வெள்ளி, 6 ஜூலை, 2012

ஜெ.வை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற அமைச்சர் ஓ.பி.எஸ். சதி அம்பலம்!

viruvirupu.com




“இந்தியாவின் பிரச்னைகள் தீர வேண்டுமானால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆகவேண்டும்” என்று கூறியிருக்கிறார், தமிழக நிதியமைச்சரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். 
இந்தியா சமீப காலமாக பொருளாதாரப் பிரச்னை, பாகிஸ்தானுடன் பிரச்னை, வெளியுறவுக் கொள்கையில் பிரச்னை என பல பிரச்னைகளில் மூழ்கியுள்ளதை, அமைச்சர் பன்னீர் சமீபத்தில் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது.
அதையடுத்தே, பாரத தேசத்தின் நலனுக்காக, அம்மா அவர்களை சலுகை முறையில் டில்லிக்கு வழங்க (விலையில்லாத ஆடு போலவா?) அமைச்சர் பன்னீர்செல்வம் தயாராக உள்ளார். (அவர் டில்லிக்கு போனால், இவர் சென்னையில் முதல்வரா?)
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரானிய எண்ணை இறக்குமதி கொள்கையால் ஏற்பட்டுள்ள பிரச்னை, அமெரிக்க பொருளாதார சீர்குலைவு, ஆகியவற்றை தீர்த்து வைக்க அம்மா அவர்களை அங்கெல்லாம் அனுப்பி வைக்கும் திட்டம் ஏதும் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இல்லை என தெரிகிறது.

இந்தியாவுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. (அதுவும், வரும் நாடாளுமன்ற தேர்தல் வரைதான் செல்லுபடியாகும்)
“தென்ஆசியப் பிராந்தியத்தில் வல்லரசு நாடாக கருதப்படும் இந்தியாவை, ‘ஒரு வழி பண்ணுவதற்கு’ அம்மா அவர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை, அமைச்சர் பன்னீர் அவர்கள் ஐ.நா.வில் பேசும்போதே குறிப்பிட்டார்” என்று நாம் எழுதினால், ஏதோ ஒரு இடத்தில் எழுத்துப் பிழை உள்ளதை நீங்கள் பிடித்து விடுவீர்கள்.
ஆம். பன்னீர் அவர்கள், ‘ஐ.நா.’-வில் பேசவில்லை. ‘தானா’-வில் பேசினார்.
சென்னை புரசைவாக்கம் ‘தானா’ தெருவில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது. அதில் சிறப்பு  பேச்சாளராக நடிகர் ராமராஜன் அழைக்கப்பட்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவை டில்லிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்தார்.
ராமராஜனை எங்கே அனுப்புவது என்பது இன்னமும் முடிவாகவில்லை.
தானா தெரு கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அம்மா அவர்களை டில்லிக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்துக்காக, அ.தி.மு.க. தொண்டர்கள் அயராது பாடுபட்டு, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அ.தி.மு.க.-வே கைப்பற்றுமாறு செய்ய வேண்டும். அதற்கான பணிகளை இன்றே தொடங்குங்கள்” என்று அ.தி.மு.க.-வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் முதல்வர் தொடர்ந்து பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. 22 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி உள்ளது. இப்போது 23-வது வருடம் நடந்து வருகிறது. எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் இவ்வளவு காலம் நாட்டை ஆண்ட சரித்திரம் இல்லை. அதனால்தான் அ.தி.மு.க.-வில் இளைஞர்கள் உறுப்பினராகி வருகிறார்கள்” என்றார்.
23 ஆண்டுகள் ஆட்சி நடத்தினால், ஏன் இளைஞர்கள் ஓடோடி வரவேண்டும் என்பதற்கு, முன்னாள் முதல்வர் விளக்கம் கொடுக்கவில்லை. ஒருவேளை தேனி-பெரியகுளம் ஏரியாவில் இளைஞர்களுக்கு பழைய பொருட்கள்தான் பிடிக்குமோ, என்னவோ.
அத்துடன் விடவில்லை ஓ.பி.எஸ். “நூறாண்டில் வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாட்டு மக்கள் புதுக்கோட்டை தேர்தலில் வெற்றிவாகை சூட்டினார்கள். (அட, நீங்க கொடுத்த பைசாவுக்கு ஓட்டு விழவில்லையா?)
நாட்டு மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகள், என பல்வேறு நல்ல திட்டங்களை செய்து வருகிறார். தமிழகத்தை பார்த்து பிற மாநில முதல்வர்களும் ஆடு, மாடுகளை தேடித் திரிகின்றனர். முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியாவின் சகல பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 நாம் வெற்றி பெற இன்று முதல் உழைக்க வேண்டும்” என்றார் அவர்.
கேட்கும்போதே புல்லரிக்கிறது, இல்லையா? அம்மா பிரதமரானால், வடநாட்டு அமைச்சர்கள் எல்லாம், டில்லி லோச்சபா போர்டிகோவில் ராப்பிச்சைக்காரர்கள் போல கும்பிடு போட்டுக்கொண்டு நிற்கும் காட்சியை, ஒரு கணம் கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள்.
கற்பனை வரவில்லையா. கவலையை விடுங்கள். மேலேயுள்ள படத்தைப் பாருங்கள். அது,  நம்மூரு ….காரர்கள் கும்பிடு போடும் காட்சி.

-விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி

கருத்துகள் இல்லை: