திங்கள், 2 ஜூலை, 2012

சேது சமுத்திர திட்டம்' மாற்று பாதையில் சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தகவல்



 Alternative Route Ram Sethu Not Economical Sc
டெல்லி: ஆதாம் பாலம் (ராமர் பாலம்) வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்செளரி தலைமையிலான குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகளும் சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இன்று இந்தக் குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நரிமன் தாக்கல் செய்தார்.
அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பச்செளரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சேது திட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க 8 வார கால அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை: