சாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த
ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க ‘தீயா’
வேலை பார்க்கிறது
பன்னாட்டு விமான நிலையங்கள் இல்லாத மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணம் செலுத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் கடை விரிக்கலாம்.
மற்ற ஓட்டல் பார்களிலும் கிளப்புகளிலும் மது பரிமாறும் நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என்று இருந்தது நள்ளிரவு 12 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இரவு, பகல் 24 மணி நேரமும் பன்னாட்டு விமானங்களில் வந்து சேர்ந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுக்கிறார்கள். நள்ளிரவில் வரும் விருந்தினர்கள் மது அருந்த முடியாத நிலை இருந்தது. அவர்களுக்கு விடுதியின் மற்ற வசதிகள் எல்லா நேரமும் கிடைத்தாலும் மது பரிமாறப்படுவது மட்டும் இரவு 11 மணி வரை தான் அனுமதிக்கப்பட்டு வந்தது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் ஓட்டல் தொழில் பாதிப்பதாகவும் நட்சத்திர ஓட்டல்கள் தரப்பில் முறையிட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுளது” இவ்வாறு ‘விருந்தினர்களை’ உபசரிப்பதில் தமிழினின் தொல் பெருமையை அரசு பேணுகிறது.
இந்த ஆணையை ஓட்டல் துறையினர் பொதுவாக வரவேற்றாலும், பார்களுக்கான கட்டண உயர்வு தங்களை அதிகம் பாதிப்பதாக ஐந்து நட்சத்திர விடுதிகள் அல்லாத விடுதி முதலாளிகள் புலம்பியுள்ளனர். ‘ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டணம் இரண்டு மடங்காக்கப்பட்டு பார் செயல்படும் நேரமும் இரண்டு மடங்காகியிருக்கிறது. மற்றவர்களுக்கு கட்டணம் ஒன்றரை மடங்காக்கப்பட்டு பார் செயல்படும் நேரம் ஒரு மணி நேரம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று இழைக்கப்பட்ட அநியாயத்தை சுட்டிக் காட்டி கொதிக்கிறார்கள்.
வரி வருமானத்தை பெருக்குவதுதான் அரசின் நோக்கம் என்று நாம் இதை நினைத்து விடக் கூடாது. “கூடுதல் வருமானத்துக்காக இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை, இரவு நேரங்களில் நகரங்களுக்கு வந்து சேரும் பன்னாட்டு பயணிகளுக்கு தரமான மது கிடைக்கச் செய்வதுதான் அரசின் நோக்கம்” என்று ஒரு அதிகாரி தெளிவுபடுத்தியிருக்கிறார்.
“அதிதி தேவ பவோ – விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்’ என்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலனில் அரசு நிர்வாகம் வைத்திருக்கும் அக்கடறை மெய் சிலிர்க்க வைக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் விழிப்பாக இருந்து இரவெல்லாம் கண் விழித்து பெற வேண்டிய சேவைகள் பல இருக்கின்றன. 20 லிட்டர் தண்ணீருக்கு 25 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை கொடுத்து வாங்க முடியாத பெரும்பான்மை உழைக்கும் மக்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் வரும் குழாய்களுக்கு முன்பு தண்ணீர் குடங்களுடன் காத்திருந்து எந்த நேரமானாலும் பிடித்துக் கொள்ள வேண்டும். அங்கு இந்த 24/7 சேவை இல்லை.
மின்சார சேவை கூட தமிழ் நாட்டு மக்களுக்கு 24/7 கிடைப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஒரு நாளைக்கு சில மணி நேரம் விடுமுறை விட்டுதான் மின்சாரம் வழங்குகிறார்கள். அதனால் என்ன, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 24 மணி நேரமும் மது பரிமாற ஏற்பாடு செய்து விட்டார்கள் என்ற பெருமைதான் முக்கியமானது.
நாட்டின் குடிமக்களுக்கு உயிர் வாழும் உரிமை, வேலை செய்யும் உரிமை இவற்றை வழங்க வேண்டிய பொறுப்புடைய அரசு, மேட்டுக் குடியினரின் வாழ்க்கையில் இருக்கும் சின்னச் சின்ன எரிச்சல்களை நீக்குவதில்தான் முனைப்பாக இருக்கிறது. வெளிநாட்டுக் காரர்களுக்காக, எதையும் செய்யத் தயாராக இருப்பது ஐரோப்பியர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வர ஆரம்பித்த போதே இருந்து வரும் அடிமைத்தன இயல்புதான்.
வெளிநாட்டு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், புதிய தொழிற்சாலைகளிலும் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் போது, அங்கு வேலை பார்க்க வரும் வெளிநாட்டவருக்கு எந்த குறையும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டு உணவகங்கள், மது அருந்தும் பார்கள், இரவு விடுதிகள், இதர கேளிக்கை மையங்கள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தனியாக டீல் போட்டுக் கொண்டு அவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். வெளி நாட்டவர் வசிப்பதற்காக சிறப்பு குடியிருப்புகள் கட்டுகிறார்கள்.
இது வெளிநாட்டவருக்கு மட்டுமின்றி உள்ளூர் மேட்டுக் குடி மக்களுக்கும் பலனளிக்கும். “இரவில் வெகு நேரம் வேலை செய்யும் வாடிக்கையாளர்கள் இப்போது குடிப்பதற்கு வசதி ஏற்பட்டுள்ளது. கூடுதல் ஒரு மணி நேரம் கிடைப்பதால் மதுவை ஒரே மடக்கில் விழுங்கி விடாமல் நிதானமாக குடித்து விட்டு போகலாம்” என்று ஒரு ஓட்டல் உரிமையாளர் சொல்கிறார். அடுத்த கட்டமாக டாஸ்மாக் எலைட் பார்களுக்கும் இந்த நேர நீட்டிப்பு வழங்கப்பட்டு விடலாம்.
ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ளூர் பிரபுக்களும், அவர்களின் வாரிசுகளும், வெளிநாட்டு கனவான்களும் இரவெல்லாம் குடித்து கும்மாளமிடலாம். கும்மாளம் முடிந்ததும் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களில் ஏறி தமது வேலி போட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு (Gated Community) போய் விடலாம். அழுக்கான உழைக்கும் மக்களை எதிர் கொள்ளாமலேயே தமது புனித வாழ்க்கையை பராமரித்துக் கொள்ளலாம்.
இதுதான் ஆளும் வர்க்கத்துக்கு துணை போகும் இன்றைய ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சாதிக்கப் போகும் உலகம். அது மன்மோகன் சிங்காக இருந்தாலும் சரி, நரேந்திர மோடி, ஜெயலலிதா, கருணாநிதியாக இருந்தாலும் சரி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் இருக்கும் பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவி புரிவதுதான் அவர்களின் சேவை.
_________________________________
- செழியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக