அதிகாரங்களில் தலையிட வைத்தது, அழிச்சாட்டியம் செய்த கவர்னர்…. ஆகிய அனைத்து அஸ்திரங்களும் செயலிழந்தன! ஒரு மாத முயற்சிக்கு பிறகும் ராஜஸ்தானின் காங்கிரஸ் கோட்டையை ஒன்றும் செய்யமுடியவில்லை! பாஜக அவமானப்பட்டது தான் கண்டபலன்!

அனுபவசாலியான முதல்வர் அசோக்கெலாட்டின் உறுதிப்பாடு! காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஒற்றுமை, காங்கிரஸ் மத்திய தலைமையின் அசாத்திய பொறுமை ஆகியவற்றால் வெற்றி சாத்தியப்பட்டுள்ளது!


மக்கள் செல்வாக்கு, எம்.எல்.ஏக்களின் செல்வாக்கு, ஆட்சியை கொண்டு செலுத்தும் பக்குவம் ஆகிய அனைத்து நிறைந்திருந்த அசோக்கெலாட் நிறைகுடமாக தளும்பாமல் உறுதிகாத்தார்! ராகுலும்,பிரியங்காவும் தங்கள் நண்பர் என்பதால் சச்சின் பைலட்டின் தகுதிக்கு மீறிய ஆசைக்கு இசைந்து கொடுக்கவில்லை என்பது கவனத்திற்குரியது!

தன்னுடைய உயரம் என்னவென்பதை உணர இந்த ஒரு மாதகாலகட்டம் சச்சின் பைலட்டிற்கு உதவியிருக்க வேண்டும்! தன்னுடைய பெருமைகள், பலம்,செல்வாக்கு அனைத்தும் தன்னை அடையாளப்படுத்திய காங்கிரஸால் பெற்றதேயன்றி,தனக்கானதல்ல! இது வரை தான் கட்சியால் பெற்றதே அதிகம் திருப்பி என்ன தந்துள்ளோம் என்று அவரை திரும்பி பார்க்க செய்ய இந்த காலகட்டம் அவருக்கு உதவிற்று என்றும் கொள்ளலாம்!

காங்கிரஸில் எதிர்கால ஜோதி போல பாவிக்கப்பட்ட ஜோதிராதித்திய சிந்தியா பாஜகவில் உள்ள தன் சொந்தங்களை நம்பிச் சென்று, இன்று ஒளிமங்கிய ஜோதி போல காட்சியளிக்கிறார்!

அவசரக் குடுக்கைத்தனமும்,அதிகார ஆசையும் தற்காலிக ஆதாயங்களை மட்டுமே தரமுடியும். தன்னை தகுதிப்படுத்தி வைத்துக் கொண்டு, சலியாமல் உழைப்பவர்களுக்கு உரிய காலத்தில் உன்னத வாய்ப்புகள் தானே தேடி வரும்!

கருத்துகள் இல்லை: