செவ்வாய், 28 அக்டோபர், 2014

வெளிநாட்டு கருப்புபண முழு பட்டியலும் தாக்கல் செய்யவேண்டும் ! உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு !

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் முழுப் பட்டியலையும் நாளைக்குள் (புதன்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது, “நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் மத்திய அரசு மாற்றம் கோரக்கூடாது. முந்தைய உத்தரவில் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது. வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை நாளைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் புதிய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றுமாரு வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்புடையதல்ல. ஏனெனில், இதற்கான உத்தரவு நீதிமன்றத்தில் வெளிப்படையாக பிறபிக்கப்பட்டு அரசும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. நீங்கள் இது குறித்து எதுவும் செய்ய முடியாது. கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய தகவலை முதலில் எங்களிடம் தாக்கல் செய்யுங்கள், அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் தீர்மானிக்கும்.


வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களை நீங்கள் ஏன் பாதுகாக்க வேண்டும்? கருப்புப் பணத்தை மீட்கும் பொறுப்பை அரசிடம் நாங்கள் விட முடியாது.

வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி சிறப்பு விசாரணைக் குழு கவனித்துக் கொள்ளும்” என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக, வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று ஒரு பட்டியல் அளித்தது. அதில், தொழிலதிபர்கள் பிரதீப் பர்மன், பங்கஜ் சிமன்லால் லோதியா, ராதா எஸ். திம்ப்லோ ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: