ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

கேரளா "ரெட் அலர்ட்" திரும்ப பெறப்பட்டது ... 11 மாவட்டங்களுக்கு அபாய அறிவிப்பு கிடையாது

கேரளா: ரெட் அலர்ட் வாபஸ்!மின்னம்பலம் :கேரளாவில் பெருமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட, "ரெட் அலர்ட்" எனப்படும் உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக வெளுத்து வாங்கிய பெருமழையால், 14 மாவட்டங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்தப் பெருமழைக்கு இதுவரை 368 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று முதல் மழை சற்று குறையத் தொடங்கியுள்ளது. இதனால், 11 மாவட்டங்களில் நீடித்து வந்த "ரெட் அலர்ட்" எனப்படும் உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் 10 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்" எனப்படும் தீவிர வெள்ள அபாய எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு "மஞ்சள் அலர்ட்" எனப்படும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு
வெள்ளத்துடன் மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன. பாலக்காடு மாவட்டம் நிம்மரா பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்
கேரளாவில் முப்படையினரும் அடங்கிய மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் 40 ஆயிரம் போலீசார், 3,200 தீயணைப்பு வீரர்கள், கடற்படையின் 46 குழுக்கள், 13 விமானப்படை குழுக்கள், 16 கடலோர காவல்படை குழுக்கள், 21 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீட்டுப்பணிகளை இரவும், பகலுமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவியாக 16 ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரின் 79 படகுகள், மீன்வளத் துறைக்குச் சொந்தமான 403 படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளுடன் மீட்புக்குழுவினருக்கு உதவி வருகின்றனர்.
நிவாரணப்பணிகள் தீவிரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுவருகின்றன. கொச்சி கடற்படைத் தளத்தில் உள்ள பொதுச் சமையற்கூடத்தில் ஏழாயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டுப் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. களத்தில் கல்லூரி மாணவர்களும், தன்னார்வலர்களும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: