குவஹாத்தி: குடி போதையில் என்னையும், எனது கணவரையும்
தாக்கிய இளைஞர்கள் எனது ஆடையைக் கிழித்தெறிந்தனர். என்னைக் கற்பழிக்கவும்
முயன்றனர். இது மிகவும் அநாகரீகமான தாக்குதல் என்று அஸ்ஸாம் பெண் எம்எல்ஏ
ரூமிநாத் குமுறல் வெளியிட்டுள்ளார்.
அஸ்ஸாமைச் சேர்ந்தவர் டாக்டர்
ரூமி நாத். இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவார். தனது கணவர் ராகேஷ் சிங்
மற்றும் 2 வயது மகள் ஆகியோரைக் கைவிட்டு விட்டு, பேஸ்புக் மூலம் அறிமுகமான
ஜாகிர் உசேன் என்பவரை மணந்து கொண்டு இஸ்லாமுக்கும் மாறி விட்டார்.இது அஸ்ஸாமில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் தற்போது தனது 2வது கணவருன் வலம் வந்து கொண்டிருக்கும் ரூமிநாத், நேற்று கரீம் கஞ்ச் வந்து அங்கு ஒரு ஹோட்டலில் ஜாகிர் உசேனுடன் தங்கியிருந்தார். அப்போது கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
ரூமிநாத்தின் அறைக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்து ரூமி நாத்தையும், அவரது 2வது கணவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலிலிருந்து மீட்கப்பட்ட ரூமிநாத்தும், அவரது 2வது கணவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் குவஹாத்தியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் ரூமிநாத்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது திருமணம் என்பது எனது தனிப்பட்ட விவகாரம். இதில் யாரும் தலையிட உரிமையில்லை. இப்படி ஒரு தாக்குதலை தொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பலர் அத்துமீறி எனது உடலின் பல்வேறு இடங்களிலும் கையை வைத்து சில்மிஷம் செய்தனர். ஆடையை கிழித்தனர். குடிகார இளைஞர்கள் என்னைக் கற்பழிக்கவும் முயன்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் என்னிடம் நடந்து கொண்டனர். இது அநாகரீகமானது.
இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய செயல். என்னைக் கொல்ல நடந்த முயற்சி. முழுக்க முழுக்க அரசியல் சதியே இது என்றார் ரூமிநாத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக