தி.மு.க.-வில் ஒரு வேகத்தோடு சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து
விட்டார்கள். ஆனால், நிரப்பும் நாள் நெருங்க, நெருங்க, வேகம் குறைந்து
விவேகம் தலைதூக்குகிறது. சிறை நிரப்ப தொண்டர்கள் வருவார்கள், ஆனால்
தலைவர்கள் வரணுமே!
தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, ஒரு செட் முன்னாள் அமைச்சர்கள்
போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்கனவே லீவு லெட்டர் கொடுத்து
விட்டார்கள் என்கிறார்கள். “இப்பதானே தலைவரே ‘உள்ளே’ இருந்துவிட்டு
வந்திருக்கேன். கொஞ்ச நாளைக்கு வெளியே இருந்து உடம்பை பாலிஷ் போட்டுவிட்டு,
அடுத்த போராட்டத்துக்கு டாண் என்று வந்திடறேன்”லீவு லெட்டர்கள் வரிசையாக வந்து சேரவே, கருணாநிதி அப்செட்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிடம், “ஜெயிலுக்கு போகலாம் வர்ரிங்களா?” என்று கேட்கும் தைரியம் கருணாநிதி உட்பட யாருக்கும் கிடையாது! வீரபாண்டியாரை கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல், அவர் (குண்டராக) உள்ளேதான் உள்ளார்.
“என்னய்யா இது, தலைவர்களே போராட்டத்தில் குதிக்கா விட்டால், தொண்டர்கள் எப்படி வருவாங்க?” என அறிவாலயத்தில் கருணாநிதி சத்தம் போட, வெளியே சில குரல்கள், “ஆமா.. உங்க குடும்பத்தில இருந்து எத்தனை பேர் சிறை நிரப்ப வர்ராங்க?” என்ற காமென்ட் அடிப்பது, கருணாநிதி காதுகளுக்கு போயிருக்கிறது.
ஆமா.. தலைமைக் குடும்பத்தில் நிலைமை என்ன?
சிறை நிரப்பும் ஆலோசனைக் கூட்டத்துக்கே அழகிரி தலையைக் காட்டவில்லை. “நான் மத்திய அமைச்சர். சிறைக்குப் போக சபாநாயகர் பர்மிஷன் வேணும்” என்கிறார் அவர். சபாநாயகரிடம் பர்மிஷன் கேட்க, முதலில் இவர் ஆங்கில வகுப்புக்கு செல்ல வேண்டும்.
ஸ்டாலின் கண் சிகிச்சை செய்கிறேன் என்கிறார். (அட, என்ன ஒற்றுமை! சசிகலாவும் கண் சிகிச்சையில் உள்ளார்) எதற்கும் இருக்கட்டும் என்று கூலிங் கிளாஸ் அணிந்தே நடமாடுகிறார் அவர்.
கனிமொழி, “சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் பர்மிஷன் கேட்டுப் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார். தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்த ராசாத்தி அம்மாளை கேட்டுப் பார்க்கலாமா…. ஐயகோ, வேண்டாம். வேண்டாம்.
எனவே கருணாநிதி தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறார். “சிறைநிரப்பும் போராட்டத்தில், நானும் கலந்து கொள்ள எனக்கு பேரவா தான். ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ஒதுங்கியிருந்து, ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல. ஒவ்வொரு போராட்டத்திலும் நான் கலந்து கொண்டு, நான் வழியனுப்பப்பட்டிருக்கிறனே தவிர, வழியனுப்புவோனாக என்றைக்கும் இருந்தது இல்லை.
சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்பவனாக நான் அறிவிக்கப்படா விட்டாலும் (யாருங்க அறிவித்தது? நீங்கதானே தலைவரே), தாம்பரம் கூட்டத்தில் நான் கூறியதைப் போல இந்த வரிசையில் நின்று, அது தடைப்பட்டால் அடுத்த வரிசை, அந்த வரிசையும் தடைப்பட்டால் கடைசி வரிசை, அந்த வரிசையிலே கருணாநிதியும் இருப்பான். முதல் வரிசையில் சிறையில் நான் இல்லாவிட்டாலும், என்னுடைய உள்ளமும், உணர்வும் சிறைக்குள்ளே சிறகடித்து உலவிக் கொண்டேயிருக்கும்” என்கிறது அவரது அறிக்கை.
தி.மு.க. தொண்டன், “எந்த வாரிசை சிறை நிரப்ப அனுப்புகிறீர்கள்?” என்று கேட்டதை, “எந்த வரிசையில் சிறை நிரப்ப வருகிறீர்கள்?” என்று காதில் விழுந்ததாக பிரிட்டென்ட் பண்ணுகிறாரே.. அங்கேதான் நிற்கிறார் நம்ம தலைவரு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக