சென்னை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான பணம் சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாண்டிய மன்னர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி ஜமீன். ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஜமீனுக்கு சொந்தமான பல சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து சிவகிரி ஜமீனான செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஏராளமான சொத்துகளுக்கு அவர் உரிமையாளர் ஆனார். பின்னர் அந்த சொத்துகளில் பல அவரது வாரிசான வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியாருக்கு சொந்தமாகின.
அதன் பின்னர் வரகுணராம பாண்டிய தம்பியாரின் சட்டபூர்வமான வாரிசு நான்தான் என்று கூறி எஸ்.கே.ஜெகநாதன் என்பவர் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். எனினும் நான்தான் உண்மயான வாரிசு என்று கூறி திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த பத்மினி ராணி அந்த வழக்குகளில் பிரதிவாதியாகச் சேர்ந்துள்ளார்.
இவை நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் பல ஊர்களில் பரவிக் கிடப்பதாகவும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் பல சொத்துகள் உள்ளதாகவும், சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான எல்லா சொத்துகளையும் அடையாளம் கண்டு, அதனை வரகுணராம பாண்டிய சின்னதம்பியாரின் சட்டபூர்வ வாரிசான தன்னிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி பத்மினி ராணி ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி. ஜோதிமணி, எம். துரைசாமி ஆகியோர் முன்னிலையில் கடந்த ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகிரி ஜமீன் சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுவிஸ் வங்கியில் முதலீடு
இதன்படி மாநில காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஒருவரைக் கொண்டு தமிழக அரசு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் அறிக்கை கடந்த ஜூலை 2-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில், சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் பல இடங்களில் உள்ளன. இது தவிர சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான பணம் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியிலும் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வங்கிக் கணக்கு தொடர்பான பொது அதிகாரத்தை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காசினா என்பவர் பெற்றிருந்தார். காசினா மும்பையைச் சேர்ந்த மாயா என்ற பெண்ணை திருமணம் செய்தவர் ஆவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மும்பைக்காரருக்கு அதிகாரம்?
இதற்கிடையே அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் வித்யா என்ற பெண் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரானார். சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காசினா சாலை விபத்தில் இறந்து விட்டார். நான் அவரது மனைவியான மாயாவின் தங்கை. சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான பணம் சுவிஸ் வங்கியில் இருப்பது தொடர்பான பொது அதிகாரம் தற்போது எங்களிடம்தான் உள்ளது. ஆகவே, அந்த சொத்துகளில் எங்களுக்குதான் உரிமை உள்ளது என்றார்
இதனைத் தொடர்ந்து வெளிநாடு உள்பட சிவகிரி ஜமீனின் சொத்துகள் பல இடங்களில் பரவிக் கிடப்பதால் இதுபற்றி விரிவான விசாரணை நடத்தும் வகையில் இந்த விவகாரத்தை ஆராயும் பொறுப்பினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி நீதிதிகள் உத்தரவிட்டனர். மேலும், பாண்டிய மன்னர்களின் வாரிசுகளின் பணம் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த எந்த வங்கியிலாவது முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக