புதுடில்லி: சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வதாக, வெளியான தகவலை,
பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது, ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த சேட்டைத்தனமான அறிவிப்பு,
அந்நாட்டின் உளவு அமைப்பு, ராணுவம் ஆகியவற்றின் நெருக்கடி காரணமாக, இந்த
விவகாரத்தில், பாகிஸ்தான் "பல்டி' அடித்திருக்கலாம் என, தகவல்
வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள, பஞ்சாப் மாகாணத்தில், கடந்த 90ம் ஆண்டு, தொடர்
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த
சம்பவத்தில், இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்குக்கு, 49, தொடர்புடையதாக
கூறி, கைது செய்யப்பட்டார். இவருக்கு பாகிஸ்தான் கோர்ட் மரண தண்டனை
விதித்துள்ளது. இந்த தண்டனையை குறைக்கக்கோரி, ஐந்து முறை கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா தரப்பிலும், இது குறித்து பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
விடுதலை: இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி, நேற்று முன்தினம் இரவு, அதிபர் சர்தாரி உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாயின. அவர், விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, பஞ்சாபில் உள்ள சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர், இனிப்பு வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும், இதற்காக பாக்., அதிபர் சர்தாரிக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், அன்று நள்ளிரவுக்கு பின், நிலைமை தலைகீழானது. சரப்ஜித் சிங் தண்டனை குறைப்பு தொடர்பாக வெளியான செய்தியை, பாகிஸ்தான் அரசு மறுத்தது.
குழப்பம்: பாகிஸ்தான் அதிபரின் செய்தி தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் கூறியதாவது: சரப்ஜித் தண்டனை குறைப்பு தொடர்பாக, ஏற்கனவே வெளியான செய்தியில், சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. லாகூரில் உள்ள, கோட்லாக்பத் சிறையில், சுர்ஜித் சிங் என்ற இந்தியரும் அடைக்கப்பட்டுள்ளார். ஜியா-உல்-ஹக் அதிபராக இருந்த போது, இந்திய எல்லைக்கு அருகே, உளவு பார்த்ததாக சுர்ஜித் சிங்கை, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பெனசிர் புட்டோ பிரதமராக இருந்த போது, அவரது பரிந்துரையின் பேரில், அப்போதைய அதிபர் குலாம் இஷாக் கான், சுர்ஜித் சிங்கின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தார். ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின் சுர்ஜித்சிங், 30 ஆண்டு காலம் சிறையில் கழித்து விட்டதால், அவரை விடுதலை செய்யும் படி, அதிபர் சர்தாரி உத்தரவிட்டார். ஆனால், சுர்ஜித் சிங்கிற்கு பதிலாக, சரப்ஜித் சிங்கின் பெயர், தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறு விதமாக செய்தி வெளிவந்துள்ளது. இவ்வாறு பர்கத்துல்லா பாபர் கூறினார்.
அதிர்ச்சி: சரப்ஜித் சிங்கின் விடுதலை தொடர்பான விஷயத்தில், பாகிஸ்தான் அரசு அடித்துள்ள திடீர் பல்டி, இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரும், இதுகுறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளும், இந்த விஷயத்தில், பாகிஸ்தான் அரசு, தன் நிலையை திடீரென மாற்றிக் கொண்டது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளன. அந்த பத்திரிகைகளில், "இந்த விஷயத்தில் தவறு நிகழ்ந்திருப்பதாக பாக்., அரசு தெரிவித்திருப்பது, சர்வதேச அளவிலான ஒரு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த குழப்பம் எங்கே, எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்களை பாக்., அரசு வெளியிடவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியா? இதற்கிடையே, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் நெருக்கடி காரணமாகவே, பாகிஸ்தான் அரசு, சரப்ஜித் சிங் விஷயத்தில், "பல்டி' அடித்துள்ளதாகவும், பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும், அந்த நாட்டு ராணுவமும், இந்த விஷயத்தில், பாகிஸ்தான் அரசுக்கு, நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்றும், சமூக வலை தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பயங்கரவாத அமைப்புகளின் நெருக்கடி காரணமாகவும், இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மும்பை தாக்குதலுக்கு காரணமான, அபு ஜுண்டால் என்ற பயங்கரவாதி, கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், சரப்ஜித் சிங் விஷயத்தில், பாக்., அரசு மேற்கொண்ட நடவடிக்கை, மத்திய அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரப்ஜித் சிங்கை விடுவிக்கும் முயற்சியில், மத்திய அரசு, தோல்வி அடைந்து விட்டதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது.
கிருஷ்ணா வலியுறுத்தல்: சரப்ஜித் சிங் விவகாரம் குறித்து, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: "சுர்ஜித் சிங்கை விடுதலை செய்து, அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை வரவேற்கிறேன். அதேநேரத்தில், 20 ஆண்டுகளாக, சிறையில் இருக்கும், சரப்ஜித் சிங்கை விடுவிக்க வேண்டும் என்று, இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாக்., அதிபர் இதை கவனத்தில் கொண்டு, மனித நேயத்தின் அடிப்படையில், அவரை விடுவிக்க வேண்டும். சரப்ஜித் சிங் மட்டுமல்ல, பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்தியர்களையும், மனித நேயத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும். சரப்ஜித் சிங் விவகாரத்தில், அவரது குடும்பத்தினரின் கவலையை, அரசு உணர்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே வெளியான தகவல், பின் மறுக்கப்பட்டது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. யூகத்தின் அடிப்படையில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.' இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
ஆனந்தம்: பஞ்சாப் மாநிலம், பரித்கோட் மாவட்டம், பிடே கிராமத்தை சேர்ந்தவர் சுர்ஜித் சிங். இவர் விடுதலையாக போகும் செய்தியை கேட்டு, அவரது மனைவி ஹர்பன் கவுர், மகள்கள் பர்மிந்தர் கவுர், ராணிகவுர், மகன் குல்விந்தர் சிங் ஆகியோர் சந்தோஷப்பட்டனர். "தங்கள் கனவு நனவாகி விட்டதாக' அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக