வியாழன், 23 ஆகஸ்ட், 2018

100 டி.எம்.சி. காவிரி நீர் கடலில் - மேட்டூர் அணையின் மொத்த நீரைவிட அதிகம்

100 டி.எம்.சி. காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது - மேட்டூர் அணையின் மொத்த நீரைவிட அதிகம்
மாலைமலர் : மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. சென்னை: கர்நாடகாவில் உற்பத்தியாகி வரும் காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம்-சீர்காழி இடையேயும் கடலில் கலக்கின்றன.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது. அதன்பிறகு திருச்சி அருகே முக்கொம்பில் தண்ணீரை பிரித்து அனுப்பும் ஒரு அணையும், அதைத் தொடர்ந்து கல்லணையும் உள்ளன.
காவிரியில் அதிக வெள்ளம் வரும்போது, முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் கல்லணையில் இருந்தும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக திறந்து விடப்படும்.


இவ்வாறு திறந்துவிடப்படும் தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை வந்து சேரும். அங்கு ஒரு அணை உள்ளது. அதில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

ஆனால் அதிக அளவில் தண்ணீர் வந்தால் அவை முழுவதையும் கால்வாயில் அனுப்பும் அளவிற்கு போதிய கால்வாய்கள் இல்லை. எனவே அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதுமாக கடலுக்கு செல்வது வாடிக்கை.

தற்போது காவிரியில் தொடர்ந்து அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த தண்ணீரில் பெரும் பகுதி கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 26-ந்தேதியில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வருகிறது. அதேபோல காவிரி ஆற்றில் பூம்புகார் செல்லும் தண்ணீரும் கடலில் கலக்கிறது. இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. அதைவிட அதிமான தண்ணீர் கடலுக்கு சென்றுள்ளது. இப்போது மட்டும் அல்ல இதேபோல பல தடவை அதிக அளவில் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

இதுசம்பந்தமாக அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, 2000-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 385 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும், 2014-ல் 115 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்ததாகவும் கூறினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பருவநிலை மாற்ற மைய முன்னாள் இயக்குனர் நடராஜன் கூறும்போது, 1991-ல் இருந்து 2005 வரை மட்டுமே 1039 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்துள்ளது.



காவிரி டெல்டா பகுதியில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு போதிய வசதிகள் செய்யாததால் 2005-ம் ஆண்டு 300 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்தது. 1991-2005 வரை கடலில் கலந்துள்ள தண்ணீரை கொண்டு சுமார் ரூ.51 ஆயிரம் கோடி அளவிற்கு நெல் உற்பத்தி செய்திருக்கலாம் என்று கூறினார்.

கொள்ளிடத்தில் தேவையான அளவுக்கு சிறு அணைகளையும், தடுப்பு அணைகளையும் கட்டினாலே தண்ணீர் வீணாவதை கட்டுப்படுத்த முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் ஜூன் 1-க்கு பிறகு இதுவரை 270 டி.எம்.சி. தண்ணீர் வந்துவிட்டது. அதாவது 93 டி.எம்.சி. தண்ணீர் அதிகமாக வந்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: