வியாழன், 30 அக்டோபர், 2014

ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் :முன்னாள் முதல்வர் என்பதிலும் பார்க்க உங்கள் தாத்தா என்று....

முதலில் மணமகளும், அடுத்து மணமகனும் வாழ்க்கை ஒப்பந்தஉறுதி மொழியை இங்கே ஏற்றுக் கொண்ட போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரெல்லாம் எந்த வரிசையிலே
முன்னாள் முதலமைச்சர் என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக...... : 
ராமதாஸ் இல்ல விழாவில் கலைஞர் பேச்சு
 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை:
’’வெள்ளம் போல் குழுமியிருக்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்களே, அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களே, உங்களுடைய இனிய முன்னிலையில் மிகுந்த மகிழ்ச்சியோடும் இரண்டறக் கலந்த அன்புப் பெருக்கோடும் மண விழாவினை நிறைவேற்றிக் கொண்டுள்ள மணமக்களே,  மணமக்கள் உறுதிமொழி ஏற்கும்போது குறிப்பிட்டார்கள் - “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்க ளுடைய வாழ்த்துக்களோடு இந்த மணவிழாவினை நிறைவேற்றிக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
அதிலே ஒரு சிறு திருத்தம். 

“முன்னாள் முதலமைச்சர்” என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக, என்னையும் டாக்டர் ராமதாஸ் அவர்களோடு சேர்ந்து உங்களுடைய தாத்தா என்று அழைத்திருந்தால் நான் மிகுந்த பெருமை அடைந்திருப்பேன். (பலத்த கைதட்டல்) அந்தத் “தாத்தா” என்ற முறையில், இந்தக் குடும்பத்தோடு நீண்ட நெடுநாட்களாக பழகி வருகின்ற நான், தாத்தாவின் ஆசீர்வாதமாக, வாழ்த்துரையாக இன்று மணவிழா மேற்கொண்டுள்ள அன்புச் செல்வங்களாகிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்) 

 இந்த மண விழாவில் மாநிலம் முழுவதுமுள்ள பாட்டாளி பெருமக்கள் (பலத்த கைதட்டல்) தொழிலாளத்தோழர்கள், இங்கே வர முடியாவிட்டாலும், ஆங்காங்கு இருந்தே வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்த்துக்களோடு இணைந்து என்னுடைய வாழ்த்துக்களையும் வழங்குவதிலே மிகுந்த பெருமை 
யடைகிறேன். 

 எனக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும் இன்று நேற்றல்ல - பல ஆண்டுக் காலமாக நெருங்கிய பழக்கம் உண்டு. அவர்களுக்கும் எனக்கும் கோபதாபங்கள் ஏற்பட்டாலும், உறவு முறையிலே இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டாலும், அவர் பால் எனக்குள்ள அன்பும், அவருக்கு என் பால் உள்ள அன்பும் என்றைக்கும் மறைந் ததில்லை. (கைதட்டல்) இரண்டு நாட்களாக என் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால்; அதன் காரணமாக நான் மண விழாவுக்கு செல்ல முடியாவிட்டாலும், முதல் நாளே நீ போய் மணவிழா வரவேற்பில், என்னுடைய வாழ்த்து களையும் இணைத்து, மணமக்களை வாழ்த்தி விட்டு வா என்று தம்பி மு.க. ஸ்டாலினை அனுப்பி வைத்திருந்தேன். (கைதட்டல்) அவர் நேற்று வந்து வாழ்த்தியிருக்கிறார். இன்றைக்கு ஸ்டாலினுடைய தந்தை, நான் வந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறேன். 

மணமக்களுக்கு மங்கல நாண் எடுத்துக் கொடுத்து முதலில் மணமகளும், அடுத்து மணமகனும் வாழ்க்கை ஒப்பந்தஉறுதி மொழியை இங்கே ஏற்றுக் கொண்ட போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரெல்லாம் எந்த வரிசையிலே மணவிழாவினை நடத்த வேண்டும் என்று எண்ணினார்களோ அதை மறவாமல், முதலில் மணமகளும், அடுத்து மணமகனும் தங்களுடைய வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டது, பெரும் மகிழ்ச்சியை எனக்கு அளித்தது. 

 இந்த விழாவினைப் பொறுத்தவரையில் நம்முடைய டாக்டர் அவர்கள் இந்த விழாவிற்கு நான் வர வேண்டுமென்று அழைத்த போது, “நீங்கள் அழைத்தா நான் வர வேண்டும், என்னுடைய பேரன், பேத்தி திருமணத்திற்கு நான் வராமல் வேறு யார் வருவார்கள்” (பலத்த கைதட்டல்) என்று உரிமையோடு சொல்லி, அந்தஉரிமையை நிலைநாட்டுகின்ற வகையில் இன்றைக்கு இந்த மணவிழா மேடையில் - பல்லாயிரக்கணக்கான பாட்டாளி பெருமக்களைச் சந்திக்கின்ற அரிய வாய்ப்பை பெற்றமைக்காக (பலத்த கைதட்டல்) இந்த வாய்ப்பினை அளித்த மணமக்கள் இல்லத்தாருக்கும் , குறிப்பாக என்னுடைய அருமை கெழுதகை நண்பர், சகோதரர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும், தம்பி டாக்டர் அன்புமணிக்கும், அவர்களுடைய குடும்பத்தார் மாத்திரமல்ல; இயக்கத்தார் ஜி.கே. மணி உட்பட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவ்வாறே நன்றி தெரிவித்து மணமக்கள் எல்லா வளமும் பெற்று தமிழ் போல் தழைத்து வாழ்க என்று வாழ்த்தி, நான் விரைந்து வீடு திரும்ப வேண்டிய காரணத்தால் நீங்கள் இடையிலே உங்களை விட்டுப் பிரிந்து இந்த மணவிழாவிலிருந்து செல்ல வேண்டியிருக்கின்ற காரணத்தால் நீங்கள் எல்லாம் என்னை மன்னித்துக் கொள்ள 
வேண்டுகிறேன். 

மணமக்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்ற அந்த அருமையான வாய்ப்பைப் பெற்றமைக்காக, வாய்ப்பளித்த மணமக்கள் வீட்டாருக்கு மீண்டும் மீண்டும் பல முறை நன்றியைச் சொல்லி, உங்கள் அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொள்கிறேன்.nakkheeran,in

கருத்துகள் இல்லை: